பைத்தானை நிறுவி விட்டோம். சரி! இப்போது நிரல் எழுதத் தொடங்குவோமா! நிரல் எழுதுவது என்றால்
1) முன்னேற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும்?
2) என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?
3) உண்மையிலேயே பைத்தான் எளிதான மொழி தானா?
இப்படிப் பல கேள்விகள் உங்கள் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கலாம். இந்தக் கேள்விகள், குழப்பங்கள் எல்லாமே துளியும் தேவையில்லாதவை. ஆமாம்! பைத்தானைப் படிப்பது என்பது தமிழ் படிப்பது போன்றது. செந்தமிழும் நாப்பழக்கம்! பைத்தானும் அதே பழக்கம் தான்!
விண்டோசில் பைத்தான்:
விண்டோசில் IDLE என்று தட்டச்சிடுங்கள். IDLE கீழ் உள்ளது போல் திறக்கும்.
அதில் நாம் விரும்பும் வகையில் கணக்கீடுகள், பெயர்களை அச்சிடுவது என்று நிரலைத் தொடங்கி விட வேண்டியது தான்.
>என்று இருக்கும் இடத்தில் 5+5 என்று தட்டச்சிட்டு Enter பொத்தானைத் தட்டுங்கள். பத்து என்று பதில் படக்கென்று வரும்.
மாணவர் ஒருவரின் ஐந்து மதிப்பெண்களின் கூடுதலைக் கண்டுபிடிக்க விரும்பினால், பின்வருமாறு கொடுங்கள்.
தமிழ் = 90
ஆங்கிலம் = 89
கணக்கு = 78
அறிவியல் = 92
சமூகஅறிவியல் = 95 மொத்தம் = தமிழ் + ஆங்கிலம் + கணக்கு + அறிவியல் + சமூகஅறிவியல்
மொத்தம்
இப்போது விடை 444 என்று வந்து விடும். இங்கே, சமூக அறிவியல் என்பதில் சமூக என்பதற்கும் அறிவியல் என்பதற்கும் இடையில் உள்ள இடைவெளியை அடிக்கோடிட்டு வைத்திருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். பைத்தான் உள்பட, எந்த நிரல்மொழியும் இப்படிப்பட்ட இடைவெளிகளை ஆதரிப்பதில்லை. பெயர்களுக்கு இடையே இப்படிப்பட்ட இடைவெளி கொடுக்க வேண்டிய தேவையிருந்தால் இடைவெளிக்கு மாற்றாக அடிக்கோடு இடுங்கள்.
IDLEஇல் பைத்தான் கோப்பு உருவாக்குதல்:
பைத்தான் IDLEஇல் மேல் உள்ளது போல் பைத்தான் வரிகள் எழுதி விடைகளைப் பார்க்கலாம். ஆனால் அதைச் செய்வது விரும்பத்தக்கதன்று. ஏனென்றால், ஒவ்வொரு முறை IDLEஐ மூடும் போதும் நாம் எழுதிய பைத்தான் நிரல் அழிந்து விடும். எனவே பைத்தான் நிரல் எழுதிச் சேமிக்க (Save) நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
எப்படிச் செய்வது?
- IDLEஐத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.
- File –> New என்று சொடுக்குங்கள்.
- இதில் பைத்தான் நிரலைத் தட்டச்சிடலாம். இப்போதைக்கு மேல் உள்ள வரிகளைக் கொஞ்சமாகக் கீழே இருப்பது போல் மாற்றி ஒட்டி விடுங்கள்.
தமிழ் = 90
ஆங்கிலம் = 89
கணக்கு = 78
அறிவியல் = 92
சமூகஅறிவியல் = 95 மொத்தம் = தமிழ் + ஆங்கிலம் + கணக்கு + அறிவியல் + சமூகஅறிவியல்
print(மொத்தம்)
- இப்போது File –> Save வழியிலோ ctrl+s கொடுத்தோ இந்த நிரலைச் சேமிக்க வேண்டும்.
- நிரலை first.py என்று சேமிக்கிறேன். நீங்களும் அப்படியே சேமித்துக் கொள்ளலாம். வேறு பெயர் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
- இனிமேல் இந்த நிரலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் File –> Open என்று தேர்ந்தெடுத்தோ, Ctrl+o கொடுத்தோ திறந்து கொள்ளலாம்.
எப்படி இயக்குவது?
இப்போது பைத்தான் நிரலை எப்படி இயக்குவது என்று பார்ப்போமா?
1. F5 ஐ அழுத்துங்கள்.
2. இப்போது 444 எனத் திரையில் வெளியீட்டை நீங்கள் பார்க்கலாம்.
இப்போது விண்டோஸ் இயங்கு தளத்தில் பைத்தான் நிரல் எழுதத் தெரிந்து விட்டது. அடுத்து என்ன? லினக்ஸ் தான்! லினக்சில் எப்படிப் பைத்தான் நிரல் எழுதுவது என்று பார்த்து விடுவோம்.
- கி. முத்துராமலிங்கம், பயிலகம்