மறுசுழற்சிக்கு முன் மறுபயன்பாடு
முதலில் சிக்கனம், அடுத்து மறுபயன்பாடு, பின்னர் மறுசுழற்சி (Reduce, reuse, recycle) என்பதுதான் நம் கொள்கை. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் முதலில் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது வீணாவதைத் தவிர்க்கவேண்டும். அடுத்து மறுபயன்பாடு. அதாவது அப்படியே வேறு வேலைக்குப் பயன்படுத்த முடியுமானால் அதைச் செய்ய வேண்டும். கடைசியாகத்தான் மறுசுழற்சி. ஆகவே மறுசுழற்சிக்கு முன்னர் மறுபயன்பாட்டுக்கு என்ன வழி என்று முதலில் பார்ப்போம்.
தடையிலா மின் வழங்கி (uninterrupted power supply – UPS), ஆற்றல் சேமிப்பு (energy storage) போன்றவற்றை மின்கலத்தின் நிலையான (stationary) பயன்பாடுகள் என்று சொல்கிறோம். இவற்றில் பயன்படுத்தும் மின்கலக் கூறுகள் மின்னுர்திகளை விடக் குறைந்த தரநிலை கொண்டவை.
ஒரு மின்னூர்தியின் மின்கலத்தில் சில ஆயிரம் கூறுகள் (cells) இருக்கும் என்று முன்னர் பார்த்தோம். இவற்றை ஒவ்வொன்றாக எடுத்து சோதித்துப் பார்க்க வேண்டும். நிலையான பயன்பாட்டுக்கு ஒத்ததாக இவற்றில் பல இருக்கும். இவற்றை முதலில் பிரித்து எடுத்து மறுபயன்பாட்டுக்கு அனுப்பிவிடலாம்.
புதிய மூலப்பொருட்களின் தேவையைக் குறைக்கிறது
தற்போது லித்தியம் அயனி மின்கலத்துக்குப் பெரும்பான்மையான மூலப்பொருட்களை நாம் இறக்குமதி செய்கிறோம். ஆகவே எந்த அளவுக்கு நம்மால் இவற்றை மறுசுழற்சி மூலம் மீட்க முடிகிறதோ அந்த அளவுக்கு இறக்குமதியைக் குறைக்கலாம். வரும் ஆண்டுகளில் மூலப்பொருள் தேவையில் 20% முதல் 40% வரை மறுசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய முடியும் என்று மதிப்பீடு செய்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கிறது
பழைய பயன்படுத்தியப் பொருட்கள் தீயில் எரிக்கப்படுவதையும், குப்பைகளில் கொட்டப்படுவதையும் மறுசுழற்சி குறைக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கிறது.
முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது
மறுசுழற்சி ஏராளமான முறைசாராத் (informal) தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அது புதிய தொழில் வாய்ப்புகளைத் திறந்து விட்டிருக்கிறது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: வளர்ந்து வரும் மின்கலத் தொழில்நுட்பங்கள்
சோடியம் அயனி மின்கலம் செலவும் குறைவு, மூலப்பொருளும் எளிதில் கிடைக்கும் … ஆனால் ஆற்றல் அடர்த்தி குறைவு. லித்தியம் அயனி திடநிலை மின்கலம். ஹைட்ரஜன் வேதி (Hydrogen Fuel Cell) மின்கலம்.