வெடிக்கும் பேட்டரிகள்: காரணங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 25

இன்றைக்கு, நம்முடைய எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியின் 25 ஆவது கட்டுரையில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். அடிப்படையில,  எலக்ட்ரானிக்ஸ் துறை தொடர்பாக எவ்வித முன் அனுபவம் இல்லாமல் என்னால் தொடங்கப்பட்ட இந்த எலக்ட்ரானிக்ஸ் தொடரானது, தற்பொழுது 25வது கட்டுரையை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது.

இதற்கு ஆக்கமும்,ஊக்கமும் அளித்த அனைவருக்கும் மற்றும் வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த எளியவனின் பயணம் மென்மேலும் தொடரும்.

என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க விரும்பினால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

தொடர்ந்து பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்தும், நாம் கட்டுரைகளில் படித்து வருகிறோம். நமது கணியம் அறக்கட்டளையின் இணையதளத்திலேயே மின்கலன்கள் குறித்து திரு.இரா.அசோகன் அவர்கள் எழுதி வருகிறார்கள்.

நான் பெரும்பாலும், எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் மின்கலன்கள் குறித்து எழுதியது கிடையாது. ஆனால், தற்பொழுது தினம் தோறும் செய்திகளில் வெடிக்கும் பேட்டரிகள் என தலைப்புகள் வைத்து பரபரப்பு செய்திகள் வெளியிடப்படுவதை அடிக்கடி கவனிக்க முடிகிறது.

இரவோடு,இரவாக சார்ஜ் செய்யப்பட்டு இருந்தும் மொபைல் போன் பேட்டரி வெடித்து மாணவர் பலி. கையில் வைத்துக் கொண்டிருந்த மொபைல் போன் வெடித்து, உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மாணவிக்கு மருத்துவமனையில் அனுமதி என தினம் தோறும் படித்து வருகிறோம்.

இந்த கட்டுரையில் பேட்டரிகளின் செயல்பாடு விதம் குறித்து,நாம் பெரிய அளவில் விவாதிக்கப் போவதில்லை. அது குறித்து நீங்கள் படிக்க விரும்பினால், கணியம் அறக்கட்டளையில் வெளியாக கூடிய மின்கலன்கள் தொடர்பான திரு. இரா அசோகன் அவர்கள் எழுதும் தொடரை பார்வையிடுங்கள்.

சரி! நம்முடைய கேள்விக்கு வருவோம்! எதனால் பேட்டரிகள் வெடிக்கிறது? பேட்டரிகள் வெடிப்பதற்கு நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன.

தொடக்கத்திலேயே புதிர் போடுகிறேன் என யோசித்து விட வேண்டாம்! உண்மையிலேயே ஒரு பேட்டரி இதனால்தான் வெடிக்கிறது என குறிப்பிட்டு விட முடியாது.

தற்காலத்தில், லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகளில் மொபைல் போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

லித்தியம் அயன் பேட்டரி மற்றும் லித்தியம் பாலிமர் பேட்டரி ஆகியவை தான் நாம் அடிக்கடி கேட்கக்கூடிய பெயர்களாக இருக்கின்றன.

இந்த இரண்டு வகையான பேட்டரிகளுமே எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை. ஆம்! இவற்றின் மேல் இருக்கக்கூடிய பாதுகாப்பு உறையானது நீக்கப்படும் போது, இவை எளிமையாக தீப்பிடித்து விடுகின்றன.

வளிமண்டல காற்றோடு நேரடியாக வினை புரியும் போது, எளிமையாக தீப்பற்றக்கூடிய பொருளாகவே லித்தியம் பேட்டரிகள் அறியப்படுகின்றன.

ஆகவே! பழைய பேட்டரிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவது சிறப்பு.

அடுத்தபடியாக எழக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை, தரம் குறைந்த பேட்டரிகளை வாங்குவது. உங்களுடைய மொபைல் போனில் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பேட்டரியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு, அதை நீங்கள் சரி செய்ய முற்பட்டால், சரியான மற்றும் பொருத்தமான பேட்டரியை தேர்வு செய்ய வேண்டும்.

500 ரூபாய்க்கு கிடைக்கிறது! மற்றும் முந்தைய பேட்டரியை விடவும் அதிக நேரம் பயன்படுத்தலாம் என கடைக்காரர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு,ஏதோ ஒரு பேட்டரியை வாங்கி மொபைல் போனில் போட்டு விடாதீர்கள்.

முன்புள்ள மொபைல் போன்களைப் போல தற்போது பேட்டரிகளை கழற்ற கூட முடியாது.எனவே, உள்ளே வெப்பமாகும் பட்சத்தில் நீங்கள் கவனிக்காமலேயே உங்கள் கைகளில் இருந்தே வெடிக்கின்ற அபாயம் இருக்கிறது.

அதேநேரம், ஒரு மொபைல் போனில் பேட்டரி மாற்றி சில நாட்களிலேயே பேட்டரியில் பிரச்சனை ஏற்படுகிறது என்றால்! உங்கள் மொபைல் போனின் இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கவனிப்பது சிறப்பு. ஏனெனில், உங்களுடைய மொபைல் போனின் எலக்ட்ரானிக் அமைப்புகளில் ஏற்படும் ஏதாவது பிரச்சனையின் காரணமாக கூட, உங்கள் மொபைல் ஃபோனின் பேட்டரியில் பிரச்சனையை ஏற்படக்கூடும்.

