நமது கணியம் அறக்கட்டளையின் கீழ் உள்ள, இலவச புத்தக இணையதளத்திலிருந்து பல வகையான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படித்திருப்பீர்கள்.
மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருமே, pdf வடிவிலான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து படிப்பதை பார்க்க முடிகிறது.
வழக்கமாக, மொபைல் செய்திகளிலேயே pdf viewer or file viewer செயலிகள் காணப்படுகின்றன.
ஆனால், பெரும்பாலானவற்றில் அதிகப்படியான விளம்பரங்கள் காணப்படுவதை கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, வயதானவர்கள் இத்தகைய செயலிகளை பயன்படுத்தி புத்தகங்களை படிக்க விரும்பினால், பக்கத்திற்கு,பக்கம் திருப்புவதற்குள் விளம்பரம் வந்து அவர்களை பாடாய்ப் படுத்தி விடும்.
அனைத்து இடங்களுக்கும், லேப்டாப் போன்ற பெரிய கருவிகளை தூக்கி செல்லவும் முடியாது. எளிமையாக புத்தகங்கள் படிப்பதற்கும், உங்களிடம் இருக்கும் கோப்புகள் ஆவணங்களை சரி பார்ப்பதற்கும், பாதுகாப்பான, நம்பகமான, கட்டற்ற செயல் இருக்கிறதா? எனும் தேடுதல் உங்களுக்குள் இருந்திருக்க கூடும்.
நானும், இத்தகைய ஒரு செயலியை தேடிக்கொண்டிருந்தேன். எதேர்ச்சியாக அன்றைக்கு fdroid தளத்தில் chaka reader எனும் செயலியை கண்டுபிடித்தேன்.
Pdf, Epub, Mobi, Cbz, Fb2 and Xps என பெரும்பாலான வகையிலான கோப்புகள் அனைத்தையும் இதன் மூலம் திறந்து பார்க்க முடியும். நான் என்னுடைய மொபைல் போனில் கணியம் அறக்கட்டளையின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்யும்போது, தெரியாமல் Epub வகையிலான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து விடுவேன்.
இத்தகைய புத்தகங்களை திறக்க முடியாமல் தவித்த, பல நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன.
இந்த செயலி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. பக்கத்திற்கு, பக்கம் எளிமையாக திருப்பி மேலும் எழுத்துக்களை பெரிதாக்கி படித்துக் கொள்ள முடிகிறது.
மேலும், ஆங்கில ஆவணங்களில் இருந்து எழுத்துக்களை copy paste செய்யும் வசதியும் காணப்படுகிறது.
நான் பார்த்த வரையில், தமிழ் ஆவணங்களில் இதை பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது.
மேலும், ஆங்கில ஆவணங்களில் ஒரு குறிப்பிட்ட பெயரைக் கொண்டு ஆவணத்தில் தேடவும் முடிகிறது.
உதாரணமாக, மிகப்பெரிய 500 பக்கம் கொண்ட புத்தகத்தில் கூட குறிப்பிட்ட தலைப்பை தேடி எடுத்துவிட முடியும்.
இதுபோன்ற செயலிகள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிக,மிக பயனுள்ளதாகவும் இருக்கும்.
அந்த செயலியை நான் பயன்படுத்திய போது, எடுத்த சில திரை புகைப்படங்களை(screen shot)கீழே இணைத்திருக்கிறேன்.
மேற்கண்ட செயலியின் இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
f-droid.org/packages/net.timelegend.chaka.viewer.app/
மேற்படி கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.
உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com