இரண்டு நாட்களாக இயங்கலையில் நேரலையில் களை கட்டியிருந்த கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு இன்று மாலையுடன் இனிதே நிறைவு பெற்றது.
மாநாட்டுக் குறிப்புகள்:
1) திறமூலத் தமிழ் நிரல் தொகுப்பில் தொடங்கிய அமர்வுகள், தமிழ் இணையக் கல்விக் கழக அமர்வில் நிறைவடைந்தன. மொத்தம் பதினோரு அமர்வுகள்.
2) ஒவ்வோர் அமர்வும் தித்திக்கும் தேனாக இருந்தது. நேரலையில் கவனித்த தமிழ் மக்களுக்குத் திகட்டத் திகட்ட தொழில்நுட்பப் பகிர்வுகள் இருந்தன.
3) தமிழிலேயே நிரல் எழுதும் எழில் பற்றிய அமர்வு, தொடக்க நிலை நிரலர்களுக்கு வழிகாட்டும் பைத்தான் அமர்வு, ஆண்டிராய்டு செயலியை நேரலையிலேயே செய்து காட்டிய அமர்வு, இயந்திரக் கற்றலின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டும் அமர்வு என முதல் நாள் அமர்வுகள் அமைந்திருந்தன.
4) முதல் நாளின் நிறைவில் தமிழா குழுவின் பொறுப்பாளர் முகுந்த்ராஜ் அவர்களின் முதன்மையுரை முத்தாய்ப்பாய் அமைந்தது.
5) இரண்டாம் நாள் நிகழ்வுகள், தமிழ்க்கணினி வல்லுநர்கள் நன்கறிந்த முன்னேர் (முன் ஏர் தான் – முன்னோர் என்று தப்பாக வாசிக்காதீர்கள்!) “ஆமாச்சு” இராமதாஸ் அவர்களின் முதன்மையுரையுடன் தொடங்கியது.
6) தமிழாய்ந்த தமிழர்கள், தொழில்நுட்பத்தை எப்படித் தமிழாக்க முடியும் என்று சொல்லும் “நுட்பம் நம் தாய்மொழியில்” அமர்வு, இயற்கை மொழி ஆய்வு அமர்வு, தெசரெக்ட் எழுத்துணரி ஆய்வு பற்றிய அமர்வு, இயற்கை மொழி பகுப்பு குறித்த அமர்வு, இணையப்பாதுகாப்பு அமர்வு, விக்கித்தரவு அமர்வு, தமிழ் இணையக் கல்விக்கழக அமர்வு ஆகியன இருந்தன.
7) இயங்கலையில் நடந்த அமர்வுகள் எப்படி இருந்தன என்பது பற்றி இரண்டு நாட்களும் கலந்து கொண்ட பேராளர்களிடம் கருத்து கேட்ட ஒழுங்கு, மாநாடு நடத்துபவர்கள் எவ்வளவு திறந்த மனநிலையுடன் தங்கள் செயல்பாடுகளைச் “சமன் செய்து சீர்தூக்கும் கோல்” ஆக இருந்து அணுகுகிறார்கள் என்பதைப் பறை சாற்றியது.
8) நிறைவுரை ஆற்றிய மாநாட்டுத் தலைவர் இளந்தமிழ், மாநாட்டை வெற்றியாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
9) மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் பங்கேற்றார்கள்.
10) பங்கேற்பாளர்கள் வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு இடங்களில் இருந்து பங்கேற்றாலும் ஒவ்வொரு நிகழ்வும் சரியான நேரத்திற்கு நேர்த்தியாகத் தொடங்கிச் சரியான நேரத்தில் நிறைவடைந்தது.
மாநாட்டுத் தீர்மானங்கள்:
1) தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கட்டற்ற தொழில்நுட்ப மாநாடு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.
2) ஒவ்வொரு மாநாட்டுச் சமயத்திலும் அடுத்த ஆண்டுக்கான கட்டற்ற தொழில்நுட்ப வெளியீட்டுக்கான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.
3) கட்டற்ற மென்பொருள் மேம்பாட்டாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
4) கட்டற்ற மென்பொருள் சார்ந்த நிகழ்ச்சிகள் அதிகமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
5) கட்டற்ற மென்பொருள் மின்னஞ்சல் குழுக்களை ஒருங்கிணைத்து கட்டற்ற மென்பொருள் தகவல்களைப் பகிர்தல் வேண்டும்.
6) தமிழாக்கப்பட்ட கட்டற்ற தொழில்நுட்பங்கள், கட்டற்ற மென்பொருட்கள் பயன்படுத்தும் பயனர்களையும் தன்னார்வலர்களையும் அதிகமாக்க உழைக்க வேண்டும்.
இதையும் செய்திருக்கலாமே!
1) ஒவ்வோர் அமர்விற்கும் இடையே பத்து / பதினைந்து மணித்துளிகள் இடைவெளி கொடுத்திருக்கலாம்.
2) பைத்தான் அமர்வு, ஆண்டிராய்வு அமர்வு ஆகியவற்றைப் போல, பயிற்சிப்பட்டறை அமர்வுகளைக் கூட்டியிருக்கலாம். அவை பேராளர்களை மாநாட்டு நாளிலேயே பங்கேற்பாளராக மாற்றியிருக்கும். (ஆசைக்கு அளவில்லையா என்று நினைக்கிறீர்களா!)
3) கட்டற்ற மென்பொருளுக்குத் தொண்டாற்றியிருக்கும் அறிஞர்களை இடையிடையே (அமர்வு இடைவெளிகளின் போது) பேசச் சொல்லியிருக்கலாம். புதியவர்களுக்கு அவர்களின் அனுபவங்கள் நல்ல வழிகாட்டிகளாக இருந்திருக்கும்.
4) பிளெண்டர், லிப்ரேஓபிஸ், ஓப்பன்போர்டு போன்ற பயனுள்ள கட்டற்ற மென்பொருட்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி கால்மணிநேர நேரலை பயிற்சிப்பட்டறைகளைச் சேர்த்திருக்கலாம்.
5) இந்த முறை கட்டற்ற தொழில்நுட்ப மாநாட்டைத் தவிர்க்க முடியாத சூழலில் (ஜிட்சி, 8×8, பிக் பிளூபட்டன் போன்ற கட்டற்ற மென்பொருட்களில் இருந்த சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக), தனியுரிம மென்பொருளாகிய ஜூம் பயன்படுத்த வேண்டிய இக்கட்டான நிலை இருந்தது. இன்னும் அடுத்த மாநாட்டுக்கு நேரம் இருப்பதால் கட்டற்ற மென்பொருளை இயங்கலை வகுப்புகளுக்குப் பயன்படுத்தும் உறுதியையும் அதற்குரிய ஆராய்ச்சியையும் விரைவுபடுத்த வேண்டும்.
மாநாட்டின் மொத்தக் காணொளிகளையும் பார்க்க: www.youtube.com/playlist?list=PLZamWoVO1z_w67TpLGCQi_2VQANX4KNBe
“ஒன்று பட்டால்உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தால்பின் நமக்கெது வேண்டும்?”
– பாரதியார்
– கி. முத்துராமலிங்கம், muthu1809@gmail.com