ஒரு எளிமையான லினக்ஸ் கட்டளையின் மூலம், உங்கள் புகைப்படத்தின் பின்னணியை நீக்கலாம் !

சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக, நாம் எடுக்கும் புகைப்படங்களில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை! அதன் பின்னணியாக(background) தான் இருக்கும்.

புகைப்படங்களின் நேர்த்தியை, மோசமான பின்னணிகள் குறைத்து விடும். புகைப்படங்களின் பின்னணியை நீக்க, ஆண்ட்ராய்டு செயலிகள் குப்பை போல கொட்டி கிடக்கின்றன.

ஆனால், அவற்றின் பெரும்பாலானவை விளம்பரங்களாய் நிரம்பி வழிகின்றன. சிலவற்றிற்கு, அதிகப்படியான தொகையை செலவிட வேண்டி உள்ளது. மேலும், அவை யாவும் திறந்த நிலை(open source) பயன்பாடுகள் அல்ல.

ஆனால், இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமைந்திருப்பது தான்! நான் இன்று உங்களோடு பகிர்ந்து இருக்கும் Rembg பயன்பாடு.

பைத்தான் நிரல் மொழியில் எழுதப்பட்டது தான் Rembg. எனவே உங்களுடைய கணினியில் பைத்தான் 3 உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.

பெரும்பாலான லினக்ஸ் இயங்குதளங்களில் இவை இயல்பாகவே(python 3) வழங்கப்பட்டிருக்கும். சந்தேகம் இருந்தால், கீழ்க்காணும் கட்டளையை பிறப்பித்து எளிமையாக அறிந்து கொள்ளுங்கள்.

$ python3 –version

உங்களுடைய லினக்ஸ் இயங்கு தளத்தில், பைத்தான் 3.7 முதல் 3.11 இடைப்பட்ட பைத்தான் செயல்பாடுகள் இருக்க வேண்டும். எனது சூழலில், பைத்தான் 3.10.6 பயன்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி நிறுவுவது

என்னுடைய முனையத்தில், pythoncoding அடைவை (directory )உருவாக்கிக் கொண்டேன். பின்பு, என்னுடைய லினக்ஸ் கணினியில், பைத்தானுக்கான ஒரு தனிப்பட்ட மெய்நிகர் அமைப்பை(virtual environment ) உருவாக்கிக் கொண்டேன்.

$ python3 -m venv /home/don/

பின்பு pip ஐ பயன்படுத்தி rembg ஐ நிறுவினேன்.

$ python3 -m pip install rembg

வாருங்கள் பின்னணியை நீக்கலாம்

என்னுடைய ஒரு புகைப்படத்தை வழங்கி, மேற்படி அதில் உள்ள பின்னணியை நீக்கும்படி, கட்டளையை பிறப்பித்தேன். உண்மையில், கிடைத்த புகைப்படம் பிரமிப்பை ஏற்படுத்தியது.

உங்களுடைய புகைப்படத்தின் கோப்பு பெயரை மாற்ற விரும்பினால், கீழ்காணும் கட்டளையை Rembg இல் செலுத்துங்கள்.

$ rembg i dgw_ato.jpeg dgw_noback.jpg

நீங்கள் Rembg ஐ முதல்முறையாக பயன்படுத்துகிறீர்கள் எனில், 100 mb அளவிலான ஒரு அங்கீகார மாதிரியை நிறுவுகிறது. மேலும் இதை கீழ்காணும் பகுதியில் சேமிக்கிறது

~/.u2net/u2net.onnx

மேலும், இது apache 2.0 உரிமையை பயன்படுத்துகிறது.

Ryzen 7 with 16 GB of RAM கொண்ட கணினியில், வெறும் பத்து வினாடிகளில் புகைப்படத்தின் பின்னணியை Rembg நீக்கிவிட்டது.

நீக்கப்பட்ட புகைப்படத்தில் நீங்கள் விரும்பிய பின்னணியை இணைக்க விரும்பினால், GIMP போன்றவற்றை பயன்படுத்தலாம். அது பற்றிய கட்டுரை விரிவாக தேவைப்பட்டால் வெளியிடுகிறேன்.

உங்களுடைய புகைப்படத்தில் இருந்து, எளிமையாக பின்னணியை நீக்கி ஆகிவிட்டது. ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக Rembg ஐ முயற்சித்துப் பாருங்கள்.

மாதிரி புகைப்படங்கள்

முன்பு
(Don Watkins, CC BY-SA 4.0)
பின்பு
(Don Watkins, CC BY-SA 4.0)

மேற்படி, இந்த கட்டுரையானது opensource.com இணையதளத்தில் DonWatkins அவர்களால் எழுதப்பட்டது. இந்த கட்டுரையை எளிமைப்படுத்தி, மொழிபெயர்த்து, இங்கு நான் வெளியிடுகிறேன். இதில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தயக்கமின்றி சொல்லுங்கள். தொடர்ந்து வரும் கட்டுரைகளில் சரி செய்யப்படும்.

மொழிபெயர்த்தவர்:-

ஸ்ரீ காளீஸ்வரர்.செ,

தொடக்கநிலை மொழிபெயர்ப்பாளர்,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

இணையம்

மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

%d bloggers like this: