விக்கிபீடியா தினம்

இணைய உலகத்தின் ஆகச்சிறந்த தரவு களஞ்சியமாக திகழும், “விக்கிப்பீடியா”வின் சர்வதேச தினம் இன்றைக்கு உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

விக்கிபீடியாவின் வரலாறு அதன் செயல்பாடு முறைகள் குறித்து கணியம் அறக்கட்டளையின் இணையதளத்தில், ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அந்த கட்டுரையின் இணைப்பை கீழே வழங்குகிறேன்.

kaniyam.com/wikipedia-an-opensource-library/

சரி ! விக்கிபீடியா என்பது எவ்வாறு செயல்படுகிறது? என்னதான் நடக்கிறது? விக்கிபீடியாவிற்குள், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எண்ணற்ற தரவுகள் குவியும் ஒரு ஆகச் சிறந்த தளமாக விக்கிபீடியா திகழ்வதற்கு காரணம் என்ன? அனைத்திற்கும் விடை தேடுவோம் இந்த ஒரு கட்டுரையில்…….

எனக்கு இன்றும் சரியாக நினைவு இருக்கிறது.2012 ஆம் ஆண்டு காமராஜர் பிறந்த தினம் தொடர்பான பேச்சுப்போட்டியில் பங்கேற்பதற்கு, காமராஜர் தொடர்பான தகவல்களை திரட்ட வேண்டி இருந்தது. அப்பொழுது போதியமான அளவுக்கு புத்தகங்களோ அல்லது தேவையான செய்தித்தாள் குறிப்புகளோ என்னிடத்தில் இல்லை. ஒரு 7 வயது சிறுவன் அதை சேகரித்து வைத்திருப்பான் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

பத்து ரூபாய் செலவு செய்து, பக்கத்தில் இருந்த கம்ப்யூட்டர் சென்டரில் சென்று காமராஜர் குறித்த கட்டுரையை பதிவிறக்கம் செய்து பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்து அதைப் படித்து போட்டியில் பங்கேற்றேன். தற்பொழுது தமிழ்நாட்டின் தென் மாவட்ட பாராளுமன்ற தொகுதி ஒன்றின் எம்பி அவர்களின் கைகளால், (அப்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வைக்கவில்லை) இரண்டாவது பரிசை பெற்றதை இன்றும் நான்  நினைவு கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஒரு வகையில் என்னுடைய பேச்சுப் பயணமும், எழுத்துப்பயணமும் தொடங்கிய இடம் அதுவென்றும் குறிப்பிடலாம். நான் அந்த கட்டுரைக்காக தரவுகளைப் பெற்ற தளம் தான், “விக்கிபீடியா”, ஆம்! கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்தவர், விக்கிபீடியாவில் இருந்த  கட்டுரையை அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து என் கைகளில் கொடுத்துவிட்டார்

என்சைக்ளோபீடியா வெளியிடும் நிறுவனம் தான், விக்கிபீடியா இணையதளத்தையும் நடத்துவதாக பல ஆண்டு காலத்திற்கு நான் நினைத்துக் கொண்டிருந்தேன் .

பின்னாளில், 2018-19 காலகட்டத்தில் எனது கைகளில் இணைய வசதி கிடைக்கப்பெற்று இருந்தபோது, விக்கிபீடியா தளத்திற்குள் சென்று இருக்கின்ற கட்டுரைகளில் கண்டபடி மாற்றங்களை செய்து நண்பர்களிடம் பெருமையாக தெரிவித்த நினைவுகள் என்றும் வெளிப்படுகிறது(அந்த பழக்கத்தை குறுகிய காலத்திற்குள் நிறுத்திவிட்டேன்). அந்த காலகட்டத்தில் தான், விக்கிபீடியா என்பது முழுக்க,முழுக்க சமூக நோக்கத்திற்காக இயங்கும் ஒரு ஆகச் சிறந்த தரவு களஞ்சியம் என்பதை புரிந்து கொள்ள தொடங்கினேன்.

உலகில் இருக்கக்கூடிய ஏகோபித்த தலைப்புகள் குறித்து, உலகளாவிய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகமாக ஒற்றுமையாக எவ்வித எதிர்பார்ப்புமின்றி கட்டுரைகளை எழுதுகிறார்கள். ஆவணப்படுத்தப்படாத பல தகவல்கள் கூட, விக்கிபீடியா தரவு தளத்தில் குவிந்து கிடக்கிறது. பெரும்பாலான தகவல்களுக்கு சான்று தேவை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒரு மிகப்பெரிய தலைவரின் மரணம் அல்லது ஒரு மிகப்பெரிய அரசியல் நிகழ்வு குறித்து குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்தே விக்கிபீடியா தளத்தில் தகவல் புதுப்பிக்கப்படும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் நொடிக்கு நொடி மாற்றம் வரும், ஒரு ஆகச் சிறந்த தளமாக விக்கிபீடியா திகழ்கிறது.

ஆனால், அதைவிட முக்கியமானது இந்த விக்கிபீடியா தளத்திற்கு உங்களால் இயன்ற உதவிகளை நீங்கள் நிச்சயமாக வழங்க வேண்டும். அவ்வப்போது என்னால் முடிந்த தொகையை மாதம் தோறும் நன்கொடையாக விக்கிபீடியாவிற்கு வழங்குகிறேன். நான் இதுவரை வழங்கிய தொகையை சேர்த்தால் சில டாலர்கள் மட்டுமே வரும் என்றாலும் கூட, நம் சிறு முயற்சியின் மூலம் ஒரு ஆகச் சிறந்த தரவு தளம் தொடர்ந்து இணையத்தில் நீடித்திருப்பதை உறுதி செய்ய முடியும்.

இத்தகைய ஆகச்சிறந்த தரவுதளமான விக்கிபீடியாவில், எனக்கு தெரிந்தவரை நூற்றுக்கணக்கான, ஏன்! ஆயிரக்கணக்கான தமிழர்கள் எவ்வித தன்னலமும் இன்றி, பொதுநல சேவை எண்ணத்தோடு கட்டுரைகளை எழுதுகிறார்கள்.

நான் கணியத்தில் கூட, ஸ்ரீ பாலசுப்பிரமணியம், சாத்திரத்தான், தாஹாபுஹாரி அதன் பின்பு சமீபத்தில் விக்கி மூலத்தில் சுமார் 23 ஆயிரம் புகைப்படங்களை இணைத்து இருக்கும் “ஏற்காடு இளங்கோ” என விக்கிபீடியா ஓடு தொடர்புடைய பலர் குறித்தும் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன்.

ஏற்காடு இளங்கோ அவர்களுடன் நேர்காணல் மேற்கொண்டிருந்ததையும் கவனித்திருப்பீர்கள். தங்களுடைய பொன்னான நேரத்தை செலவழித்து, உலகம் எங்கிலும் இருக்கக்கூடிய மக்கள் அறிவு எனும் செல்வத்தை பெற வேண்டும் என போராடும் சிந்தனைவாதிகளின் கூடாரம் தான் “விக்கிபீடியா”.

விக்கிமீடியா என்னும் தாய் நிறுவனத்தின் கீழ் இயங்கும், விக்கிபீடியா உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்களால் பார்வை இடப்படுகிறது.

பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கூட, தங்கள் தரவுகளை பெறுவதற்கு விக்கிபீடியா தளத்தையே பயன்படுத்துகிறது.

ஆனால், இன்றளவும் கூட என்னால் முன் வைக்கப்படும் கருத்து என்னவென்றால், விக்கிபீடியா எனும் தளம் எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கு அவ்வளவு உகந்ததாக இருப்பதாக தோன்றவில்லை. காரணம், விக்கிபீடியா என்கிற தளத்தில் உங்களால் தரவுகளுக்கே முக்கியத்துவம் அளிக்க முடியும்! மாறாக, உங்களுடைய சிந்தனைகளை அங்கு பதிவு செய்ய முடியாது.

ஆனால், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை உலகளாவிய மக்களுக்கு தெரியப்படுத்த விரும்பினால், விக்கிப்பீடியாவில் எழுதத் தொடங்குங்கள். இதற்கு வயதுவரம்போ, கல்வி தகுதியோ அல்லது பண வசதியோ தேவையில்லை ! உங்களுடைய மொபைல் கருவிலிருந்து கொண்டே,விக்கிபீடியாவில் கட்டுரைகளை எழுத முடியும். அல்லது குறைந்தபட்சம் ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளில் பிழை திருத்தம், புகைப்படங்களை இணைத்தல் போன்ற வேலைகளை கூட செய்ய முடியும்.

இதன் மூலம், ஒரு ஆகச் சிறந்த தரவு களஞ்சியம் தொடர்ந்து இணைய உலகை ஆட்டுவிப்பதை நாம் உறுதி செய்ய முடியும்.

விக்கிப்பீடியாவில் எழுத கற்றுக் கொள்வது இதோ மலை அளவு காரியமெல்லாம் அல்ல ! எளிமையாக உங்கள் மொபைல் கருவியில் இருக்கும் வசதிகளைக் கொண்டே, எப்படி விக்கிபீடியாவில் எழுதுவது? என்று கற்றுக் கொள்ளலாம் ! கற்றுக்கொண்டு எழுதத் தொடங்கலாம் ! பிறரையும் எழுத வைக்கலாம்.

வரும் நாட்களில் கூட, விக்கிபீடியாவில் பத்தாயிரம் கட்டுரைகளை வரை எழுதி இருக்கும் ஒரு பிரபலமான தமிழ் விக்கிபீடியா எழுத்தாளரை நேர்காணல் செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். இதுபோன்ற, பல “விக்கிபீடியா நாயகர்கள்” தொடர்ந்து கணியம்(kaniyam foundation)அறக்கட்டளையின் வாயிலாக, பொதுவெளிக்கு அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவை அனைத்திற்கும், அன்பு நண்பர்கள், வாசகர்கள் அனைவரிடத்திலும் நாங்கள் எதிர் நோக்குவது, உங்களது ஆதரவு மற்றும் கருத்துக்களை தான்!

நீங்கள் அங்கீகாரத்திற்காக பண உதவி செய்ய வேண்டாம் குறைகள் இருப்பின் தயங்காமல் தருவியுங்கள் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்து தொடர்ந்து தமிழின் ஆகச்சிறந்த தரவு களஞ்சியமாக விக்கிபீடியாவை மாற்ற எங்களுடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நாங்கள் என குறிப்பிடுவதற்கு பின்னால், நான் இதுவரை ஒரு கட்டுரை கூட விக்கிபீடியா தளத்தில் எழுதவில்லை ! என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், குறைந்தபட்சம் விக்கிபீடியாவில் எழுதுகின்ற ஆகச் சிறந்த நபர்களோடு சில வினாடிகள் உரையாடுகிற வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

அவர்களின் எழுத்தை ஊக்குவிக்கும் விதமாக, பாராட்டி கட்டுரை எழுதுவதை பெருமையாக கருதுகிறேன்.

பயணங்கள் தொடரட்டும், தொடர்ந்து தரவுகள் நிறையட்டும்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் :

ssktamil.wordpress.com

%d bloggers like this: