திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – பைத்தான் 29

பைத்தான்: வா நந்தா வணக்கம்!
நந்தன்: வணக்கம், பைத்தான்!
பைத்தான்: என்னப்பா! போன பதிவுக்குப் போட்ட அதே தலைப்பையே இப்பவும் கொடுத்திருக்க? தூக்கக் கலக்கமா?
நந்தன்: தூக்கக் கலக்கமெல்லாம் இல்லை! தெரிஞ்சு தான் கொடுத்திருக்கேன்.
பைத்தான்: அப்படியா?
நந்தன்: ஆமா!
பைத்தான்: அதென்ன திரும்ப வந்திட்டேன்னு சொல்லு?
நந்தன்: வாழ்க்கைல, நம்ம செய்ற எல்லா வேலைக்கும் ஏதாவது கிடைக்கனும்னு
எதிர்பார்க்கக் கூடாதில்லையா?
பைத்தான்: என்ன கேட்கிற, புரியலயே! ஏதோ கோவில் வாசல்ல நின்னு ஏமாந்த மாதிரி தெரியுது?
நந்தன்: சேச்சே! அதெல்லாம் இல்லை! என் பெயரைப் பற்றி உனக்குத் தெரியாதா?
பைத்தான்: தெரியாதே!
நந்தன்: என்னப்பா! உன் பெயரைப் பற்றி நான் தெரிந்து வைத்திருக்கிறேன். என் பெயரின் வரலாறு தெரியாமல் இருக்கிறாயா?
பைத்தான்: சரி, சரி, கோபப்படாதே! சொல்லு! கேட்டுக்கிறேன்!
நந்தன்: நான் கோவில் வாசல்ல போய் நின்னு, சாமி கும்பிடனும்னு நினைச்சா, நந்தியே விலகி வழி விடும். அவ்ளோ பெரிய பேர் என்னோடது!
பைத்தான்: ஓ! தெரியும் தெரியும்!
நந்தன்: என்ன தெரியும் தெரியும்?!
பைத்தான்: தெரியுமப்பா! உன்னோட பவரும் எனக்குத் தெரியும்! சிதம்பரத்தில் நீ வந்த, தெற்கு வாசல் மூடப்பட்டிருக்கும் கொடுமையும் தெரியும்! போதுமா!
நந்தன்: ஓ! தெரியுமா? அப்ப, சரி!
பைத்தான்: சரி, அப்படியே தலைப்பை மறந்திடாதே! திரும்பி வர்றதுன்னு ஏன் சொன்னாய்?
நந்தன்: விளக்கமாச் சொல்லிடறேன்.

வாழ்க்கையில் நாம செய்ற ஒவ்வொரு வேலைக்கும் ஏதாவது கிடைக்கனும்னு எதிர்பார்க்கக்கூடாது. இப்போ, நீங்க கொஞ்ச நேரம் டிவி பார்க்கிறீங்கன்னு வச்சுக்குவோம், டிவி பார்க்கிறதுங்கிறது ஒரு வேலை தான்! ஆனால், அது ஒரு பொழுதுபோக்கு, அதில் பெரிசா நமக்கு எதுவும் கிடைச்சிடாது. அதுவே, நீங்க – ஒரு சின்ன மரக்கன்று நட்டு வைக்கிறீங்கன்னு வச்சிக்குவோம், கொஞ்ச நாள்ல அந்த மரம் – உங்களுக்குப் பூ, காய், கனி, நிழல்னு நிறைய தரலாம். இதைத் தான் சொல்றேன் – சில வேலைகள்ல நாம செய்த வேலைக்கு எதாவது கிடைக்கும்! சில நேரங்கள்ல கிடைக்காது!

பைத்தான்: இதை ஏன் இப்போ சொல்றே?
நந்தன்: சொல்றேன், சொல்றேன்.
இப்போ, நாம பேசின இரண்டு வேலைகளிலுமே நாம ஏதோ ஒரு வேலையைச் செஞ்சிருக்கோம். முதல் வேலைல, டிவி பார்க்கிறது, இரண்டாவதுல – மரம் நடுறது. இரண்டிலுமே, இங்கே வேலை நடந்திருக்கு. ஆனால், ஒன்னுல வெளியீடா(output) – வெளியே ஒன்னுமே கிடைக்கல, இன்னொன்னுல, பூ, காய், பழம், நிழல்னு வெளியே கிடைச்சிருக்கு! இப்படிச் சில வேலைகளில் வெளியீடு வெளியே வருகிறது, சில வேலைகளில் வெளியீடு, வெளியே தெரிவதில்லை – இதைப் பைத்தானில் எப்படிச் செய்வார்கள் என்பதைத் தான் சொல்லப் போகிறேன்.
பைத்தான்: அருமை! சொல்லுப்பா! ஏதாவது கேள்விகள் இருந்தால் சொல்கிறேன்.
நந்தன்: நன்றி, பைத்தான்! ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளு!
பைத்தான்: ஓ! சரி சரி!
நந்தன்: இப்போ சில பொருட்களை ஒன்றாகச் சேர்த்துச் சர்க்கரைப் பொங்கல் சமைக்க வேண்டும் என நினைத்துக் கொள்வோம். என்னென்ன பொருட்கள் அதற்கு வேண்டும்?
பைத்தான்: பச்சரிசி, வெல்லம், நீர்
நந்தன்: சரியாகச் சொன்னாய்! இந்த மூன்றையும் ஒவ்வொன்றாக, ஒரு செயற்கூற்றில் கொடுக்க வேண்டும்.
பைத்தான்: உனக்குச் செயற்கூறு(Function) இன்னமும் நினைவில் இருக்கிறதா?
நந்தன்: ஓ! நன்றாக! அதை வைத்து இப்போ நிரல் எழுதப் போகிறேன்.


def சர்க்கரைப்பொங்கல்_வைப்போம்(அரிசி_அளவு, சர்க்கரை_அளவு, நீர்_அளவு):
print('சர்க்கரைப் பொங்கல் வைக்கப் போகிறோம்')
print('அரிசி', அரிசி_அளவு)
print('சர்க்கரை', சர்க்கரை_அளவு)
print('நீர்', நீர்_அளவு)

இந்தச் செயற்கூற்றை(Function)ஐக் கூப்பிடுவோமா?

சர்க்கரைப்பொங்கல்_வைப்போம்(500,300, 2000)

(குறிப்பு: 1000, 500, 4000 – ஆகியன கிராம் / மில்லி லிட்டர் எனக் கொள்க.)

இப்போ, நாம சர்க்கரைப் பொங்கல் வச்சிட்டோம்.
பைத்தான்: ஆமா, வச்சிட்டோம்! சாப்பிடுவோமா?
நந்தன்: அது தான் முடியாது!
பைத்தான்: ஏன், அவ்ளோ மோசமா இருக்குமா?
நந்தன்: அதைச் சொல்லலை நண்பா, சர்க்கரைப் பொங்கல் வச்சோம். எப்படி எடுத்துச் சாப்பிடறது? வச்ச பொங்கலை நமக்கு எடுத்துக் கொடுக்கனும். அதை நாம ஒரு தட்டில் வாங்கனும். பிறகு தானே சாப்பிடனும்?
பைத்தான்: ஆமா! அப்போ கொடுக்கச் சொல்லு!
நந்தன்: சரியாச் சொன்னே! இப்போ, ‘சர்க்கரைப் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களை உனக்குத் தந்தேன். நீ எனக்கு சர்க்கரைப் பொங்கலாத் திருப்பித் தா’ன்னு பைத்தான் கிட்ட சொல்லனும்.
பைத்தான்: எப்படிச் சொல்லனும், தெரியுமா?
நந்தன்: தெரியும்!


def சர்க்கரைப்பொங்கல்_வைப்போம்(அரிசி_அளவு, சர்க்கரை_அளவு, நீர்_அளவு):
print('சர்க்கரைப் பொங்கல் வைக்கப் போகிறோம்')
print('அரிசி', அரிசி_அளவு)
print('சர்க்கரை', சர்க்கரை_அளவு)
print('நீர்', நீர்_அளவு)
பொங்கல் = அரிசி_அளவு + சர்க்கரை_அளவு + நீர்_அளவு
return பொங்கல்

மேல, கடைசி இரண்டு வரிகளைக் கவனிங்க! நாம கொடுத்த உள்ளீடுகளை(அதான், அரிசிஅளவு, சர்க்கரைஅளவு, நீர்_அளவு) ஒன்னாச் சேர்த்து பொங்கல் -ங்கிற பேர்ல சேமிச்சிருக்கோம். அந்தப் பொங்கலைத் திருப்பிக் கொடுன்னு சொல்றது தான், அடுத்த வரி – return பொங்கல்.

பைத்தான்: அட்டகாசம்! எனக்கே பைத்தான் சொல்லிக் கொடுப்ப போல இருக்கே! இப்போ இங்கே ஒரு கேள்வி கேட்கட்டுமா?
நந்தன்: சொல் நண்பா!
பைத்தான்: return பொங்கல்னு நீ கொடுத்திருக்கிறாய் அல்லவா? அது எங்கே போய், பொங்கலைக் கொடுக்கும்?
நந்தன்: எங்கே இருந்து நம்ம கேட்கிறோமோ அங்கே கொடுக்கும்.


def சர்க்கரைப்பொங்கல்_வைப்போம்(அரிசி_அளவு, சர்க்கரை_அளவு, நீர்_அளவு):
print('சர்க்கரைப் பொங்கல் வைக்கப் போகிறோம்')
print('அரிசி', அரிசி_அளவு)
print('சர்க்கரை', சர்க்கரை_அளவு)
print('நீர்', நீர்_அளவு)
பொங்கல் = அரிசி_அளவு + சர்க்கரை_அளவு + நீர்_அளவு
return பொங்கல்
சர்க்கரைப்பொங்கல்_வைப்போம்(500,300,2000)

 

இதில், எந்த வரியில் சர்க்கரைப்பொங்கல்வைப்போம் ங்கிற செயல்கூற்றை(Function)க் கூப்பிட்டிருக்கிறோமோ(9ஆவது வரி), அந்த வரிக்குப் பொங்கல் திரும்ப வரும்.
பைத்தான்: அதை எப்படி உறுதிப்படுத்துவது?
நந்தன்:
சர்க்கரைப்பொங்கல்
வைப்போம்(500,300,2000)
வரி பொங்கலைக் கொடுக்கும்னு சொன்னேன். வேணும்னா,
தட்டு = சர்க்கரைப்பொங்கல்_வைப்போம்(500,300,2000)

இப்படிக் கொடுத்தா, நாம வச்ச சர்க்கரைப்பொங்கல்_வைப்போம் செயல்கூறு தரும் வெளியீட்டைத் தட்டில் வாங்கிக் கொள்ள முடியும்.
பைத்தான்: நல்லாச் சொன்னேப்பா! இதே மாதிரி, இன்னோர் எடுத்துக்காட்டு சொல்ல முடியுமா?
நந்தன்: ஓ! தாராளமா!


def கூட்டல்(எண்1, எண்2):
return எண்1 + எண்2
def கழித்தல்(எண்1, எண்2):
return எண்1 எண்2
def பெருக்கல்(எண்1, எண்2):
return எண்1 * எண்2
def வகுத்தல்(எண்1, எண்2):
return எண்1 / எண்2
எண்_1 = int(input("முதல் எண்: "))
எண்_2 = int(input("இரண்டாவது எண்: "))
விடை = கூட்டல்(எண்_1, எண்_2)
print(விடை)

view raw

calculator.py

hosted with ❤ by GitHub

பைத்தான்: முன்னாடி எழுதுன கால்குலேட்டர் நிரலையே கொஞ்சம் சரி பண்ணி, return அப்படிங்கிறத புரிய வச்சிட்டியே, நந்தா!
நந்தன்: ஹி, ஹி! ஆமா, கண்டுபிடிச்சிட்டியா?
பைத்தான்: இதுல கூடுதலா, ஒரே ஒரு வரி நான் சேர்த்துக்கலாமா?
நந்தன்: ஓ! சேர்த்துச் சொல்லேன்!
பைத்தான்: நந்தா எழுதியிருக்கிற கடைசி வரி என்ன? print(விடை). அதில் உள்ள ‘விடை’யில் என்ன மதிப்பு இருக்கும்? கூட்டல்(எண்_1, எண்_2) செயல்கூற்றில் இருந்து வரும் மதிப்புத் தானே! எனவே, இதை நேரடியாக,
print(கூட்டல்(எண்_1, எண்_2)) னு கொடுத்தாலும் அதே விடை வருவதைப் பார்க்கலாம். செய்து பாருங்களேன்.
நந்தன்: சரியாச் சொன்னே நண்பா!
பைத்தான்: சில பயிற்சிகள் கொடுக்கிறேன். செய்து பார் நண்பா!

  1. ஒரு மாணவரிடம் ஐந்து மதிப்பெண்களை வாங்கி மொத்தத்தைத் திருப்பிக்(return) கொடு
  2. வங்கியில் பணம் முதலீடு செய்யும் ஒருவரிடம், தொகை, அதற்கான வட்டி, காலம் மூன்றையும் வாங்கி, அவருக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதைத் திருப்பிக் கொடு!
  3. மட்டைப்பந்து வீரர் ஒருவர், கடைசி மூன்று போட்டிகளில் அடித்த ஓட்டங்களைக் கூட்டி, கூடுதலையும், அவரின் சராசரியையும் திருப்பிக் கொடு!

இதையெல்லாம் செஞ்சுட்டு, ‘திரும்பி வந்துட்டேன்னு’ சொல்லு!

  • கி. முத்துராமலிங்கம்,
    பயிலகம், சென்னை