பழைய டிவியின் திரைகள், எவ்வாறு வேலை செய்தன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 22

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல கட்டுரைகள் குறித்து நாம் விவாதித்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாம் விவாதிக்க இருக்கக்கூடிய கட்டுரை நம்மில் பலருக்கும் பழைய நினைவுகளை கொண்டு வரும் என நம்புகிறேன்.

சரி! அதற்கெல்லாம் முன்பாக வழக்கம் போல என்னுடைய இன்னபிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை, நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

kaniyam.com/category/basic-electronics/

1990களில் தான், தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இந்தியாவில் தொடங்கியது. அதற்கு முன்பெல்லாம், பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை கண்டு ரசித்த நெஞ்சங்கள் பலரும், இந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தக் கட்டுரை எலக்ட்ரானிக்ஸ் என்கிற துறையினையும் கடந்து, உங்கள் அனைவர் மத்தியில் இருக்கக்கூடிய நினைவுகளை சற்று சீர்தூக்கிப் பார்க்க செய்யும்.

அப்பொழுதெல்லாம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்ததில்லை! கண்ணைக் கவரும் எல்இடி விளக்குகள் இருந்ததில்லை! குண்டு பல்பு என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் டெக்ஸ்டைன் விளக்குகளும், கருப்பு வெள்ளை திரையிலான தொலைக்காட்சி பெட்டிகளுமே இருந்தன.

பெரும்பாலும் ஜப்பானிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களின், தொலைக்காட்சி பெட்டிகளே இந்திய வீடுகளை அலங்கரித்து வந்தன.

தற்போது உள்ளது போல், ott தளங்களோ இணைய வசதியோ இல்லை. வீட்டின் கூரைமேல் இருக்கும் ஆண்டெனாவை கொண்டு, எவ்வித கட்டணமும் இன்றி தூர்தர்ஷன் தொலைக்காட்சியை இலவசமாக பார்க்கலாம்.

இவ்வளவு தூரம் நம் நினைவுகளோடு ஒன்றிப்போன சி ஆர் டி தொலைக்காட்சிகள் எவ்வாறு வேலை செய்கின்றன? என்பதை எளிமையாக தற்போது காணலாம்.

பார்ப்பதற்கு கோள வடிவில் கண்ணாடி குடுவையைப் போல் இருக்கும் அப்போதையே சி ஆர் டி டிவிகள். ஒவ்வொரு டிவியும் சுமார் 10 கிலோவுக்கு அதிகமாக எடை இருக்கும்.

முன்பக்கம் படம் தெரியக்கூடிய பகுதியை பிக்சர் டியூப்(picture tube)என அப்பொழுது அழைப்பார்கள். அடிப்படையில், இந்த பிக்சர் டியூபுக்குள் தான் நாம் பார்த்து ரசித்த பல பிச்சர்களும் அடங்கியிருக்கிறது.

இன்றைக்கு நாம் எல்இடி விளக்குகள் பயன்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான், உண்மையில் சிஆர்டி தொலைக்காட்சிகளிலும் பயன்படுத்தப்பட்டது. சி ஆர் டி என்பதன் முழு விரிவாக்கமானது காத்தோடு கதிர் குழாய்(cathode ray oscilloscope)என பொருள்படும்.

எலக்ட்ரான்களை மோதச் செய்து, அவற்றை ஒரு மையப் புள்ளியில் குவிப்பதன் மூலம் ஒளியானது வெளிப்படுகிறது. இதை, நாம் எல் இ டி விளக்குகள் தொடர்பான கட்டுரையிலேயே விவாதித்திருப்போம்.

உண்மையில், சி ஆர் டி தொலைக்காட்சிகளுக்கு உள்ளும் எலக்ட்ரான்களை சுடக்கூடிய ஒரு துப்பாக்கி தான்(electron gun)இருக்கும்.

திரைப்படங்களில் வரும் துப்பாக்கிச் சண்டை காட்சிகளை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது, இந்த எலக்ட்ரான் துப்பாக்கி தான். இந்த எலக்ட்ரான் துப்பாக்கியில் இருந்து அதி வேகத்தில் எலக்ட்ரான்கள் சுடப்படும்.

அவற்றை சுற்றி காந்தப்புலத்தை ஏற்படுத்துவதற்கான, கம்பிச்சுருள்கள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த கம்பிச்சுருள்கள் எலக்ட்ரானிக் துப்பாக்கியில் இருந்து வெளியாகும் காத்தோடு கதிர்களை குறிப்பிட்ட பகுதிகளில் குவியச் செய்யும்.

நாம் பார்க்கக்கூடிய கருப்பு திரையில், இந்த கதிர்களை உருவாக்கிக் கொள்வதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கும்.

கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளில், ஒரே நிறத்தில் எலக்ட்ரான்களை வெளியிடக்கூடிய துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

ஆனால், அதற்குப் பின்பு வந்த கலர் தொலைக்காட்சிகளில் ஒன்றல்ல! இரண்டல்ல! மூன்று துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. சிவப்பு,பச்சை மற்றும் நீல நிறங்களில் எலக்ட்ரான்களை வெளியிடக்கூடிய வகையில் அவை வடிவம் வைக்கப்பட்டிருந்தன.

இவை அனைத்தும் காற்று புகாத குழாய் போன்ற அமைப்பிற்குள் அடைபட்டு இருக்கும். அப்பொழுதுதான், வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய வாயுத்துகளோடு நம் விழித்திரையை நோக்கி வரும் எலக்ட்ரான் கணைகள் உறவாடாமல் இருக்கும்.

இதனால் கண்ணாடி குழாய்க்குள் அதிகப்படியான அழுத்தம் நிலவும்.

அதனால்தான், சில நேரம் பழைய தொலைக்காட்சி பெட்டிகள் தீப்பிடிக்கும் போது பலத்த சத்தத்தோடு வெடித்து சிதறுவதை பார்த்து இருப்போம்.

எந்த அளவிற்கு அதிகப்படியான ஆற்றலை எலக்ட்ரான் துப்பாக்கிக்கு வழங்குகிறோமோ! அந்த அளவிற்கு சிறந்த தரத்திலான படத்தை திரையில் காண முடியும்.

பெரும்பாலும் குழாயினுள் 40% வரை ஈயம் ஆக்ஸைடு வாயு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், பேரியம் ஆக்சைடு போன்ற இன்ன பிற வாயுக்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சிஆர்டி திரைகள், தற்கால எல்இடி திரைகளைப் போல நூறு ஆயிரம் அங்குலம் என்றெல்லாம் கிடைத்ததில்லை. பொதுவாகவே, 20 அங்குல தொலைக்காட்சி பெட்டி மற்றும் 14 அங்குல தொலைக்காட்சி பெட்டி ஆகியவைதான் விற்பனையில் முன்னணியில் இருந்து வந்தன.

தற்பொழுது மிகப்பெரிய திரைகளை பார்த்து திருப்தி அடையாத நமது மனம் தான்,  எலக்ட்ரான் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குறைந்த தெளிவு கொண்ட காட்சிகளைக் கண்டு பரவசமடைந்தது.

மேலும், பின்னாட்களில் வந்த சிஆர்டி தொலைக்காட்சிகளில் சில உள்ளார்ந்த மின் சுற்றுகளும், உள்ளார்ந்த சிப்புகளும் பயன்படுத்தப்பட்டன.

மேலும், ஒரு இடத்திற்கு தாமதமாக செல்வது நமக்கு மட்டுமல்ல! எலக்ட்ரான் துப்பாக்கிக்கும் பொருந்தும். ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பநிலையை அடைந்த பிறகு எலக்ட்ரான் துப்பாக்கியில் இருந்து, எலக்ட்ரான் கதிர்கள் வெளிவரத் தொடங்கும். இவை, நீங்கள் தொலைக்காட்சியை ஆன் செய்யும்போது முதலில் சப்தம் தான் கேட்கும், அதைத்தொடர்ந்து தான் திரையில் படங்கள் தோன்றும்.

பொதுவாகவே, இந்த எலக்ட்ரான் துப்பாக்கி மற்றும் காந்தப்புல சுருள்கள் போன்றவற்றில் தான் பிரச்சனைகள் ஏற்படும் அல்லது மின்சுற்றில் பிரச்சனைகள் ஏற்படும். இதனால், பழுதடைந்த சாலையைப் போல் படங்கள் தெரியும்.

ஆனாலும், நீடித்து உழைக்கக்கூடிய தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சிஆர்டி தொலைக்காட்சிகள் விளங்கின. இன்றும் கூட, நண்பர் ஒருவரது வீட்டில் 33 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய சி ஆர் டி டிவி தொடர்பாக அறிந்து கொண்டேன்.

உண்மையில், இந்த கட்டுரையில் அடிப்படையான தகவல்களை மட்டுமே வழங்கியிருக்கிறேன். சி ஆர் டி தொழில்நுட்பம் தொடர்பாக விரிவான ஒரு கட்டுரையை விரைவில் வெளியிடுகிறேன்.

நான் இந்த கட்டுரையில் குறிப்பிட்டேன் என்பதற்காக, ஆக்கர் கடையில் உறங்கிக் கொண்டிருக்கும் பழைய தொலைக்காட்சி பெட்டியை திறந்து பார்த்து விடாதீர்கள். அதிக அழுத்தத்துடன் இருக்கக்கூடிய, சிஆர்டி திரைகள் திடீரென வெடித்து விடக்கூடும்.மேலும், அதன் உள்ளே நிரப்பப்பட்டு இருக்கும் வாயுக்கள் நச்சுத்தன்மை மிக்கவை.

எல்இடி டிவிகளை காட்டிலும், சி ஆர் டி டிவிகளோடு சற்று கவனமாக இருக்க வேண்டும்.

நான் வழங்கி இருக்கக்கூடிய தொழில்நுட்ப தகவல்களில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் என்னுடைய இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.

உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

%d bloggers like this: