எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் செயல்முறை குறித்து கடந்த சில கட்டுரைகளாக பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் பொருள், தற்காலத்தில் அனைவர் வீட்டிலும் குடிகொண்டு விட்ட டிஜிட்டல் தெர்மாமீட்டர் பற்றி தான்.
இன்றைக்கு கையில் கட்டி இருக்கக்கூடிய ஸ்மார்ட் வாட்ச் முதல் வீட்டில் இருக்கும் ஓவன் வரை தெர்மாமீட்டர்களோடு இணைந்து வருகின்றன.
அதையும் கடந்து, நமக்கு நாமே மருத்துவர்களாக மாறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், பெரும்பாலானோர் வீட்டில் 100 ரூபாய்க்கு உள்ளாக கிடைக்கக்கூடிய சிறிய தெர்மாமீட்டர்களை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.
இதுகுறித்து விரிவாக பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை! என்றால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
kaniyam.com/category/basic-electronics/
அடிப்படையில், இந்த தெர்மாமீட்டர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று, மருத்துவ நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் தெர்மாமீட்டர், மற்றொன்று சமையல் மற்றும் வீட்டு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தெர்மாமீட்டர்.
மருத்துவ தேவைக்காக பயன்படுத்தக் கூடிய தெர்மாமீட்டரில் சுமார் 93 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை தான் வெப்பநிலையை அளவீடு செய்ய முடியும்.(இந்த குறிப்பிட்ட இடைவெளிக்கு அதிகமாகவோ குறைவாகவோ, மனித உடலில் வெப்பநிலை இருப்பதற்கு வாய்ப்பில்லை)
அதேசமயம், சமையல் மற்றும் இன்ன பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் தெர்மாமீட்டர்களில் 0 முதல் சுமார் 300 டிகிரி பாரன்ஹீட் வரை, வெப்பநிலையை அளவிடும் வகையில் தயாரிக்கப்படுகிறது
இந்த இரண்டு தெர்மாமீட்டர்களும் இயங்குவது, ஒரே அடிப்படையிலான தத்துவத்தில் தான் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
நமது ஆரம்ப கால கட்டுரைகளிலேயே மின்தடைகள் குறித்து விவாதித்து இருக்கிறோம். வெப்பநிலையின் காரணமாகவும், மின்தடையின் மதிப்பு மாறுபடும். இவ்வாறு மாறுபடக்கூடிய மின்தடையின் மதிப்பைக் கொண்டு, வெப்பநிலையை நம்மால் கண்டறிய முடியும்.
ஏற்கனவே, குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு எந்த அளவிற்கு மின்தடை மதிப்பு மாற்றம் அடையும் என்பது நமக்குத் தெரியும். அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்து பார்ப்பதன் மூலமாக, வெப்பநிலைய நம்மால் கண்டறிய முடியும்.
இதற்காக தேர்ந்த வகையிலான தெர்மோ இணைகள் (thermocouple) மற்றும் மின்தடைகள் பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது. அதனோடு, ஒரு உள்ளார்ந்த மின்சுற்றும் குறிப்பிட்ட வகையில் நிரலாக்கம் செய்யப்பட்ட சிறிய சிப்பும்(programmed chip for calculations) வழங்கப்பட்டிருக்கும்.
அதற்கு ஆற்றல் அளிப்பதற்கு, மிகச்சிறிய பேட்டரி(coin battery)பயன்படுத்தப்படும். நீங்கள் தெர்மாமீட்டரை ஆன் செய்து, உங்களுடைய உணவின் மீது அல்லது வாயிலோ வைக்கும் போது வெப்பநிலை காரணமாக அங்கு வழங்கப்பட்டிருக்கும் மின்தடையின் மதிப்பில் மாற்றம் ஏற்பட தொடங்கும். அதற்கு ஏற், நிரலாக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய உள்ளார்ந்த மின்சுற்றுகள் இந்த மாற்றத்தை கண்டறிந்து அதன் மூலம் வெப்பநிலையை கணக்கிட்டு நமக்கு திரையில் காட்டுகின்றன.
இதற்காக ஒரு எட்டு பிரிவு, ஐந்து இலக்க எல்சிடி திரை(8 segment 5 digit LCD display)வழங்கப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் தயாரித்து, நூறு ரூபாய்க்குள் கடைகளில் விற்பனை செய்து விடுகிறார்கள்
பாதரச அடிப்படையிலான தெர்மாமீட்டர்களை விடவும், இவை பாதுகாப்பானவை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டிய உள்ளது. பாதரசத்தால் தயாரிக்கப்படும் வெப்பமானிகளில், பாதரச கசிவு ஏற்படும் போது உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
பாயசத்தின் வெப்பநிலையை பார்ப்பதற்கு பாதரச வெப்பநிலை மானி களை விடவும், இந்த டிஜிட்டல் வெப்பநிலைமானிகள் சிறந்ததாக இருக்கின்றன.ஒருவேளை தவறி போய் பாதரசம் கசிந்தால், பாயாசம் பாய்சனாகி ஆகிவிடும்
ஆனால் டிஜிட்டல் வெப்ப நிலை மாநிலங்களில் வைக்கப்பட்டுள்ள மின்தடைகள் அல்லது தெர்மோ இணைகள், மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.
இதில், மேம்படுத்தப்பட்ட வடிவமாக லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய வெப்பநிலைமானிகளும் இருக்கின்றன.அதுகுறித்து இன்னொரு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்
இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய, அடிப்படையான செயல்முறை என்பது ஒரு கடத்தியின் மின்தடை மதிப்பில் மாற்றம் ஏற்படும்போது, அதன் குறுக்கே இருக்க கூடிய மின்னழுத்த வேறுபாடும் சீராக மாற்றம் அடைகிறது(மின்னழுத்த வேறுபாட்டிற்கான ஓம் விதி).
இந்த மின்னழுத்த வேறுபாடு மாற்றத்தை கணக்கிடுவதன் மூலமாக, நம்மால் துல்லியமான வெப்பநிலையை அளவிட முடிகிறது. இருந்த போதிலும், பெரும்பாலான மலிவு விலை தெர்மாமீட்டர்களில் 0.5 டிகிரி செல்சியஸ் வரையிலான பிழைகள் இருக்க வாய்ப்பு உள்ளது. ( மிகவும் குறைந்த தரத்திலான தயாரிப்பாக இருந்தால் அதற்கு தோணும் மதிப்புகளை கூட, வெப்பநிலையாக காட்ட வாய்ப்பு இருக்கிறது)
மேலும், இவை பெரும்பாலும் பழுதாகி விட்டால், சரி செய்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு! என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் m
இத்தகைய, தெர்மாமீட்டர்களை பயன்படுத்தி உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக் கொள்வது சரியானதாக இருக்காது.
மருத்துவ சூழலில் முறையாக தெர்மாமீட்டர்களை வைத்து பரிசோதித்துப் பார்த்தால்தான், நமது உடலில் இருக்கும் பிரச்சனைகள் வெளியில் தெரியும். வேண்டுமானால் சாம்பார் சூடாக இருக்கிறதா? என்று பார்ப்பதற்கு இத்தகைய தெர்மாமீட்டர்களை பயன்படுத்தலாம்
அப்பொழுதும் கூட கவனமாக இருங்கள்! மறந்து போய் சாம்பாருக்குள் போட்டு விடாதீர்கள்! பிறகு, முருங்கைக்காய்க்கு பதிலாக கரண்டியில் தெர்மாமீட்டர் தான் மிஞ்சும்.
சரி! ஒரு புதிய எலக்ட்ரானிக்ஸ் தகவலை அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மேற்படி, இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com