ஒரு கட்டற்ற மென்பொருள் மேதையின் மறைவு…

 

 

கென்னத் கான்ஸல்வேஸ் – கட்டற்ற மென்பொருள் மடலாடற்குழுக்களில் சிறிதளவேனும் பங்குகொண்டோருக்கு இந்தப் பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். சென்னை லினக்ஸ் பயனர் குழு உள்பட பல குழுக்களுக்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. இத்தகைய மாமனிதர் இப்பொழுது நம்மிடையே இல்லை. அவரது மறைவு கட்டற்ற மென்ம உலகில் பலருக்கு ஈடு செய்யமுடியாப் பேரிழப்பு. கணியம் குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது மகத்தான பங்களிப்புகளையும் இங்கே நினைவுகூர்கிறது.

கென்னத் கான்ஸல்வேஸ் உதகையில் பிறந்த ஒரு கட்டற்ற மென்ம ஆர்வலர், பயிற்சியாளர், எழுத்தாளர், வழக்கறிஞர், கோல்ஃப் விளையாட்டு வீரர் என்று பன்முகத் திறமையாளர். இந்தியன் பைத்தன் சாப்ட்வேர் சொசைட்டியின் (Indian Python Software Society) நிறுவனத் தலைவரான இவர் கோயம்புத்தூர் லினக்ஸ் பயனர் குழு, சென்னை பைத்தன் பயனர் குழு உள்ளிட்ட பல்வேறு கட்டற்ற மென்பொருள் குழுமங்களை நிறுவியுள்ளார். NRCFOSS-ன் AU-KBC ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய இவர், பின்னர் ஊட்டியில் பைத்தன்-ஜாங்கோ (django) பயிற்சி மையம் ஒன்றை நடத்திவந்தார். 2003 முதல் இந்திய கோல்ஃப் ஒன்றியத்தின் நடுவர் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

சுயசரிதை

இது கென்னத் அவர்கள் தன்னைப் பற்றித் தானே எழுதியது

தகவல் தொழில்நுட்பத்துறையில் முறையான பயிற்சி இல்லாவிட்டாலும் 1986 முதல் நிரல்கள் எழுதி வருகிறார். டர்போ பாஸ்கல்-இல் தொடங்கி, பின்னர் பெர்ல் கற்று, இறுதியாக 2003-ல் பைத்தனுக்கு மாறியவர். அதுமுதல் பைத்தானில் – குறிப்பாக ஜாங்கோவில் – கவனம் செலுத்தி வருகிறார். 1995-ல் ஓப்பன் சோர்ஸ்-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது முதல் அதுபற்றித் தொடர்ந்துப் பேசியும் எழுதியும் வருகிறார். பைத்தன் மற்றும் ஜாங்கோ பற்றி 50-க்கும் மேற்பட்ட கருத்தரங்கங்களையும் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தியிருக்கிறார். இந்தியன் பைத்தன் சாப்ட்வேர் சொசைட்டியின் நிறுவனத் தலைவராகவும் 2009 முதல் 2011 வரை பல பைத்தன் மாநாடுகளை வெற்றிகரமாக நடத்திய குழுவில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இப்போது ஊட்டியில் வசிக்கிறார், ஓப்பன் சோர்ஸ் பற்றி எழுதியும் ஆலோசனைகள் வழங்கியும் வருகிறார். பைத்தான் மற்றும் ஜாங்கோவில் பணிசார்ந்த வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இவரது மற்றொரு முக்கியமான ஆர்வம் கோல்ஃப் விளையாட்டு. கோல்ஃப் நடுவருக்கான சர்வதேசச் சான்றிதழ் பெற்றுள்ள இவர் பல தேசிய அளவிலான கோல்ஃப் போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். லினக்ஸ் ஃபார் யூ மாத இதழில் “Foss is fun” என்ற தலைப்பில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது பெரும்பாலான நிரலாக்கப் பங்களிப்புகள் bitbucket.org/lawgon/ இங்கு இருக்கின்றன.

கல்வி : கென்னத் அவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் வேதியியல் இளங்கலைப் பட்டம் (1968-1971) பெற்றுள்ளார்.

FOSS-ற்கு பங்களிப்பு

கட்டற்ற/திறமூல மென்பொருட்களைப் பயன்படுத்துவதே அவற்றிற்கான பங்களிப்புதான் என்பது கென்னத் அவர்களின் கருத்து. அவரும் அவரது குடும்பத்தினரும் அன்றாடக் கணினித் தேவைகளுக்கு லினக்ஸ் இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றனர். மேலும் கென்னத் அவர்கள் பல கட்டற்ற மென்பொருள் பணித் திட்டங்களுக்குப் பங்களித்துள்ளார். Openstreetmap-ற்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒரு GPS கருவியைக் கொண்டு சென்று அவ்விடங்களை மேப்பில் சேர்த்துள்ளார். எம்.ஐ.டி கல்லூரியின் வரைபடம் இதற்கொரு நல்ல உதாரணம். அந்த வளாகத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அவர் அவ்வளாகத்தின் முழு அமைப்பையும் வரைபடத்தில் மேப்பிங் செய்துள்ளார்.

இந்தியன் பைத்தான் சாப்ட்வேர் சொசைட்டியை நிறுவியதில் முக்கியப் பங்காற்றியவர் அவர். இந்த அமைப்பை பதிவு செய்து நடத்துவதற்கான சட்டரீதியான வழிமுறைகள் அனைத்தையும் மேற்கொண்டார். இவ்வமைப்பின் உறுப்பினர் பட்டியலைக் கையாளுவதற்காக ஒரு மென்பொருளையும், 2009-ல் நடைபெற்ற முதல் இந்திய பைத்தன் மாநாட்டிற்கான மென்பொருளையும் (சென்னையில் FOSSCONF-ற்காக இவர் உருவாக்கிய மென்பொருளை அடிப்படையாக் கொண்டு) உருவாக்கினார்.

NRCFOSS-ன் AU-KBC வளாகத்தில் பணியாற்றியபோது பொறியியல் பாடத்திட்டங்களில் கட்டற்ற/திறமூல மென்பொருட்களைப் பற்றியபாடங்களைச் சேர்த்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். மும்பையில் NRCFOSS தொடங்கவும் இவர் உழைத்துள்ளார்.

படைப்புகள்

பேரிழப்பு

இத்தகைய மாமனிதரின் மறைவு சமுதாயத்திற்குப் பேரிழப்பு. அவர் பங்கேற்ற அனைத்து மடலாடற்குழுக்களும் இனி அவரில்லாமல் சற்று வெறிச்சோடித்தான் போகும். கட்டற்ற மென்பொருட்களுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்து அன்னாரிற்கு நமக்கு நன்றியை வெளிப்படுத்துவோமாக!

%d bloggers like this: