முப்பரிமாணப் பொருட்களுக்கு OBJ கோப்பு வடிவம்
OBJ கோப்பு வடிவம் 3D பொருட்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு எளிய தரவு வடிவமாகும். இது 3D வடிவவியலை மட்டுமே குறிக்கிறது. ஆகவே, இயக்கம் மற்றும் அசைவூட்டத்தைச் செய்ய இயலாது. இது திறந்தமூலக் கோப்பு வடிவம். ஆகவே பிற 3D வரைகலை செயலி நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன.
உரிமக் கட்டணம் இல்லாத VR திறந்த மூலக் கோப்பு வடிவங்கள்
தனியுரிம வடிவங்களுக்குக் கட்டணம் கட்டவேண்டும். இவற்றை ஒரு நிறுவனத்தின் கருவிகளில் மட்டுமே திறந்து வேலை செய்ய முடியும். மேலும் சில தலையணிகளில் வேலை செய்யாது போகலாம். இம்மாதிரிப் பிரச்சினைகளைத் தவிர்க்கத் தொழில்துறைத் தரநிலைகள்படி திறந்த மூலக் கோப்பு வடிவங்களைப் பயன்படுத்துவதே உசிதம்.
குரொனோஸ் குழுமம் (Khronos Group) இந்தத் தொழில்துறைக்குத் தரநிலைகளைத் தயாரித்து வெளியிடுகிறது. தலையணி மற்றும் காட்சிக் கருவி தயாரிப்பாளர்கள் பலரும் இதில் அங்கத்தினர்களாக இருப்பதால் அவர்களுடைய தயாரிப்பில் இந்தக் கோப்பு வகைகள் வேலை செய்யும்.
VR உருவாக்கக் கோப்பு வடிவம் glTF/glTF 2.0
JPG/JPEG கோப்பு வடிவம் படங்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதேபோல முப்பரிமாணப் படங்களுக்கு glTF கோப்பு வடிவம் பரவலாகப் புழக்கத்துக்கு வந்துவிடும் என குரொனோஸ் குழுமம் தெரிவித்துள்ளது. glTF 2.0 என்பது இதனுடைய மேம்படுத்தப்பட்ட புதிய வெளியீடு. இக்கோப்பு வகையில் நிலையான(static) முப்பரிமாணப் பொருட்களை மட்டுமல்லாமல் நகர்வையும் (movement), அசைவூட்டத்தையும் (animation) சித்தரிக்க இயலும்.
ஒரு .gltf கோப்பு அதற்குத் தேவையான எல்லா வளங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் அல்லது வெளியிலுள்ள வளங்களுக்கு இணைப்பும் கொடுக்கலாம்.
OBJ கோப்புகளை glTF கோப்பாக மாற்ற இந்த OBJ2glTF கட்டற்ற திறந்த மூல மென்பொருள் உதவுகிறது.
VR ஓட்டுவதற்குக் கோப்பு வடிவம் GLB
மேற்கண்ட கோப்பை வேகமாக செயலியில் ஏற்றி ஓட்டுவதற்குத் தோதாக இது சிறிய அளவில் இரும வடிவில் (binary) இருக்கும். மேலும் வடிவியல் (geometry), அசைவூட்டம் (animation), இழையமைப்பு (textures), நிழலமைப்பு (shaders) ஆகியவற்றுக்குத் தேவையான வளங்கள் யாவும் இதற்குள்ளேயே இருக்கும்.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: VR காணொளி உருவாக்கும் வழிமுறைகள்
VR காணொளி வடிவங்கள் (video formats). இரட்டைக்கண் பார்வை (stereoscopic) முப்பரிமாணக்காட்சி. 360 ஒற்றை பார்வைக்கோணக் (Monoscopic) காணொளி. 360 முப்பரிமாணக் (Stereoscopic) காணொளி. 180 முப்பரிமாணக் (Stereoscopic) காணொளி.