நமது செயல்களை எளிமையாக்க ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் விலை கொடுத்து வாங்கினாலும், நிறுவும் போது சில கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக்கொள்வோம். I agree என்ற பட்டனுக்கு மேலே உள்ள உரையை யாரும் படிக்க மாட்டோம். அதில் கீழ்காணும் வகையில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
‘இந்த மென்பொருளை ஒரே ஒரு கணினியில் மட்டுமே நிறுவுவேன். வேறு யாருக்கும் தரவே மாட்டேன். நிறுவனத்தின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்கிறேன்.’
சிறு வயதில் இருந்தே உணவு, இனிப்பு என நம்மிடம் இருக்கும் அனைத்தையும் பிறருடன் பகிர்ந்து வாழும் நாம், மென்பொருளை மட்டும் யாருக்கும் தரக்கூடாதாம்.
இந்த நிலைக்கு முடிவு கட்ட வந்தவையே ‘கட்டற்ற மென்பொருட்கள்‘ (Free / Open Source Software ).
இங்கு Free என்பது இலவசம் அல்ல. Freedom எனும் உரிமை ஆகும்.
இவை நமக்கு 4 உரிமைகள் தருகின்றன.
1. எங்கு வேண்டுமானாலும் மென்பொருளை பயன்படுத்தும் உரிமை.
2. எவரிடமும் பகிர்ந்து கொள்ளும் உரிமை.
3. மூல நிரலை (source code) பெறும் உரிமை.
4. மூல நிரலை மாற்றி வெளியிடும் உரிமை.
குனூ/லினக்ஸ் இயக்குதளம் முழுதும், அதில் இயங்கும் பல்லாயிரம் மென்பொருட்கள் அனைத்தும் இதே உரிமையில் வெளிவருகின்றன. தனியார் நிறுவனத்தில் உருவாகாமல், பொதுமக்களால் மட்டுமே உருவாக்கப்படுவதால் இந்த உரிமைகள் நமக்கு கிடைக்கின்றன. எல்லா துறைகளிலும் கட்டற்ற மென்பொருட்கள் இன்று கிடைக்கின்றன.
பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் GCompris எனும் மென்பொருள் பற்றி இங்கு காண்போம்.
GCompris என்பது UCMAS போன்ற கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளுக்கு இணையானது. இது 2 முதல் 10 வயது வரையான குழந்தைகளுக்கானது. 100க்கும் மேற்பட்ட பல்வேறு விளையாட்டுகள், செயல்கள் மூலம் கணிதம், ஆங்கிலம், எண்கள், வடிவங்கள், நிறங்கள், புவியியல், அறிவியல், இயற்பியல், அல்ஜீப்ரா, ஒவியம் வரைதல், நேரம் அறிதல் போன்ற பலவற்றை கற்றுத்தருகிறது.
இதை உபுண்டு லினக்ஸில், “Ubuntu Software Center” என்ற மென்பொருளில் தேடி நிறுவிக்கொள்ளலாம்.
வாருங்கள். குழந்தைகளின் வண்ண மயமான உலகிற்கு சென்று, அவர்களுக்கு புரியும் வகையில், புதிய விளையாட்டுகளோடு, அறிவியலை அறிமுகம் செய்வோம்.
Python Programming மொழி அறிந்தோர் தமக்கு தேவையான விளையாட்டுகளையும், செயல்களையும் எளிதில் உருவாக்கலாம். கட்டற்ற உரிமையுடன் வருவதால், இந்த மென்பொருளை எந்த மொழியிலும் மொழிமாற்றம் செய்யலாம். தமிழில் மொழிமாற்றம் செய்ய ஆர்வமுள்ளோர் எம்மை அணுகலாம்.
ஸ்ரீனிவாசன்
இணைப்புகள்.
apps.ubuntu.com/cat/applications/precise/gcompris/
படங்கள்