C மொழியின் மாறிகள் | எளிய தமிழில் C பகுதி -6

By | April 8, 2025

மாறி என்றால் என்ன? எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் இந்த பெயரை முதல் முதலாக சொன்னபோது, தனுஷ் நடிச்ச படம் தான் “மாரி” என பின் பெஞ்சிலிருந்த நண்பன் சத்தம் போட்டது இன்றும் நினைவிருக்கிறது. ஒருபுறம் மாறி என்பதையும், மாரி என்பதையும் குழப்பிக் கொண்டவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

மாரி என்றால் மழை என்று அர்த்தம். மாரி பொழியாது போனால், வையகம் எங்கும் வாடிய பயிர்கள் தான் காணக் கிடைக்கும். ஆனால், சி மொழியில் பார்க்கவிருக்கும் “மாறி” என்பது சற்றே வேறு விதமானது.

முதலில் மாறி என்று சொல்லுக்கான அடிப்படை அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். மாறுதல் என்பதன் சுருக்கமே மாறி என அறியப்படுகிறது. அப்படி என்றால் இந்த உலகமே மாறுதலுக்குரியதுதான்; அதற்கு C மொழி மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆங்கிலத்தில் எவ்வித குழப்பமும் இன்றி இதை variables என்று குறிப்பிட்டு விடுவார்கள். அதாவது இதன் மதிப்புகள் மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, தங்கத்தின் விலையை எடுத்துக் கொள்ளுங்கள் அது நிச்சயமாக ஒரு மாறி மதிப்பு தான். இன்றைக்கு தங்கத்தின் விலை ஒரு லட்ச ரூபாய் என்றால் வரும் நாட்களில் அதன் விலையில் நிச்சயமான ஒரு மாற்றம் இருக்கும்.

C மொழியில் மட்டுமல்ல; உலகில் இருக்கக்கூடிய அனைத்து விதமான நிழலாக்க மொழிகளிலும், மிக முக்கியமான இடத்தை வகிப்பது இந்த மாறி மதிப்புகள் தான். இவற்றினுடைய மதிப்புகள் மாறிக்கொண்டிருக்கும். நீங்கள் வழங்கும் உள்ளீடுகளுக்கு ஏற்ப இவை வெளியீடுகளை வழங்கும்.

சரி! இந்தக் கட்டுரையில் C மொழியில் மாறிகளை எப்படி குறிப்பிட வேண்டும் என்பது பற்றி மட்டும் பார்க்கலாம்.

செய் முறையில் இரண்டு விதமான மாறிகள் இருக்கிறது; ஒன்று எண் அடிப்படையிலான மாறிகள்(numerical based)மற்றும் ஒன்று எழுத்து அடிப்படையிலான(char based)மாறிகள். உதாரணமாக, ஒரு ஓட்டப்பந்தயத்தில் 20 பேர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வினாடிக்கு வினாடி ஒருவரை தாண்டி மற்றொருவர் முன்னேறி வந்து கொண்டே இருக்கிறார். எனவே முன்னேறி சென்று கொண்டிருப்பவரின் பெயர் காண்பிக்கப்பட வேண்டும்(leader board). அதே நேரம், அவரது வீரர் என்னும் குறிப்பிடப்பட வேண்டும். இவ்வாறு புரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே C மொழியின் குறிச்சொற்கள் என ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அந்த கட்டுரையை ஒரு முறை படித்து விடுங்கள்.

அமைப்பு:-(syntax)

கீழ்காணும் வகையில் தான், ஒரு மாறியின் மதிப்பானது சேமிக்கப்பட வேண்டும். முதலில் அந்த மாறியின் வகை வழங்கப்பட்டிருக்க வேண்டும் அதைத் தொடர்ந்து, அந்த மாறியின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். பின்பு சம குறி இடப்பட்டு மதிப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். முடிவில் அரை நிறுத்த குறிக்கொண்டு முடித்திருக்க வேண்டும்.

type variableName = value;

சரி மதிப்பு அடிப்படையில் உங்களுக்கு புரியும் வகையில் ஒரு சிறிய நிரலாக்கத்தை கீழே வழங்குகிறேன்.

<stdio.h>
int main()
{
   int num = 4;
   float car = 5.1;
   char name = ‘car’;
   return 0;
}

மேற்காணும் நிரலாக்கத்தில் முழுஎண் என்பதற்கு 4 என்னும் மதிப்பையும், தசம எண் மதிப்பிற்கு 5.1 , மற்றும் பெயர் என்பதில் car என்றும் கொடுத்திருக்கிறேன். இது போல தான் மாறி மதிப்புகளை நிரலாக்கத்தில் எழுத வேண்டும். ஆனால், அடுத்தடுத்த வரிகளில் செல்ல செல்ல இந்த மாறிகளின் மதிப்புகளும் மாறிக்கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருக்கும் இந்த மாறியின் மதிப்புகளை மாற்றி மாற்றி விளையாடுவது எப்படி என அடுத்து வரும் கட்டுரையில் இனிதே காணலாம்.

மீண்டும் ஒரு இனிய தமிழில் C கட்டுரையில் சந்திப்போம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com