இதற்காகத்தான், பொதுவாகவே அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களுக்கு சென்று சரி பார்த்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், உங்களுடைய மொபைல் போனுக்கான சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனுக்கு, வேறு ஒரு நிறுவனத்தின் 90 வாட் அளவிலான சார்ஜரை பயன்படுத்தியதாகச் சொன்னார்.

மேற்படி, அவர் பயன்படுத்தக்கூடிய மொபைல் போனின் பேட்டரி தாங்கக்கூடிய மின்சாரத்தின் அளவு வெறும் 18 வாட் தான்.

இதனால், கைக்கு வந்து சில நாட்களே ஆன மொபைல் போனின் பேட்டரி, காற்றடைத்த பலூன் போல பெரிதாகிவிட்டது கவனிக்க முடிகிறது.

மேலும், இத்தகைய தவறான மின் ஆற்றல் குறியீடு(wrong power rating) கொண்ட சார்ஜர்களை பயன்படுத்தும் போது, மொபைல் போனில் உள்ள எலக்ட்ரானிக் அமைப்புகளும் பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக ஏற்படக்கூடிய மிக முக்கியமான, பிரச்சனை மொபைல் போன்கள் தண்ணீரில் விழுவது. உங்கள் மொபைல் போனிற்குள் தண்ணீர் சென்றிருக்கிறது! என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அதை சர்வீஸ் செய்து விடுவது பரிந்துரைக்கப்படுகிறது.

ஒருவேளை, உங்களுடைய மொபைல் போனில் சிறந்த தண்ணீர் தடுப்பு அமைப்பு இருந்தாலும்(water resistant) கூட, அதிகப்படியான தண்ணீர் உள்ளே நுழையும் போது பேட்டரிகளின் மின் முனைகளின் இடையே நேரடியாக இணைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அடுத்தபடியாக, உங்களுடைய மொபைல் போன்கள் கையில் இருந்து கீழே விழுந்து உங்கள் கண்களுக்கு தெரியும் படியாக வெளியில் சேதம் ஏற்பட்டு இருந்தால், உடனடியாக அந்த மொபைல் போனை சர்வீஸ் செய்து விடுவது நல்லது.

இதன் காரணமாக கூட, மொபைல் பேட்டரியின் இணைப்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம். ஒழுங்காக மின்னாற்றல் செல்லாமல், பேட்டரி பெரிதாகி வெடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நண்பர்கள் பலரும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் போலவே, வெறும் 500 ரூபாய்க்கு கிடைக்க விடக்கூடிய போலி வாட்சை வாங்கி, கைகளில் கட்டிக்கொண்டு அலைவதை பார்க்க முடிகிறது.

தயவு செய்து, இது போன்ற போலியான மற்றும் முறையான நிறுவனத்தால் தயாரிக்கப்படாத எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தாதீர்கள்.

அதனுள் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பேட்டரிகள் மிகவும் குறைந்த தரத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கும். நீங்கள் அதை சரியாக பராமரிக்காவிட்டால், கையில் இருந்தே வெடிக்க கூடிய அபாயம் இருக்கிறது.

இதே வரைமுறையானது, காதில் பயன்படுத்தக்கூடிய இயர்போன்களுக்கும் பொருந்தும்.

என்னிடம் கேட்கப் போனால், பேட்டரிகள் இல்லாத சாதாரண கம்பி இயர்போன்களை(normal wired earphones)பயன்படுத்துவது சிறப்பானது.

மேலும், உங்களுடைய மொபைல் போன் திரையில் வழக்கத்திற்கு மாறாக அழுத்தம் அதிகமாக இருப்பதாக, நீங்கள் உணர்ந்தால் உடனடியாக கவனிப்பது சாலச் சிறந்தது. பேட்டரி பெரிதாகி வருவதன் காரணமாகத்தான் இத்தகைய அழுத்தம் ஏற்படும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக ,நம்மை விட்டு இன்னும் நீங்காத ஒரு கெட்ட பழக்கம் விடிய விடிய மொபைல் போனுக்கு சார்ஜ் போடுவது!

ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது போல, நீங்கள் இப்படி ஓவர் நைட்டாக சார்ஜ் போடும்போது, உங்கள் வீட்டிலேயே ஒரு ரெடிமேட் வெடிகுண்டை தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்! என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும், மொபைல் ஃபோன்களுக்கு இறுக்கமான கவசங்கள்(mobile cases)அணிவதையும் தவிர்க்கவும்.

அதேபோல, மொபைல் கவசங்களுக்கு உள்ளே உங்கள் வீட்டிற்கு தெரியாமல் பணத்தை ஒழித்து வைப்பதையும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அப்படி வெப்பம் அதிகமானால், முதலில் தீ பிடிப்பது ரூபாய் தாளாகத்தான் இருக்கும்.

எனக்குத் தெரிந்த பெரும்பாலான பாதுகாப்பு வழிகளை, இங்கே உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

மேலும், மொபைல் போன் சார்ஜ் செய்து கொண்டிருக்கும்போதே பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டியது முக்கியமானது..

அனைவரும் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்! உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மேலும், உங்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் தெரிந்திருந்தால், தயங்காமல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேற்படி, இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரியை அணுகவும்.

மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் சந்திக்கலாம்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

%d bloggers like this: