உங்கள் லினக்ஸ் கணினியில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க 3 வழிகள்

உங்கள் லினக்ஸ் கணினியில் உள்ள தகவல்களை, கசியாமல் பார்த்துக் கொள்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற முடியும்.

பொதுவாகவே, பிற இயங்குதளங்களை காட்டிலும்! லினக்ஸ் ஆனது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இருந்த போதிலும், நம்முடைய தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

இந்தக் கட்டுரையில், உங்கள் தகவல்களை பாதுகாக்க,நம் அனைவருக்கும் பரிச்சயமான மற்றும் பயன்படக்கூடிய மூன்று வழிகளை பார்க்கலாம்.

இந்தக் கட்டுரைக்கு அடிப்படையாக itsfoss community கட்டுரையை பயன்படுத்துகிறேன்.

1. தரவை குறியாக்கம் செய்தல் (encrypting the disk)

Full disk encryption(FDE) செய்வதன் மூலமாக, உங்களுடைய தரவுகள் மிக மிக பாதுகாப்பாக இருக்கும்.

பிறர் உங்களுடைய தரவுகளை திருடாமல் இருப்பதற்கு, சிறந்த வழியாக இது பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், FDE முறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால்! இதை நீங்கள் இயங்குதளத்தை நிறுவும்போதுதான் செய்ய முடியும்.

நீங்கள் புதியதாக உங்களுடைய கணினியில், லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவும் போது இதற்கான அனுமதி கோரப்படும்.

ஒருவேளை, நீங்கள் ஏற்கனவே லினக்ஸ் கணினியை பயன்படுத்தி வந்தால், உங்களுடைய தரவுகளை backup செய்துவிட்டு உங்களுடைய இயங்குதளத்தை நீக்கி, மீண்டும் ஒருமுறை நிறுவுவதன் மூலமாகவே FDE ஐ ஆன் செய்ய முடியும்.

நீங்கள் புதியதாக கணினியில் லினக்ஸ் விரும்பினால், இது சிறந்த வழியாக அமையும்.

2. அடிக்கடி இயங்குதளத்தை மேம்படுத்துவது (frequent updates)

உங்களுடைய இயங்குதளத்தின், புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்புகள் வெளியாகும் போது! அவற்றை உடனுக்குடன் அப்டேட் செய்து கொள்வது நல்ல வழியாக அமையும்.

ஏற்கனவே இருந்த இயங்குதள பதிப்பில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து, புதிய பதிப்புகளை வெளியிடுவார்கள்.

இதன் மூலம்  உங்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

மேலும், தற்காலத்தில் வெளியாக கூடிய லினக்ஸ் mint போன்ற பதிப்புகள், தானாகவே மேம்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதற்கான செயல்பாடுகளை மட்டும், நீங்கள் ஆன் செய்து வைத்தால் போதுமானது..

மேலும், நீங்கள் கணினியில் பயன்படுத்தும் செயலிகளையும் அடிக்கடி அப்டேட் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

3. பாதுகாப்பான செயலிகளை மட்டும் நிறுவுதல்

இது உங்களுடைய லினக்ஸ் கணினிக்கு மட்டுமல்ல, நீங்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து ஸ்மார்ட் கருவிகளுக்கும் பொருந்தும்.

நம்மில் பலரும் அங்கீகரிக்கப்படாத செயலிகளை பயன்படுத்துகிறோம்.

பெரும்பாலும், செயலிகளை நிறுவும் போது உங்களுடைய லினக்ஸ் பதிப்பின் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோரில் நிறுவுங்கள்.

அல்லது நீங்கள் நிறுவ விரும்பும் செயலி அல்லது மென்பொருளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள, github இணைப்பை பயன்படுத்தி நிறுவுங்கள்.

அங்கீகரிக்கப்பட்ட குறி(verified symbol) இல்லாத செயலிகளை நிறுவுவதை தவிருங்கள்.

ஒருவேளை உங்களுக்கு ஒரு செய்தியின் மீது சந்தேகம் இருந்தால், தமிழ் லினக்ஸ் கூட்டமைப்பு போன்ற லினக்ஸ் பயன்பாட்டாளர்களிடம் சந்தேகங்களை கேட்டுக்கொள்ளுங்கள்..

மேற்கூறிய மூன்று வழிகளை பின்பற்றுவதன் மூலமாக, உங்களுடைய லினக்ஸ் கணினியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடியும்.

ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் மின் மடலுக்கு மடல் இயற்றவும்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

%d bloggers like this: