சோவியத் ரஷ்யா பதிப்பக மின்னூல்கள் வெளியீடு

1960 முதல் 1990 வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பதிப்பகங்கள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில், அறிவியல், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் எனப் பல்துறைகளில் பல நூல்களை வெளியிட்டன.

மிர் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகிய பதிப்பகங்கள் அவற்றுள் முதன்மையானவை.

தமிழ்நாடு முழுதும் உள்ள அனைத்து ஊர்கள், கிராமங்கள் தோறும் அவர்களது நடமாடும் விற்பனை நிலைய வண்டிகள், மிகவும் குறைந்த விலையில் அனைத்து அறிவுச் செல்வங்களையும் மக்களுக்கு அள்ளி வழங்கின.

சோவியத் நூல்களின் தாள்கள் தரமானவை. அவற்றின் எழுத்துகள் மிகத் தரமானவை. உலகின் அறிவுச் செல்வம் அனைத்தையும் தமிழிலேயே தர முடியும் என்று நிரூபித்தவை.

இப்போது 30+ வயதுகளில் உள்ள யாவரும் இந்த நூல்களைத் தாண்டியே வந்திருப்பர். தமழ்நாட்டு நூலகங்கள் யாவும் இவற்றை அனைவருக்கும் படிக்க வழங்கி வந்தன.

இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல், கணிதம், உலக வரலாறு, உலக அரசியல், மதங்கள், கம்யூனிசம், சோசலிசம், சிறுகதைகள், நாவல்கள், சிறார் கதைகள் என பல்வேறு துறைகளில் வெளிவந்த நூல்களில் மயங்கி, கிறங்கிப் படித்தவர் பலருண்டு.

சோவியத் இலக்கியங்கள் இன்றும் படிப்போர் மனதைப் பறிக்க வல்லவை. சென்னை, வேலூர் வெயிலில் வாடினாலும்,  ரஷ்யக் கடுங்குளிரில் சவான்னாப் புல்வெளி, ஸ்டெப்பி புல்வெளிகளில் நம்மை காதலுக்காக காத்திருக்க வைப்பவை. தொழிலாளர்களுக்காகப் போராட வைப்பவை.

ஒரு முறை ரஷ்ய நூல்களைப் படித்துவிட்டால் போதும். அவற்றின் வாசனையும், கருத்துகளும், படித்து மகிழ்ந்த தருணங்களும் வாழ்நாள் முழுதும் நினைவில் இனிக்கும்.

கெடுவாய்ப்பாக, 1991 ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப் பட்ட பின், இந்த நூல்களும் பதிப்பகங்களும் கைவிடப்பட்டன.

ஆயினும் அப்போது வாங்கிய சோவியத் நூல்களை இன்றும் பலரும் அரிய பொக்கிசங்களாகப் போற்றிப் பாதுகாக்கின்றனர். அவை பல்வேறு பதிப்பங்களால் பதிப்பிக்கப் பட்டு வருகின்றன. புது நூல்களில் பழைய நூல்களின் வாசனையும் தாள் தரமும் இருப்பதில்லை.

அப்போது வந்த எல்லா நூல்களும் இப்போது பதிப்பிக்கப் படுவதில்லை. பழைய நூல்கள் இப்போது கிடைப்பதும் அரிதாகி விட்டது.

அரிய நூல்களை பாதுகாத்து, ஆவணப்படுத்தி, தமிழ் இதுவரை பெற்றுள்ள அரிய செல்வங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது அனைவரும் செய்ய வேண்டிய அரும் பணி ஆகும்.

நம் கண்ணெதிரேயே காலத்தால் மறைந்து போகும் சோவியத் நூல்களை பாதுகாக்கவே அனைவரும் விரும்புவர். இந்த அரும் பணியைத் தொடங்கிட கணியம் அறக்கட்டளை நண்பர்கள் விரும்பினர். உடன் இணைந்து கனடாவின் டொரண்டோ பல்கலைக் கழகம் ஸ்கார்புரோ வளாகத்தின் நூலகம் நிதி நல்கை வழங்கியது. ( University of Toronto, Scarborough Campus Library, Canada )

ஒரு ஆண்டு காலத்தில் 200 சோவியத் நூல்களையும் 500 தமிழ் சிற்றிதழ்களையும் மின்வருடல் செய்து PDF, TIFF வடிவங்களில் வெளியிட திட்டமிட்டோம். 2023 சனவரியில் தொடங்கிய இத்திட்டத்தின் திட்ட வளர்ச்சி விவரங்களை இங்கே காணலாம்.

github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/13

நூல்களைக் கண்டறிதல் பெரும் சவாலாக இருந்தது. நூலகங்களில் சோவியத் நூல்கள் இப்போது கிடைப்பதில்லை. தனித்தனியே பலரும் அவற்றை தம் தனிச் சேகரங்களில் வைத்திருந்தனர்.

நண்பர் அன்வர், சோவியத் நூல்களை சேகரிக்கும் பெரு முயற்சியில் இறங்கினார்.
தகவல் உழவன், உதயன் ஆகியோரும் இணைந்தனர்.

தமிழ் காமராசு, நர்மதா தேவி ( TNCPIM ) ஆகியோரும் இணைந்து சோவியத் நூல் சேகரம் வைத்திருத்து, மின்னூலாக்க அனுமதி தர மனமுள்ளோரைக் கண்டறிய உதவினர்.

– ஈஸ்வரன், சென்னை
– ரமணி, மார்க்சிஸ்ட் நூலகம், சென்னை
– ஜார்ஜ்,  மார்க்சிஸ்ட் நூலகம், சென்னை
– எழுத்தாளர் தாழை மதியவன்
– பாரதி கண்ணன், அகத்தீ, கிழக்கு தாம்பரம், சென்னை
– சுதா, வசந்தம் நூலகம், சென்னை

ஆகியோர் தம்மிடம் இருந்த சோவியத் நூல்களை மின்னூலாக்கம் செய்ய அனுப்பினர்.

காரைக்குடியில் இருந்து லெனின் குருசாமி நூல்களைப் பெற்று, அவற்றை சிறப்பான வகையில் scan செய்து, சீராக்கி, சரிபார்த்து, மின்னூலாக்கினார். மொத்தம் 187 சோவியத் நூல்கள் மின்னூலாக்கப் பட்டன.

தகவல் உழவன், உதயன், தமிழ்ச் செல்வி இணைந்து மீத்தரவு சரிபார்த்து வெளியிட்டனர்.

டொரண்டோ பல்கலைக் கழகம் ஸ்கார்புரோ வளாகத்தின் நூலகக் குழுவினர், சோவியத் நூல்களை இங்கே வெளியிடப்பட்டுள்ளனர்.

tamil.digital.utsc.utoronto.ca/61220/utsc79617

அரிதான சோவியத் நூல்களை கண்டறிந்து, சேகரித்து, மின்னூலாக்கி, வெளியிட உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். நிதி நல்கை அளித்த டொரண்டோ பல்கலைக் கழகம் ஸ்கார்புரோ வளாகத்தின் நூலகக் குழுவினருக்கு நன்றி.

தற்போது 500 சிற்றிதழ்களை வெளியீட்டுக்கு தயார் செய்து வருகிறோம். விரைவில் வெளியிடுவோம்.

இத்திட்டம் குறித்த சிறு விளக்கங்களை இங்கே காணலாம்

docs.google.com/presentation/d/1Xa5-00XCCtpYfKjbdHZhP8iUA79NQ999OTdmOvby5H4/edit#slide=id.p

– சிறந்த நூல்களை வெளியிட்ட சோவியத் பதிப்பகங்கள்,
– தமிழுக்கு வளம் சேர்த்த மொழி பெயர்ப்பாளர்கள்,
– நூல்களை தமிழ்நாடு எங்கும் கொண்டு சென்ற NCBH பதிப்பகத்தார்,
– அனைவரையும் படிக்க ஊக்குவித்த அரசியல், பிற இயக்கத்தினர்,
– நூலகங்கள்,
– இன்று வரை நூல்களைப் பாதுகாத்து வழங்கியோர்,
– கணியம் தன்னார்வலர்கள்,
– டொரண்டோ பல்கலைக் கழகம் ஸ்கார்புரோ வளாகத்தின் நூலகக் குழுவினர்,
– வாசகர்கள்

அனைவருக்கும் மீண்டும் எங்கள் நன்றிகள்.

மேலதிகமாக உங்களிடம் சோவியத் நூல்கள் இருந்து, அவற்றை மின்வருட விரும்பினால், எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு –
அன்வர் : +918124782351
லெனின் : +919578078500

KaniyamFoundation@gmail.com

%d bloggers like this: