3D அச்சிடல் கட்டடக்கலையில் சிறிய அளவு மாதிரிகளை உருவாக்கப் பயன்படுகிறது
கட்டட உரிமையாளர்களுக்கு கட்டடக்கலை நிபுணர்கள் சிக்கலான வடிவமைப்புகளைக் காட்டி ஒப்புதல் பெறுவதற்கு சிறிய அளவு மாதிரிகள் மிகவும் பயனுள்ளவை. இது காணொளியைப் பார்ப்பதைவிட தத்ரூபமாக யாவருக்கும் புரியும். இத்தகைய சிறிய அளவு மாதிரிகளைக் குறைந்த செலவிலும் துரிதமாகவும் 3D அச்சிடல் மூலம் உருவாக்க இயலும்.
கட்டுமானத் துறையில் கற்காரை (concrete) பிதுக்கல்
இது கட்டடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கான வேகமான மற்றும் குறைந்த செலவு செயல்முறையாகும். கற்காரை அச்சிடுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட பெரிய அளவிலான 3D அச்சுப்பொறிகள் மூலம் அடித்தளங்களை உருவாக்கி சுவர்களைக் கட்டட மனையிலேயே நேரடியாகக் கட்டலாம். அல்லது கற்காரை பாகங்களை தொழிற்சாலையில் அச்சிட்டு உருவாக்கி பின்னர் வேலை தளத்தில் தொகுக்கலாம்.
3D அச்சிட்ட பாலங்கள்
2016 ஆம் ஆண்டில், ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் நகரத்தில் முதல் பாதசாரி பாலம் 3D அச்சிடப்பட்டது. இது 12 மீட்டர் நீளம் மற்றும் 1.75 மீட்டர் அகலத்தில் நுண்ணிய வலுவூட்டிய கற்காரையில் (micro-reinforced concrete) அச்சிடப்பட்டது. இது சர்வதேச கட்டுமானத் துறையில் ஒரு மைல்கல்லாக இருந்தது. பொது இடத்தில் பொதுப் பொறியியல் துறையில் 3D அச்சு தொழில்நுட்பத்தின் முதல் பெரிய அளவிலான பயன்பாடு ஆகும்.
2021 ஆம் ஆண்டில் உலகின் முதல் 3D அச்சிட்ட எஃகு பாலம் ஆம்ஸ்டர்டாமில் அறிமுகமாகியது. பாதசாரி போக்குவரத்தைக் கையாளும் அளவுக்குப் பெரிய மற்றும் வலிமையான 3D-அச்சிட்ட உலோக அமைப்பு இதற்கு முன் கட்டப்படவில்லை. இது கால்வாயின் குறுக்கே சுமார் 40 அடி நீளத்தில், வளைந்த 6-டன் துருப்பிடிக்காத எஃகு அமைப்பு.
இந்தியாவில் 3D அச்சிட்ட கட்டடங்கள்
கடந்த ஆண்டு (2022) ஆகஸ்டு மாதத்தில் சென்னை ஐஐடி (IIT) முன்னாள் மாணவர்களின் நிறுவனம் (Tvasta Construction) 3D அச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு 600 சதுர அடி வீட்டைக் கட்டினார்கள். இதற்கான 3D அச்சு இயந்திரத்தையும் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளார்கள். இதற்கு காரை (cement), மணல், ஜியோபாலிமர்கள் (geopolymers) மற்றும் இழைகள் (fibres) கொண்ட சிறப்பான பிதுக்கக்கூடிய (extrudable) கற்காரைக் கலவை தயாரித்துள்ளார்கள். சுவரை சேதப்படுத்தாமல் நீர்க்குழாய்கள் மற்றும் மின்கம்பிகள் போடத் தோதாகச் சுவர்களில் வெற்றிடம் (hollow) விட்டு வடிவமைத்திருக்கிறார்கள். இந்தக் கட்டுமானம் ஐந்தே நாட்களில் உருவாக்கப்பட்டது. இது செயல்படும் வீட்டைக் கட்டுவதற்கு இன்று செலவிடப்படும் மொத்த நேரத்தில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே ஆகும். மற்றும் தொழிலாளர் செலவுகள் மற்றும் பொருள் விரயத்தை வெகுவாகக் குறைக்கிறது. வழக்கமான கட்டட முறைகளில் வரும் கழிவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்குதான் இதில் வருகிறது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: உதிரி மற்றும் பதிலி பாகங்கள்
பல சந்தர்ப்பங்களில் பதிலி பாகம் (Replacement Part) மட்டும் தனியாகக் கிடைப்பதில்லை. பழைய எந்திரங்கள் மற்றும் சாதனங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைப்பதேயில்லை. பதிலி பாகம் தயாரிப்பு எடுத்துக்காட்டு.