இதுவரை பார்த்த பதிவுகள் வழியே விண்டோஸ், லினக்ஸ் ஆகிய இயங்குதளங்களில் எப்படிப் பைத்தான் நிரலை எழுதி, இயக்கி, வெளியீட்டையும் பார்க்கத் தெரிந்து கொண்டோம். அந்தப் படியை இன்னும் ஏறாதவர்கள் ஒரு முறைக்கு இருமுறை அந்தப் படியை ஏறப் பழகிக் கொள்ளுங்கள். அந்தப் படியில் முறையாக ஏறியவர்களுக்கு இனி நிரல் எழுதுவது என்பது எட்டாக்கனி இல்லை, முழுமையாக எட்டும் கனி தான்!
இப்போது ஒரு நிரல் எழுதப் போகிறோம். பைத்தான் நிரல், ‘உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்கப் போகிறது. அதற்கு நீங்கள் உங்கள் பெயரைச் சொல்லப் போகிறீர்கள். (உங்கள் பெயர் திருவள்ளுவர் என்று வைத்துக் கொள்ளுங்களேன், அப்படியானால்) பைத்தான், “வாருங்கள் திருவள்ளுவர் வணக்கம்” என்று சொல்லப் போகிறது.
குறிப்பு: இந்தப் பதிவிலும் இனி வரும் பதிவுகளிலும் நான் லினக்ஸ் இயங்குதளத்தில் நிரலை எழுதி வெளியீட்டைக் காட்டப் போகிறேன். விண்டோஸ் இயங்குதளத்தில் வேலை செய்பவர்கள், ஆறாம் பதிவைப் பின்பற்றி இதைச் செய்யலாம், நூறு விழுக்காடு உங்கள் நிரல் இயங்கும்.
1. கீழ் உள்ள நிரல் வரிகளை நோட்பேட்கியூகியூவில் எழுதுகிறோம்.
name = input(“What is your name?”)
print(“Welcome “, name, “Vanakkam”) |
2. இந்நிரலை second.py என்னும் பெயரில் /home/muthu/Documents/Python10 அடைவில் சேமிக்கிறோம். (நீங்கள் எங்கே சேமிக்கிறீர்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்).
3. டெர்மினலைத் திறந்து அந்த அடைவை அடைந்து கொள்ளுங்கள். (cd /home/muthu/Documents/Python10)
4. python3 second.py என்று இயக்கிப் பாருங்கள்.
5. நிரல் இப்போது, “What is your name?” என்று கேட்கும்.
6. மறுமொழியாக, Thiruvalluvar என்று உள்ளிட்டு என்டர்(Enter) பொத்தானைத் தட்டிப் பாருங்கள்.
7. Welcome Thiruvalluvar Vanakkam என்று பைத்தான் உங்களை வரவேற்கும்.
விருந்தோம்பல் என்பது தமிழர் மரபு. அந்த மரபுப்படி, இப்போது பைத்தான் உங்களை வரவேற்று விருந்தோம்பியிருக்கிறது. நாமும் பைத்தானில் இருந்தோம்பி விரும்பியதை அடைய முடியும்.
“விருந்தோம்புவது, இருந்தோம்புவது எல்லாம் சரி, மேல் உள்ள நிரலில் என்ன நடக்கிறது என்று நீங்கள் சொல்லவே இல்லையே!” என்கிறீர்களா? இந்த நிரலில் இரண்டு செயல்கூறுகளைப் பயன்படுத்தியிருக்கிறோம். “செயல்கூறா” அப்படியென்றால் என்னவென்று சொல்லுங்கள். எங்களுக்குப் பைத்தான் மட்டுமில்லை, அதைத் தனித்தமிழில் படிப்பதும் புதிதுதான்! எங்கள் இயலாமையைப் புரிந்து சொல்லிக் கொடுங்கள் என்று சொல்வது எனக்கும் நன்றாகக் கேட்கிறது.
கவலைப்படாதீர்கள். செயல்கூறு என்றால் என்ன? அதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் அடுத்த பதிவில் சொல்கிறேன்.
– கி. முத்துராமலிங்கம், பயிலகம்