பைத்தான் படிக்கலாம் வாங்க – 24 – திருடன் போலீஸ் கதை

திருடன் போலீஸ் கதை பார்ப்போமா? புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர் சகுந்தலாதேவி. அவர் எழுதிய புகழ் பெற்ற புத்தகம், ‘Puzzles to Puzzle You‘. அந்தப் புத்தகத்தில் ஒரு திருடன் போலீஸ் புதிர்க்கதையை அவர் எழுதியிருப்பார். அந்தப் புதிரைப் போல ஒரு புதிரைச் சொல்கிறேன். அந்தப் புதிருக்கான விடையை யோசித்துச் சொல்லுங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்த கதை இது.  நகைகளைத் திருடிக் கொண்டு ஒருவர் ஓடிவிட்டதாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. அப்படி அவர் நகைகளுடன் ஓடும்போது திறமையான ஒரு போலீஸ் அதிகாரி, அவரைத் துரத்திப் போய்ப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறார். இப்படி போலீஸ் சொல்கிறது.

திருடியதாகக் குற்றம் சாற்றப்பட்டவரின் வழக்கறிஞர், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறார். ‘இது போலியான வழக்கு. என் கட்சிக்காரர் எந்தத் தவறும் செய்யவில்லை. காவல்துறை தரும் தகவலைப் பாருங்கள். என் கட்சிக்காரர் 27 அடித் தூரத்தில் இருந்தாராம். அவரைக் காவல் அதிகாரி விரட்டிச் சென்று பிடித்தாராம். இது நம்பும்படியாகவா இருக்கிறது? கனம் கோர்ட்டார் அவர்களே!’. இது அந்த வழக்கறிஞரின் வாதம்.

இதைக் கேட்ட நீதிபதி, ‘ஆமாம்! வழக்கறிஞர் கேட்பது சரியாகத் தானே இருக்கிறது. இருபத்தேழு அடி தொலைவில் இருக்கும் ஒருவரை எப்படி எட்டிச் சென்று போலீஸ் பிடித்தது?’ என்று காவல்துறையைக் கேட்கிறார்.

இப்போது காவல்துறை அதிகாரி பேசத் தொடங்குகிறார். ‘ஐயா, நீங்கள் கேட்பது சரிதான்! நான் இருபத்தேழு அடி பின்னால் தான் இருந்தேன். ஆனால் திருடியவரின் ஒவ்வோர் இரண்டு அடிகளுக்கும் நான் ஐந்து அடிகள் ஓடினேன். இப்படி ஓடியதால், என்னால் திருடியவரை விரட்டிப் போய்ப் பிடிக்க முடிந்தது.’ என்கிறார்.

இதைக் கேட்ட நீதிபதி, இப்படிக் காவல் அதிகாரி சொல்வது உண்மை என்றால், எத்தனையாவது அடியில் திருடியவரைக் காவல் அதிகாரி பிடித்திருப்பார் என்று கண்டுபிடித்து விட்டார். உங்களால் எத்தனையாவது அடி என்று கண்டுபிடிக்க முடிகிறதா? இது தான் அந்தப் புதிர்க் கதை! ஒரு தாளும் எழுதுகோலும் எடுங்கள். கணக்கை எழுதுங்கள்! கண்டுபிடியுங்கள். பிறகு வாருங்கள் – பைத்தானில் அதை முயலலாம்.

பைத்தானில் முயல்வோமா?
திருடியவர், போலீசை விட 27 அடி முன்னால் நிற்கிறார். இதை,
திருடன் = 27 # ஓடிய தொலைவு
போலீஸ் = 0 # இன்னும் ஓடத் தொடங்கவில்லை அல்லவா?
#திருடனின் ஒவ்வோர் இரண்டு அடிக்கும் போலீஸ் ஐந்து அடி ஓடுகிறார்.

அதாவது, திருடனின் 29 அடியில், போலீஸ் 5 அடி, திருடனின் 31அடியில் போலீஸ் 10 அடி, திருடனின் 33அடியில் போலீஸ் 15அடி, இப்படியே!

திருடன் – 27, 29, 31, 33, 35, 37, 39, 41, 43, 45

போலீஸ் – 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45

அப்படியானால் போலீஸ் தன்னுடைய 45ஆவது அடியில் திருடனைப் பிடித்திருப்பார். சரி தானே! 45ஆவது அடியில் திருடியவரை விட போலீஸ் அதிக அடிகள் போய்விட்டதால், திருடியவரை மடக்கிப் பிடித்திருப்பார் என ஊகிக்கலாம். அப்படியானால், போலீஸ் எதுவரை ஓட வேண்டும் என்பதற்கான விடை கிடைத்துவிட்டது – அதாவது, போலீசின் அடி, திருடனின் அடியைக் குறைவாக இருந்தால், (போலீஸ் பின்னால் இருப்பார் எனவே) போலீஸ் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். எப்போது போலீஸ், திருடனின் அடியை எட்டுகிறாரோ அதன் பிறகு ஓட வேண்டிய தேவையில்லை.
இதைப் பைத்தானில்

while போலீஸ் < திருடன்:
என எழுதலாம்.

முழு நிரலாக:


திருடன் = 27
போலீஸ் = 0
while போலீஸ் < திருடன் :
திருடன் = திருடன் + 2
போலீஸ் = போலீஸ் + 5
print(போலீஸ்)

சகுந்தலாதேவி, இந்தக் கணக்கில் போலீசின் ஒவ்வோர் இரண்டு அடிகளும் திருடியவரின் ஐந்து அடிகளுக்குச் சமம் எனில் போலீஸ் எத்தனை அடிகள் ஓடியிருப்பார் எனக் கேட்டிருப்பார். செய்து பார்த்துச் சொல்கிறீர்களா?

நன்றிக்குரியோர்:
கணிதவியலாளர் சகுந்தலாதேவிPuzzles to Puzzle You

படம் நன்றி: www.tvguide.com/movies/thirudan-police/2000100554/

%d bloggers like this: