பொருட்களுக்கான இணையம் (The Internet of Things(IoT))

commons.wikimedia.org/wiki/File:Internet_of_things_signed_by_the_author.jpg

 

 

நாம் இதுவரை மனிதர்கள் பயன்படுத்திடும் இணையப்பக்கங்களை பார்த்திருக்கின்றோம். அது என்ன பொருட்களுக்கான இணையம்(The Internet of Things(IoT))? என அறிந்துகொள்ள அனைவரும் அவாவுறுவது இயல்பாகும். அதாவது ஒவ்வொரு பொருளிற்கும் அல்லது புத்திசாலியான பொருட்களுக்கிடையே தரவுகளை பரிமாறிகொள்வதையே பொருட்களுக்கான இணையம்(IoT) என அழைக்கப்படுகின்றது. உணர்விகள் ,மின்னனு பொருட்கள், மென்பொருட்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து சாதனங்களானது தங்களுக்கிடையே தரவுகளை பரிமாறி கொள்ளுதல், ஆய்வுசெய்தல் ஆகிய பணிகளை பயன்படுத்தி திட்டமிடுதல், நிருவகித்தல், முடிவெடுத்தல் ஆகிய செயல்களை இந்த பொருட்களுக்கான இணையத்தின்(IoT) வாயிலாக செயற்படுத்திட படுகின்றது. மேலும் நாம் பயன்படுத்திடும் பல்வேறு வகையான சாதனங்களை கணினியின் அடிப்படையான கட்டமைப்புகளுடன் நேரடியாக இணைத்திடுவதே இந்த பொருட்களுக்கான இணையமாகும்(IoT). அதனால் மனிதர்களுக்கிடையேயான தொடர்பிற்காக பயன்பட்ட இணையத்தோடு கூடவே புத்திசாலியான பொருட்கள் அல்லது சாதனங்களுக்கிடையே நேரடியாக இணைய இணைப்பை ஏற்படுத்தி செயல்படச் செய்வதற்கு இந்த பொருட்களுக்கான இணையம்(IoT) பயன்படுகின்றது. மிகமுக்கிமாக புத்திசாலியான இரு சாதனங்கள் இணைந்து செயல்பட இந்த பொருட்களுக்கான இணையம் (IoT) அனுமதிக்கின்றது. தொடர்ச்சியான ஆய்வுகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றினால் தற்போது மனிதர்களுக்கிடையேயான தொடர்பு என்பது குறைந்து அவர்கள் பயன்படுத்திடும் சாதனங்களை நேரடியாக இணைத்தலினால் ஏற்படும் தொடர்பு என்பது வளர்ந்துவருவது அனைவரும்அறிந்ததே. இன்று மிகபெரிய நிறுவனங்களான சிஸ்கோ, ஜிஇ போன்றவை தங்களுடைய பயன்பாடுகள் அனைத்தையும் இந்த பொருட்களுக்கான இணையமாக(IoT) மேம்படுத்திவருகின்றனர் என்ற செய்தியை மனதில்கொள்க.

 

இவ்வாறான பொருட்களுக்கான இணையத்தின் (IoT) வளர்ச்சியானது மேகக்கணிகளின் வளர்ச்சி, செல்லிடத்து பேசிகளின் வளர்ச்சி, தரவுகளின் ஆய்வுகளின் வளர்ச்சி ஆகியவற்றின் தேவை அதிகரிப்பதால் உருவாகின்றது. இந்த பொருட்களுக்கான இணையம்(IoT) ஆனது மனிதவாழ்வின் மற்றொரு முக்கியமைல்கல்லாக அமையவிருக்கின்றது. எவ்வாறு எனில் மனிதர்கள் தினமும் அதிகாலை எழுவதற்கான மணியடிப்பது, அவர்கள் தங்களுடைய காலைக்கடன்களை முடிப்பதற்கான தண்ணீரை சூடாக்கும் சாதனத்தை செயல்படுத்துவது, அவர்கள் காலையில் குடிப்பதற்கான காஃபி டீ போன்ற பாணங்களை தயார்செய்வது, வீடுகளிலுள்ள குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ள காய்கறிகள் அளவு குறைந்துவிட்டால் அருகிலுள்ள காய்கறிகடைகளில் புதிய காய்கறிகளை கொள்முதல் செய்வதற்காக உத்திரவிடுவது, அவர்கள் செல்லும் மகிழ்வுந்துகள் செல்லும் பாதையை ஆய்வுசெய்வது என அனைத்து பணிகளையும் மனிதர்களின் தலையீடு இல்லாமல் தானியங்கியாக செயல்படுவதற்கு இந்த பொருட்களுக்கான இணையம்(IoT) எனும் அமைவு கண்டிப்பாக தேவைப்படுகின்றது.

 

இந்த பொருட்களுக்கான இணையமானது(IoT) கம்பியில்லா உணர்விகளின் வலைபின்னல், உள்பொதியும் அமைவு, இணையம் இணைந்த அணியும் சாதானங்கள், இணையத்துடன் இணைப்பதற்கான புளூடூத் செயல்படும் சாதனங்கள், ஆர்எஃப்ஐடி செயல்படும் தேடுதல்கள் என்பன போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் சேர்ந்து உருவாகின்றது. இவ்வாறான பல்வேறு வேறுபாடுகளுடனான சாதனங்களுடைய வலைப்பின்னலின் அமைவுகளால் இந்த பொருட்களுக்கான இணையம்(IoT) என்பதை செந்தரவாக கட்டமைவாக செய்வது மிகச்சிரமமான செயலாகின்றது. இந்த பொருட்களுக்கான இணையம்(IoT) ஆனது மின்காந்த புலங்களை பயன்படுத்தி பொருட்களை தேடுதல், சுட்டிக்காட்டுதல் ஆகிய செயல்களுக்காக தரவுகளை பரிமாறுவதற்காக பயன்படுத்திட முடியும். மேலும் இதில் சிப்பும் ஆன்டென்னாவும் இணைந்த சிறுமின்னனு சாதனத்தின் அடிப்படையில் சார்ந்து அமைந்து தரவுகளை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது. இந்தசிப்கள் பேரளவு தரவுகளைகூட பரிமாறிகொள்ளும் திறன்மிக்கதாக விளங்குகின்றன. இந்த சாதனங்களானது பார்கோடினை வருடி படித்தறியும் சாதனங்கள் போன்று செயல்படுகின்றன. இந்த வலைப்பின்னலில் இணைந்துள்ள ஒவ்வொரு பொருளிற்கும் ஒரேமாதிரியானதொரு சுட்டுஎண்(ID) வழங்கபடுகின்றது. இந்த சாதனங்கள் அதனை சுட்டிகாட்டுவதற்காக குறிப்பிட்ட பொருளை வருடுதல் செய்து அதனுடைய சுட்டுஎண்களை(ID) அடையாளம் காண்பிக்கசெய்கின்றது. ஆயினும் இந்த சாதனங்களுக்கு பார்கோடினை வருவதுபோன்று தனியாக வருடுதல்பணி வழங்கபட தேவையில்லை. தற்போது பொதுவாக சாதனங்கள் அனைத்தும் குறைந்த மின்செலவு மின்சுற்றுகளின் கட்டமைவுடனும் கம்பியில்லா தகவல்தொடர்பை ஆதரிப்பதாகவும் உருவாக்கபட்டு வெளியிடப்படுகின்றன. அதனால் இந்த சாதனங்களை உற்பத்தி செய்வதற்கான செலவுகளும் மிகக்குறைந்த அளவே ஆகின்றது

அதனை தொடர்ந்து பல்வேறு சூழல்களிலும் செயல்படும் உணர்விகளானது தரவுகளை சேகரித்தல், ஆய்வுசெய்தல் போன்ற பணிகளை செய்வதற்கான ஏராளமான அளவில் புத்திசாலியான உணர்விகளை உருவாக்க இயலுகின்றது. மேலும் இந்த உணர்விகள் பல்வேறு முனைமங்களுக்கிடையே தரவுகளை பகிர்ந்துகொண்டபின் அவைகளை ஆய்வுசெய்வதற்காக மையவலை பின்னலில் தேக்கிவைக்கப்படுகின்றன. பொதுவாக கம்பியில்லா உணர்வி வலைபின்னல் (Wireless Sensor Network)(WSN))அடிப்படை உறுப்புகளாக இருப்பவை இந்த WSN இக்கான வன்பொருள், தகவல்தொடர்பு அடுக்குகள், இடைநிலை பொருட்கள், பாதுகாப்பான தரவுகளை சேகரித்து வைத்திடும் அமைவு போன்றவையாகும். இவையனைத்தும் சேர்ந்ததே இந்த கம்பியில்லா உணர்வி வலைபின்னல் (Wireless Sensor Network)(WSN)) ஆகும். இந்த பொருட்களுக்கான இணைய(IoT)த்தின் வெற்றியானது பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் அல்லது சாதனங்களுக்கும் வழங்கப்படும் சுட்டி எண்களை சார்ந்துள்ளது. இந்த சுட்டி எண்களானது ஒரேமாதிரியானதாகவும் நிலையானதாகவும் நம்பகத்தன்மையுடனும் இருப்பதே இந்த சுட்டிஎண்களின் முகவரியின் மிக முக்கியப் பயனாகும்.

 

இவ்வாறான ஏராளமான சாதனங்களை கையாளுவதற்கான தளமானது நம்பகமாகவும், சுறுசுறுப்பாகவும், நெகிழ்தன்மையுடனும், பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருந்திடவேண்டும். இவ்வாறான தன்மைகளை மேகக்கணினி சூழல் வழங்குகின்றது. அதனால் இந்த தன்மைகளைக் கொண்ட மேக்கணிசூழலானது இந்த பொருட்களுக்கான இணைய(IoT)த்தினை ஆதரிக்கின்றது. இந்த மேகக்கணி சூழலானது கையடக்க சேமிப்பகம், பல்வேறு வாடகையில் கிடைப்பதற்கு தயாராக இருக்கும் சேமிப்பகம், கோரிய போதான சேவைகளை உடன் வழங்குதல், தரமான சேவைகள், செலவிற்கேற்ப கிடைத்திடும் பயன்பாடு என்பன போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கையாளும் திறன்மிக்கதாக உள்ளது இந்த மேகக்கணினி சூழலானது அடிப்படை கட்டமைவு சேவைகள்(Infrastructure as a Service(IaaS)), இயங்கு தளசேவை(Platform as a Service(Paas)). மென்பொருள்சேவை(Software as a Service(SaaS)) ஆகிய மூன்று அடிப்படையான சேவைகளை வழங்குகின்றது.

 

இதிலுள்ள IaaS ஆனது பயனாளர்கள் மேக்கணினிகளின் சேவையை பெறுவதற்கான வன்பொருட்கள் பயன்படுத்திகொள்ளும் தளத்தினை வழங்குகின்றது. அடுத்ததாக Paas ஆனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான பயன்பாடுகளை மேம்படுத்திகொள்வதற்காகவும் IoT தரவுகளை அணுகுவதற்கான வசதியையும் கொண்ட தளத்தினை வழங்குகின்றது. அதற்கடுத்ததாக SaaS ஆனது பயனாளர்கள் தங்களின் பயன்பாடுகளை இயக்குவதற்கான தளத்தினை வழங்குகின்றது. இந்த IoTஇல் காட்சிப்படுத்துதல் என்பது மிகமுக்கியமான காரணியாகும். இந்த காட்சிப்படுத்துதலின் வாயிலாக பயனாளர்கள் எந்தவொரு சூழலுடனும் இடைமுகம் செய்திடமுடிகின்றது . மேலும் தற்போதைய தொடுதிரையின் ஆய்வுமேம்பாடுகளின் வளர்ச்சியினால் மடிக்கணினி(tablet) திறன் பேசி(smartphone) ஆகியவைகளின் பயன்பாடுகளும் மேலும் மேலும் வளர்ந்து வருகின்றன. அதனை தொடர்ந்து ஒரு சாதாரண மனிதன்கூட காட்சிபடுத்துதலின் தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ளவும் அதனடிப்படையில் செயல்படவும் முடிகின்றது. இந்த காட்சிபடுத்துதலின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது மிகப்பயனுள்ள அர்த்தமுள்ள தகவல்களை பெற்றிடவும் ஆய்வுசெய்திடவும் உதவுகின்றது. இறுதியாக முடிவெடுப்பதற்கான திறனை மேம்படுத்திடுகின்றது.

வருங்காலங்களில் இந்த IoTஇன் வளரச்சியினால் வாகனங்களின் அளவுகளுக்கேற்ப தானியங்கியாக போக்குவரத்துகளை கட்டுபடுத்துதல், சுற்றுசூழலை நிருவகித்தல் கட்டுபடுத்துதல், மருத்துவமனையில் நோயாளிகளை கண்காணித்தல், தேவையானபோது தேவையான அளவிற்கு மட்டும் அவர்களுக்கான மருந்துகளை வழங்குதல், வீடுகளையும் அலுவலகங்களையும் உருவாக்கும் கட்டுமான பணிகளை கண்காணித்தல், கட்டுப்படுத்துதல், இயந்திரகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல், வாகனங்கள் எங்குள்ளன என தேடிப்பிடித்தல், விவசாயப்பணிகள், தண்ணீர் வழங்குதல், நகரங்களை கண்காணித்தல் போன்ற எண்ணற்ற பல்வேறு பணிகளை பொருட்களுக்கான இணைய(IoT)த்தின் வாயிலாக செயல்படுத்திடமுடியும். ஆயினும் பாதுகாப்பில் குறைபாடு, சிக்கலான கட்டமைவு, தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கையில் குறுக்கிடுதல் போன்ற குறைபாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் இருந்தாலும் அவைகளுக்கான தீர்வினை கண்டு எதிர்காலத்தில் இந்த பொருட்களுக்கான இணைய(IoT)த்தின் சேவை வெற்றிகொடி நாட்டுவது திண்ணம்.

https://i0.wp.com/pixabay.com/static/uploads/photo/2015/05/25/05/27/network-782707_640.png?w=1130&ssl=1

pixabay.com/p-782707

 

 

.குப்பன்

kuppansarkarai641@gmail.com

www.vikupficwa.wordpress.com , www.skopenoffice.blogspot.in/ , www.arugusarugu.blogspot.in ஆகிய என்னுடைய வலைபூவை பார்வையிட்டு தங்களுடைய மேலான கருத்துகளை வழங்கிடுக

%d bloggers like this: