மன்னரிடம் நெல்மணிகள் கேட்ட கதையில் வென்றது மோகனா? மன்னரா? கண்டுபிடித்து விட்டீர்களா? மோகன் தான் எனக் கண்டுபிடித்திருப்பீர்கள்.
முதல் சதுரத்திற்கு ஒரு நெல்மணி, இரண்டாவது சதுரத்திற்கு இரண்டு நெல்மணி, மூன்றாவது சதுரத்திற்கு நான்கு நெல்மணி என அறுபத்து நான்குக் கட்டங்களுக்கும் கண்டுபிடித்தால் மொத்தம் 18,446,744,073,709,551,615 நெல்மணிகள் தேவைப்படும். இந்த நெல்மணிகளை எடுத்து வைக்க மட்டுமே மன்னருக்கு சூரியனின் தொலைவு போன்று இரண்டு மடங்கு தேவைப்படும்.(நன்றி: செயல்வழிக் கணிதம், அரவிந்த் குப்தா) இதை எப்படி மன்னரால் கொடுக்க முடியும்? எனவே, மோகனின் கணித அறிவு அவரை வெற்றியாளராக்கியது என்பதை உணர்ந்திருப்பீர்கள். சரி இதை எப்படிப் பைத்தானில் நிரலாகச் செய்வது?
1. மொத்தம் எத்தனை கட்டங்கள்? அறுபத்து நான்கு
2. ஒவ்வொரு கட்டத்திலும் இருக்கும் நெல்மணிகளின் எண்ணிக்கை என்ன? முதல் கட்டத்தில் ஒன்று, இரண்டாவது கட்டத்தில் இரண்டு, மூன்றாவதில் நான்கு, என இரண்டின் மடங்குகளாகப் பெருகுகின்றன.
3. இவற்றின் படி, முதல் கட்டத்தில் தொடங்கி அறுபத்து நான்கு கட்டங்களுக்கு நகர வேண்டும். சரி தானே!
This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters.
Learn more about bidirectional Unicode characters
நெல்மணி = 1 #முதல் கட்ட நெல்மணி | |
கட்டம் = 1 #முதல் கட்டத்தில் இருந்து நெல்மணிகள் கூடத் தொடங்குகின்றன. | |
while கட்டம்<=64: | |
print(கட்டம், " ஆவது கட்டத்திற்கான நெல்மணி ", நெல்மணி) | |
நெல்மணி = 2**கட்டம் # ** என்பது பைத்தானில் அடுக்கைக் குறிக்கும் | |
கட்டம்+=1 | |
else: | |
print("கடைசியில் ", நெல்மணி) |
சரி, இப்போது இன்னொரு கதை சொல்லட்டுமா?
வியன் என்றொரு சிறுவன். மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் பள்ளிக்கூடத்திற்குப் போகும் போது தின்பண்டங்கள் வாங்க வேண்டும் என்பது அவனது நீண்ட நாளைய ஆசை. அவனுடைய அப்பாவிடம் போய், ‘பள்ளிக்கூடத்திற்குப் போகும் போது தின்பண்டங்கள் வாங்கித் தின்ன வேண்டும் என எனக்கு ஆசையாக இருக்கிறது. இன்னும் பத்து நாட்கள் தாம் பள்ளிக்கூடம் இருக்கிறது. எனவே ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய் கொடுப்பீர்களா?” என்று கேட்கிறான்.
‘ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்குத் தின்பண்டமா?’ என்று அவன் அப்பா யோசிக்கிறார். யோசித்து, ‘ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய் என்பது அதிகமாகத் தெரிகிறதே!’ என்கிறார். ‘ஐந்து ரூபாய் அதிகம் என்றால், நான் இன்னொரு வழி சொல்கிறேன் அப்பா! முதல் நாள் ஒரு ரூபாய், இரண்டாவது நாள் இரண்டு ரூபாய், மூன்றாவது நாள் மூன்று ரூபாய், என்று பத்து நாளும் கொடுங்கள்’ என்கிறான் வியன். அப்பாவுக்குப் பையனின் அறிவுக்கூர்மையை நினைத்து வியப்பு! ‘வியன் என்னும் பெயருக்கு ஏற்ப நம்மை வியக்க வைக்கிறானே!’ என்று நினைத்துக் கொண்டே, ‘சரி! அப்படியே செய்யலாம்’ என்கிறார்.
நீங்கள் சொல்லுங்கள், வியனின் முதல் திட்டத்தில் அப்பாவுக்குச் செலவு அதிகமா? இரண்டாவது திட்டத்தில் செலவு அதிகமா? சிந்தித்து வைக்கிறீர்களா? அதையே பைத்தான் நிரலாக அடுத்த பதிவில் செய்து விடுவோம்!
– கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை.