சாப்ட்வேர் டெஸ்டிங் – 8 – டெஸ்ட் கேஸ் எழுதலாம் வாங்க !

இதுவரை உள்ள பதிவுகளைப் பார்க்காதவர்கள் தயவுசெய்து பார்த்து விட்டு வாருங்கள். அவற்றை www.kaniyam.com/category/software-testing/ பக்கத்தில் பார்க்கலாம்.

இதுவரை நாம், சாப்ட்வேர் டெஸ்டிங்கைத் திட்டமிடுவது, சோதனைக்கான உத்தி ஆவணத்தை உருவாக்குவது ஆகியவற்றைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் செய்யவிருப்பது – சோதனைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவது! இதென்ன சோதனைக்கு ஆயத்தமாகும் சோதனையா என்று யோசிக்க வேண்டாம்! எளிதானது தான்!

திட்டமிடலில் தொடங்கி, உத்தி வரை நாம் டெஸ்டிங்கு நம்மையும் நம்முடைய அணியையும் ஆயத்தப்படுத்தி விட்டோம். ஆனால் முதன்மையான ஒன்று – டெஸ்டிங்கிற்குத் தேவையான மென்பொருள்! அது உருவானால் தானே நாம் சோதனையைத் தொடங்கவே முடியும்? அப்படியானால் மென்பொருள் உருவாகும் வரை (இதைத் தான் ‘டெவலப்மென்ட்’ என்கிறார்கள். இதை உருவாக்குபவர்கள் ‘டெவலப்பர்கள்’ எனப்படுவர்.) என்ன செய்வது?

எந்தெந்த வழிகளில் எல்லாம் மென்பொருளைச் சோதிக்கலாம் என ஆராயலாம். அந்த வழிகளை எல்லாம் ஆராய்ந்து பார்ப்பது ஓர் அணி அல்லவா? எனவே ஒருவர் டெஸ்டிங்கிற்குக் கண்டுபிடிக்கும் வழிகளை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தும் பொருட்டு, எழுதிச் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக, ஒரு மென்பொருளை எப்படியெல்லாம் சோதிக்கலாம் என்பதை எழுதிச் சேமித்து வைப்பதைத் தான் ‘டெஸ்ட் கேஸ்’ என்கிறார்கள். (டெஸ்ட் கேசை தமிழில் எப்படிச் சொல்லலாம் என யோசிக்கிறீர்களா? ‘ஆய்வு நேர்வு’ எனத் தனித்தமிழில் சொல்கிறது விக்கிப்பீடியா.)

டெஸ்ட் கேஸ் எழுதலாம் வாங்க!

டெஸ்ட் கேஸ் எப்படி எழுதுவது எனப் பார்ப்போம். பொதுவாக, டெஸ்ட் கேசை, எக்செல், லிபர் கால்க் போன்ற அட்டவணைச் செயலிகளை டெஸ்ட் கேஸ் எழுதப் பயன்படுத்துவார்கள். ‘டெஸ்ட் லிங்க்’ (testlink.org/ ) போன்ற பயனுள்ள கட்டற்ற மென்பொருளும் டெஸ்ட் கேஸ் எழுதப் பயன்படுத்தப்படுகிறது.

டெஸ்ட் கேஸ் எழுதுவதற்கு முன்னர், வாடிக்கையாளர் தேவை ஆவணத்தில் இருப்பது போல, மொத்தத் திட்டப்பணியையும் பல்வேறு உருப்படிகளாகப் பிரித்து விடுவார்கள். ஒவ்வோர் உருப்படியையும் ‘மாட்யூல்’ என்று சொல்வார்கள். இந்த உருப்படிகளை ஒவ்வொரு டெஸ்டருக்கும் பிரித்துக் கொடுத்து விடுவார்கள். இப்போது டெஸ்டரின் வேலை கொடுக்கப்பட்ட உருப்படிக்கு, டெஸ்ட் கேஸ் எழுதுவது தான்!

எப்படி எழுதுவது ?

1. டெஸ்ட் கேஸ் எழுதுவதற்கு முன் – உருப்படியின் பெயரை ‘டெஸ்ட் சூட்’ (Test Suite) ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

எ.கா. முக நூல் தான் உங்களுடைய திட்டப்பணி என்று வைத்துக் கொள்ளுங்கள். முக நூலில் பயனர் உள்நுழையும் பக்கத்தைச் சோதிப்பது தான் உங்கள் உருப்படி என்றால், இங்கு, பயனர் உள்நுழைவைச் சோதிப்பது தான் உங்களுடைய டெஸ்ட் சூட் ஆகும். (இதை ‘டெஸ்ட் சினரியோ’ (Test Scenario) என்றும் சொல்வதுண்டு.) இந்த டெஸ்ட் சூட்டில்,

1) சரியான பயனர் பெயர், தவறான கடவுச்சொல் கொடுத்தால் என்ன ஆகும்?

2) சரியான பயனர் பெயர், சரியான கடவுச்சொல் கொடுத்தால் என்ன ஆகும்?

3) தவறான பயனர் பெயர், தவறான கடவுச்சொல் கொடுத்தால் என்ன ஆகும்?

ஆகிய மூன்றையும் நாம் சோதிக்க வேண்டும். இவை ஒவ்வொன்றும் ஒரு டெஸ்ட் கேஸ் ஆகக் கருதப்படும்.

எனவே,

  • டெஸ்ட் சூட் என்பது பயனர் உள் நுழைவுச் சோதனை
  • டெஸ்ட் கேஸ் என்பது டெஸ்ட் சூட்டில் உள்ள ஒவ்வொரு வழியையும் குறிப்பது.

கீழ் உள்ள டெஸ்ட் கேசை எடுத்துக்காட்டுக்குப் பார்க்கலாம். இங்கு எதிர்பார்க்கும் முடிவும் உண்மையான முடிவும் பொருந்தியிருக்க வேண்டும். அப்படிப் பொருந்தினால் நாம் செய்யும் சோதனை வெற்றி எனக் கொள்ளலாம். உண்மையான முடிவை டெஸ்ட் கேஸ் எழுதும் போதே எழுதிவிட முடியாது. மென்பொருள் உருவாக்கப்பட்டு வந்தவுடன் சோதிக்கும் போது அதை நிரப்புவார்கள்.

 

எடுத்துக்காட்டுக்கு:

டெஸ்ட் கேஸ் எண் டெஸ்ட் கேஸ் முன் செய்யவேண்டியவை (ஏதும் இருந்தால்) சோதனை உள்ளீடு படிகள் எதிர்பார்க்கும் முடிவு உண்மையான முடிவு தேர்ச்சி
1 சரியான பயனர் உள்நுழைய முடிகிறதா எனப் பார். இல்லை பயனர்: அ ஆ இ

கடவுச்சொல்: க்ச்ட்

1. பயனர் பெயரை உள்ளிடு

2. கடவுச்சொல்லை உள்ளிடு

பயனர் நுழைய முடியும் ஆம்/இல்லை
2 சரியான பயனர் தவறான கடவுச்சொல்லுடன் உள்நுழைய முடிகிறதா எனப் பார். இல்லை பயனர்: அ ஆ இ

கடவுச்சொல்: க்ச்

1. பயனர் பெயரை உள்ளிடு

2. கடவுச்சொல்லை உள்ளிடு

பயனர் நுழைய முடியாது ஆம்/இல்லைம்
3 தவறான பயனர் உள்நுழைய முடிகிறதா எனப் பார். இல்லை பயனர்: அ ஆ

கடவுச்சொல்: க்ச்ட்

1. பயனர் பெயரை உள்ளிடு

2. கடவுச்சொல்லை உள்ளிடு

பயனர் நுழைய முடியாது ஆம்/இல்லை

 

இப்படி டெஸ்ட் கேஸ் எழுதி மென்பொருளுக்காக ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். மென்பொருளை உருவாக்கி முடித்தவுடன் அதில் நாம் எழுதியுள்ள டெஸ்ட் கேஸ்களைப் பொருத்திச் சோதித்துப் பார்க்க வேண்டும். அது சரி! நாம் வாடிக்கையாளர் தேவை ஆவணத்தில் உள்ள எல்லாத் தேவைகளுக்கும் டெஸ்ட் கேஸ்களை எழுதி விட்டோமா என்று எப்படிப் பார்ப்பது? தொடர்ந்து பார்ப்போம்!

– முத்து (muthu@payilagam.com)

%d bloggers like this: