எளிய தமிழில் Computer Vision 25. தரம் பிரித்தல் மற்றும் வகைப்படுத்தல்

ஜவுளித் தொழிற்சாலை மற்றும் கிடங்குகளில் ரகவாரியாகப்பிரித்தல்

ஜவுளித் தொழிற்சாலை மற்றும் கிடங்குகளில் வண்ணம் மற்றும் வடிவமைப்புபடி எண்ணுதல் மற்றும் ரகவாரியாகப் பிரித்தல் வேலைகளை கணினிப்பார்வை மூலம் செய்வதால் செலவைக் குறைக்க முடியும். இதற்கு நம் கணினிப்பார்வை அமைப்பு முதலில் செலுத்துப் பட்டையில் நகரும் ஜவுளிகளின் படத்தைப் பிடிக்கிறது. அடுத்து விளிம்பு கண்டறிதலைப் பயன்படுத்தி வடிவங்களை அடையாளம் காண்கிறது. கடைசியில் நாம் முன்னர் பார்த்தபடி ஹ்யூ உருமாற்றம் (Hough transform) பயன்படுத்தி வடிவியல்வாரியாகப் பிரித்தெடுக்கிறது.

துணிகளின் நெசவமைப்பு

துணிகளின் நெசவமைப்பு

விலங்குத்தோல், மரப்பலகை போன்ற இயற்கைப் பொருட்களை பழுது வாரியாகப் பிரித்தல் 

காலணி, கைப்பை போன்ற பல தயாரிப்புகளுக்கு விலங்குத்தோல் (Leather) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செயல்முறைக்குத் தகுதியான பகுதியின் அளவை அடிப்படையாகக் கொண்டு விலங்குத்தோலை பல தர நிலைகளாக வகைப்படுத்த வேண்டும். இதன்படி தரநிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. விலங்குத்தோல் ஒவ்வொன்றின் விலையும் அதன் தரத்தின்படி இருப்பதால், ஒவ்வொரு வர்த்தக பரிவர்த்தனைக்கும் சச்சரவுகளைக் குறைக்க இதுபோன்ற வழிகாட்டுதல்கள் நிறுவப்பட்டுள்ளன.

இது தொடர்பான பேச்சுவார்த்தை எப்போதும் விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கிடையே கூடுதல் செலவு மற்றும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. வழக்கமாக குறைபாடுள்ள பகுதிகளை (defective areas) அனுபவமிக்க வல்லுநர்கள் கைமுறையாகக் குறிப்பார்கள். இந்த செயல்முறை நம்பகமானதல்ல, ஏனெனில் இது தனிநபர் அபிப்பிராயத்தை அதிகம் சார்ந்துள்ளது.

இன்றுவரை, தொழில்களில் குறைபாடு கண்டறிதல் மற்றும் அடையாளம் குறிக்கும் நடைமுறைகள் இன்னும் அதிகம் பயிற்சி பெற்ற ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இம்மாதிரி குறைபாடுகளை அடையாளம் குறிக்கும் பணிகளின் சர்ச்சையையும், செலவையும் குறைக்க இயந்திரப் பார்வை நுட்பம் அவசியம்.

தரவாரியாக வரிசைப்படுத்தல் மற்றும் எண்ணுதல் (Sorting and counting)

சென்னையிலுள்ள தயாரிப்பு நிறுவனம் என்ஜின் தயாரிப்பாளர்களுக்குத் தேவையான பல்வேறு வகையான பிஸ்டன் வளையங்களைத் (piston rings) தயாரித்து சரியான எண் மற்றும் வகைகளில் தொகுத்து அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு தொகுப்பிலும் வளையங்களை வரிசைப்படுத்துவதும் எண்ணுவதும் வேலைகொள்வதாகவும் அதிக நேரம் எடுப்பதாகவும் இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு தொகுதியிலும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வளையங்கள் குறைந்தபட்ச அகலம் 0.3 மிமீ முதல் 0.8 மிமீ அகலம் வரை வேறுபடுகின்றன. வளையங்களின் துல்லியமான எண்ணிக்கையைக் கணக்கிடுவது மிகவும் முக்கியமானது. மேலும் இது பிஸ்டன் தொகுக்கும்போது குழப்பத்தைத் தவிர்க்க உதவுகிறது. ஏனெனில் தொகுப்பில் கூடுதல் வளையங்கள் இருந்தாலும் அல்லது போதுமான வளையங்கள் இல்லாவிட்டாலும் தொகுப்பைக் கைமுறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

ஆகவே இந்த வேலைக்கு கணினிப்பார்வை அமைப்பை இந்தத் தொழிற்சாலையில் நிறுவினர். இது மென்பொருள் விளிம்புகளைக் கண்டுபிடிப்பதன்மூலம் வளையங்களைக் கணக்கிடுகிறது. முன்னர் நூறுக்கு மேற்பட்ட வளையங்களைக் கைமுறையாக எண்ணுவது ஐந்து நிமிடங்களுக்கு மேல் எடுத்தது. இந்தத் தானியங்கி இயந்திரம் பத்து வினாடிகளில் இப்பணியை முடிக்கிறது.

  1. Woven Fabric Pattern Recognition and Classification

இத்தொடரில் அடுத்த கட்டுரை: மேற்பரப்பு குறைபாடு சோதனை (surface defect inspection)

2D மற்றும் 3D மேற்பரப்பு குறைபாடு சோதனை (surface defect inspection). பூச்சு தடிமன் அளவிடுதல் (Measuring coating thickness).

ashokramach@gmail.com

%d bloggers like this: