சோடியம் அயனி மின்கலம் செலவும் குறைவு, மூலப்பொருளும் எளிதில் கிடைக்கும்
லித்தியம் அயனி மின்கலம் போன்றே சோடியம் அயனி மின்கலமும் ஒரு வகையான மீள் மின்னேற்றத்தக்க மின்கலம் ஆகும். இது லித்தியத்துக்குப் பதிலாக சோடியத்தைப் பயன்படுத்துகிறது. சமையல் உப்பிலிருந்து சோடியம் தயாரிக்கலாம். ஆகவே இதற்கு செலவு குறைவு. மேலும் லித்தியம் போன்று ஓரிரு நாடுகளில் ஓரிரு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியது இல்லை. லித்தியம் அயனி மின்கலத்தைவிட தீப்பிடிக்கும் வாய்ப்பு குறைவு. மேலும் அதிகக் குளிர் நாடுகளிலும் பிரச்சினை இல்லாமல் வேலை செய்யும்.
ஆகவே சோடியம் அயனி மின்கலங்கள் இம்மாதிரிப் பல பொருளாதார நன்மைகள் காரணமாக கவனத்தை ஈர்த்து வருகின்றன.
… ஆனால் ஆற்றல் அடர்த்தி குறைவு
இருப்பினும், இவற்றின் ஆற்றல் அடர்த்தி லித்தியம் அயனி மின்கலங்களைவிட 30 முதல் 40 விழுக்காடுகள் குறைவு. இதன் காரணமாக அதே அளவு ஆற்றலுக்கு இவை அதிக இடத்தை அடைக்கும், அதிக எடையும் கொண்டிருக்கும். இது தவிர மீண்டும் மீண்டும் மின்னேற்றமும், மின்னிறக்கமும் செய்யும்போது இவற்றின் ஆற்றல் விரைவில் குறைந்துவிடுகிறது. இந்தக் காரணங்களால் ஓடுதூரம் மிகவும் குறைந்துவிடும். தற்போது இவற்றை மேம்படுத்துவதில் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். முதல்முறையாக இரண்டு தயாரிப்பாளர்கள் சோடியம் அயனி மின்கலங்களை வைத்து கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
லித்தியம் அயனி திடநிலை மின்கலம்
லித்தியம் அயனி மின்கலங்களில் திரவம் அல்லது கூழ் போன்ற (gel) மின்பகுபொருளைப் (electrolyte) பயன்படுத்துகிறோம். இதற்குப் பதிலாக திடநிலை மின்பகுபொருளைப் பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த திடநிலை மின்பகுபொருள் வைத்த லித்தியம் அயனி மின்கலங்கள் ஏற்கனவே இதய முடுக்கிகள் (pacemakers), வானலை அடையாளம் (RFID) போன்ற சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மின்னேற்றும் நேரம் குறையும், திறன் அதிகம், மேலும் தீப்பிடிக்கும் ஆபத்து குறைவு. ஆனால் தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து திடநிலை மின்கலங்களைப் பெரிய அளவில் உற்பத்தி செய்வது செலவும் அதிகம், கடினமானதும்கூட.
ஹைட்ரஜன் வேதி (Hydrogen Fuel Cell) மின்கலம்
ஹைட்ரஜன் வேதி மின்கல மின்னூர்திகளைப் பெட்ரோல் டீசல் மின்னூர்திகள் போலவே நாம் பயணம் செல்லும் வழியில் ஹைட்ரஜன் நிரப்பிக்கொண்டு தொடர்ந்து பயணிக்க இயலும். மாநிலங்களுக்கு இடையேயான நெடுந்தூரப் பேருந்துகளுக்கும் சரக்குந்துகளுக்கும் இந்தத் தொழில்நுட்பமே மிகவும் உசிதமானது.
ஆனால் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் ஹைட்ரஜன் நிரப்பும் நிலையங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு முதலீடு அதிகம் செய்யவேண்டும் ஆகவே இது மெதுவாகத்தான் நடக்கும்.
நன்றி
இத்துடன் இக்கட்டுரைத் தொடர் முற்றும்!