உங்கள் மொபைல் போனை இயற்பியல் ஆய்வுக்கூடமாக மாற்றுங்கள் | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள்: 8

பல்வேறு விதமான, கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் தொடர்பாக நம்முடைய கட்டுரைகளில் பார்த்து வருகிறோம்.

ஆனால், நம் வழக்கமாக பார்க்கக்கூடிய ஆண்ட்ராய்டு செயலிகள் அனைத்துமே, ஏற்கனவே இருக்கக்கூடிய செயலிகளின் மாற்று வடிவமாகவே இருக்கும்.

அதாவது, ஏற்கனவே விளம்பரத்துடன் கிடைக்க கூடிய செயலிகளை, விளம்பரம் இன்றி பயன்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கும்.

புதியதாக, நவீனத்துவமாக செயலிகளை காண்பது கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

மொபைல் போன்களின் ஆதிக்கம் தொடங்கிய காலத்தில், symbian போன்ற இயங்குதளங்களில் வெளியான மொபைல் போன்களில், நகைச்சுவைக்காகவே பல செயலிகளும்(spoof apps) காணப்பட்டன.

அதாவது, இந்த செய்தியை நிறுவினால் உங்களுடைய மொபைல் போனை நேரடியாக சூரிய ஒளியில் சார்ஜ் செய்யலாம்!உங்களை சுற்றி இருக்கும் பொருட்களை எக்ஸ்ரே தொழில்நுட்பத்தில் பார்க்கலாம்!என கேளிக்கைக்காக இதுபோன்ற செயலிகள் உருவாக்கப்பட்டன.

இந்த செயலிகளால் உண்மையில் எதையுமே செய்ய முடியாது! என்பதுதான் நிதர்சனமாக இருந்தது.

ஆனால், இயற்பியல் துறையில் பயன்படுத்தப்படக்கூடிய உயரிய பல கருவிகளையும் உங்களுடைய மொபைல் ஃபோனிலேயே பயன்படுத்த முடியும்! என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

உங்களை சுற்றி இருக்கும் ஒளி அளவை கண்டறியும் லக்ஷ்மீட்டர் (lux meter), காந்தப்புலத்தை கண்டறியும் கருவி, முடுக்கத்தை கண்டறியும் கருவி, ஒலி அளவை கண்டறியும் கருவி, தனி ஊசலின் நேரத்தை கண்டறியும் கருவி என விதவிதமான கருவிகள் ஒரே செயலிக்குள் பொதிந்து இருக்கின்றன.

பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள என்னுடைய மொபைல் போனிலேயே, கிட்டத்தட்ட அனைத்து கருவிகளும் சரியாக வேலை செய்கின்றன.

ஆனால், இந்த ஒவ்வொரு கருவிகளையும் தனியாக வாங்கும் போது பல லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருப்பதை கவனிக்க முடிகிறது.

அதற்காக, ஆய்வு கூடத்தில் இருந்து வரும் முடிவுகளுக்கு ஒப்பானதாக இந்த முடிவுகள் அமைந்து விடும் என்று பொருள் அல்ல.

ஆனால், நீங்கள் மிகப்பெரியதாக நினைக்கக்கூடிய பல செயல்பாடுகளையும் செய்யக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டு இருக்கும்! ஒரு கையடக்க கணிப்பொறி தான், உங்கள் கைகளில் இருக்கும் மொபைல் போன், என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்! என்பதற்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் மொபைல் போனில் இருக்கக்கூடிய, உணர்விகளின்(sensor) பயன்பாடுகளை இந்த செயல்களின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

இயற்பியலின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தால், நிச்சயம் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.

ஆண்ட்ராய்டு மட்டுமல்ல! ios இயங்குதளத்திற்கும் இந்த செயலி கிடைக்கிறது.

தளத்திற்கான இணைப்பு மட்டும் கீழே வழங்குகிறேன்.

phyphox.org

Phyphox என அறியப்படும் இந்த செயலி ஜெர்மனியின் RWTH aachen பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் ஒரு சிறந்த கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி உடன் சந்திப்போம்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

%d bloggers like this: