பைத்தான் படிக்கலாம் வாங்க – 26 – தரவைத் திறப்போம் வாருங்கள்!

தமிழின் மிகப் பெரிய சிறப்பே அதன் வார்த்தை வளம் தான்! ஆங்கிலத்தில் இல்லாத சிறப்புக் கூடத் தமிழில் உண்டு. ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போமே! Laptop என்றொரு வார்த்தை – அதைத் தமிழில் மடிக்கணினி என மொழிபெயர்த்திருக்கிறார்கள். மடிக்கணினி என்பதில் இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன, பாருங்கள் – மடியில் வைக்கும் கணினி, மடித்து வைக்கும் கணினி. நன்றாக இருக்கிறது அல்லவா?

இதே போல, நிறைய வார்த்தைகளைச் சொல்லலாம். அப்படி ஒரு வார்த்தை தான் – தரவு! தரவு என்றால் தருவது! கணினிக்கு நாம் என்ன தருவோம்? எடுத்துக்காட்டாக ஒருவருடைய பெயர், வயது, முகவரி, கல்வித்தகுதி ஆகியவற்றைக் கணினிக்குத் தரலாம் அல்லவா?  அதைத் தான் தரவு(Data) என்கிறோம்.

இந்தத் தரவுகளைப் பல வகைப்படுத்திக் கணினிக்கு உள்ளீடாக(input)க் கொடுப்பார்கள். அது சரி, தரவுகளை ஏன் பலவகைப்படுத்த வேண்டும்?

கந்தசாமியும் கணினியும்:
கந்தசாமிக்குக் கணினி என்றால் கொள்ளைப் பிரியம். ஒரு கணினியும் வாங்கி விட்டார். யாரிடமோ கேட்டு, பைத்தான் படிக்க வேண்டும் என்று வேறு ஆசை. பைத்தானை எப்படி நிறுவுவது(install) என்று யார் யாரிடமோ கேட்டுப் பார்த்திருக்கிறார். நீங்கள் லினக்ஸ் வைத்திருந்தால், அதில் பைத்தான் இயல்பாக(default)வே இருக்கும் என யாரோ சொல்லியிருக்கிறார்கள். லினக்ஸ் எப்படி நிறுவுவது என்று தெரியாதே என்று சொல்ல, தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி என்று ஓர் அமைப்பு இருக்கிறது. அதன் இணையத்தளத்தின் பெயர் forums.tamillinuxcommunity.org. அங்கே போய்ப் பார்த்தால் எளிதாக நிறுவலாம் என்று லினக்சை நிறுவி விட்டார். பிறகு லினக்சில் பைத்தான், இயல்பாகவே இருப்பதைப் பார்த்து அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இப்போது அவருக்குத் தம்முடைய பெயர், வீட்டு எண் ஆகியவற்றைப் பைத்தானில் உள்ளிட ஆசை.
பெயர் = ‘கந்தசாமி’
என்று கொடுத்தால் போதும். இனிமேல், ‘பெயர்’ என்று நீங்கள் கேட்டால், ‘கந்தசாமி’ எனப் பைத்தான் சொல்லி விடும் என்று சொல்லியிருக்கிறார்கள். கொடுத்து விட்டார். அவருடைய வீடு இரண்டாவது தளத்தில் இருக்கிறது. எனவே வீட்டு எண் 5/2. இதையும்
வீட்டுஎண் = 5/2
என்று கொடுத்து விட்டார். இப்போது தான் அவருக்கு சந்தேகம். 5/2 என்று கொடுத்திருப்பது சரியா? இல்லை ‘5/2’ என்று ஒற்றை மேற்கோள் குறி சேர்த்துக் கொடுக்க வேண்டுமா என்று!
இரண்டையும் தான் கொடுத்துப் பார்ப்போமே என்று
வீட்டு
எண் = 5/2
print(வீட்டுஎண்)
என்று பார்த்திருக்கிறார். பைத்தான், 2.5 என்று பதில் கொடுத்துவிட்டது. அப்போது தான் அவருக்கு மேற்கோள் குறியின் தேவை புரிந்திருக்கிறது. மேற்கோள் குறிக்குள் கொடுக்காவிட்டால் ஐந்தை இரண்டால் வகுத்து, 2.5 என்று வந்து விடுகிறது. சரி, அப்படியானால், மேற்கோள் குறிக்குள் கொடுத்துப் பார்ப்போம் என்று,
வீட்டு
எண் = ‘5/2’
print(வீட்டு_எண்)
கொடுத்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தது போலவே, 5/2 என்றே விடை வந்திருக்கிறது.

நமக்குப் புரிவது என்ன?
ஏதோ ஒரு தரவு(Data), அது அ,ஆ, A,B என எழுத்தாக இருக்கலாம்; 1,5/2 என எண்ணாக இருக்கலாம்; கவின், வெண்பா எனப் பெயராக இருக்கலாம்; பைத்தானுக்கு நாம் கொடுத்தது போலவே பைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், ஒற்றை மேற்கோள்குறி(Single Quotation)க்குள்ளும் அந்தத் தரவைக் கொடுக்கலாம்; இரட்டை மேற்கோள்குறிக்குள்ளும்(Double Quotation) அந்தத் தரவைக் கொடுக்கலாம். இப்படி மேற்கோள்குறிக்குள் கொடுக்கப்படும் தரவுகளைப் பைத்தான், கொடுத்தது போலவே, வார்த்தைகளாகவே எடுத்துக் கொள்ளும். இவ்வகைத் தரவுகளை String என்று சொல்வார்கள். String என்பதைப் பைத்தான், சுருக்கமாக str என நினைவில் வைத்துக் கொள்ளும்.

தரவுகளை எண்களாகப் புரிந்து கொள்ள:
நாம் கொடுக்கும் தரவுகளை எண்களாகப் புரிந்து கொள்ள, ஒற்றை, இரட்டை என எந்த மேற்கோள்குறிகளும் கொடுக்க வேண்டிய தேவையில்லை. எடுத்துக்காட்டாக,
வயது = 23
என்று கொடுத்தால் போதுமானது.
வயது = 23
print(வயது)
என்று கொடுத்தால் 23 எனப் பைத்தான் கொடுத்து விடும். இப்படி எண்களை எழுதுவதற்கு ‘இன்டீஜர்'(integer) என்று பெயர். சுருக்கமாக, இன்ட்(int).

இதே போல, சரி / தவறு, ஆம் / இல்லை, உண்மை / பொய், என்பதைச் சொல்ல பூலியன்(boolean) என்றொரு தரவு வகை இருக்கிறது. இதைப் பைத்தானில் சுருக்கமாக, ‘பூல்'(bool) என்று சொல்வார்கள்.

இதுவரை, str,int, bool ஆகிய வகைகளில் தரவுகளைப் பைத்தானுக்குத் தரலாம் என்று பார்த்திருக்கிறோம். இவை போலவே, float, complex, byte, bytearray, list, tuple, set, frozenset, dict எனப் பல தரவு வகைகள் இருக்கின்றன. ஆ! இப்பவே கண்ண கட்டுதே!!
என நினைக்க வேண்டாம். தேவைப்படும் சூழல்களில் இந்தத் தரவுகளைப் பயன்படுத்துவதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இப்போதைக்கு அவற்றைப் பற்றிய கவலை வேண்டாம்!

 

 

%d bloggers like this: