பிரபஞ்சம் என்பது எல்லையற்றது. அதில் பல மண்டலங்களும் (Galaxy), எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், கோள்களும், தூசித் துகள்களும் அதனதன் பாதையில் சுற்றித் திரிகின்றன என்பதை நாம் அறிவோம். இதில் ஓவ்வொரு நட்சத்திரமும், கோளும் வெவ்வேறு தன்மைக் கொண்டவை. சில வாயுக்களால் நிரம்பி இருக்கும், சில தண்ணீர் இல்லாமல் வற்றி போயிருக்கும், சில தண்ணீரால் முழ்கிக் கிடக்கும், சில வெப்பமாய் இருக்கும், சில குளிரில் உறைந்து போய் இருக்கும். இப்படி இயற்கையில் பன்முகத்தன்மை நிறைந்து பிரபஞ்சம் எங்கும் பரவிக் கிடக்கும். அது போலத் தான் Fediverse-சும்.
Federation + Universe என்பதையே Fediverse என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர். அதற்கு இணையான தமிழ்ச்சொல்லை என்னால் கண்டறிய முடியாத காரணத்தால் Fediverse என்றே என் எழுத்துக்களில் பயன்படுத்துகின்றேன். Federation என்றால் கூட்டமைப்பு, கூட்டுச் செயல்பாடு என்று பொருள். கூட்டமைப்பு என்பது நமக்கு ஒன்றும் புதிதல்லவே, இந்திய ஒன்றியத்தில் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு தானே நம் நாடு! இதில் அனைவருக்கும் அவரவர் மாநிலங்களின் சுயநிர்ணய செயல்பாடும், பிற மாநிலங்களோடு இணைந்த கூட்டுச் செயல்பாடு என்பது தான் நம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் சொல்கிறது. இதற்கும் கணினிக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம். இயற்பியல், அரசியல் குறித்த கட்டுரையோ என்று கூட நினைக்கலாம். ஆனால் Fediverse என்ற வார்த்தை இணையத்தில் (Internet) வெவ்வேறு வலை தளங்களின் (Web sites) சர்வர்களில் இருந்தாலும் ஓரே பிரபஞ்சத்தினுள் இருக்கும் வெவ்வேறு கோள்கள் போல நாம் அனைவரும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் ஒரு முறையைத் தான் குறிக்கிறது.
இதன் ஒரு எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களை பார்ப்போம். இதில் எது நமக்கு காலப் போக்கில் நன்மை பயக்கும் என்பதையும் காண்போம். இன்றைய வலை தளங்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். Centralized என்றும் Decentralized Federation என்றும். எந்தெந்த தளங்களெல்லாம் நம்மை அவர்களின் சர்வர்களுக்குள் மட்டுமே அடைத்து வைத்து செயல்படுகிறதோ அவையெல்லாம் Centralized. அதற்கு நேரெதிராக நாம் எந்த தளத்தின் சர்வரில் இருந்தாலும் ஒரே network-ஆக கூட்டாக செயல்படுவதை அனுமதிக்கிறதோ அவையெல்லாம் Decentralized Federation.
உதாரணத்திற்கு, Facebook, Twitter ஆகிய இரண்டும் முதல் வகையைச் சேர்ந்தது. Mastodon, GNU Social, Diaspora போன்றவை இரண்டாம் வகையைச் சேர்ந்தது. Facebook-லும், டிவிட்டரிலும் நாம் உள்ளே நுழையலாம் ஆனால் உள்ளே நுழைந்த பிறகு அவ்விடத்தின் சட்டங்கள் நம் கையில் இல்லை. அந்நிறுவனங்கள் எதை சரி என்று நினைக்கிறதோ அதை அனுமதிக்கிறது. எதை தவறு என்று நினைக்கிறதோ அதை அழிக்கிறது. அவர்களின் சட்டதில் நம் ஒவ்வொருவரையும் சந்தையில் விற்று வாங்கப்படும் சரக்குகள் போல நடத்துகின்றனர். இன்று நம்மால் Facebook-ஐ வெறும் சமூக வலைதளம் என்று கூற முடியுமா? எப்படி முடியும்? அது இன்று விளம்பரதாரர்களுக்கான சந்தை தானே! அவர்களிடம் நம் தகவல்களை விற்று பணம் பெறுவது தானே இவர்களின் வருவாயும் இலாபமும்! அப்பெடியெனில் நாம் தான் இங்கே விற்பொருள்.
இதனை எதிர்க்கும் பொருட்டு தான் விளம்பரங்களை தடுத்து நிறுத்தும் Adblockers பயன்படுத்த தொடங்கினர் மக்கள். ஏனெனில் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்போம் ஆனால் உடனடியாக வாங்க வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டோம், விளம்பரங்கள் நம் ஆசையைத் தூண்டி உடனடியாக வாங்க வைத்துவிடுகின்றன. விளைவு? தேவையில்லாத சமையத்தில் தேவையில்லாத செலவு. சமூக வலைதளம், நண்பர்களோடு தொடர்பில் இருக்கலாம், பேசலாம் என்றல்லவா கூறினார்கள், அதை விடுத்து எப்படி நாம் விளம்பரங்களினால் சூழப்பட்டோம்? நாம் யாரிடம் தொடர்பில் இருக்கிறோம், என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று நம் தனிபட்ட வாழ்க்கை முதற்கொண்டு அனைத்தும் இங்கே கொடுங்கண்காணிப்பு செய்யப் படுகிறது. இதன் மூலமே நம்மை எந்த விளம்பரதாரரிடம் விற்கலாம் என்று இத்தளம் நிர்ணயம் செய்கிறது. விளம்பரதாரர்கள் மட்டுமல்ல, கொடுங்கோல் ஆட்சி செய்யும் அரசுகளும் இவர்களை பயன்படுத்திக் கொண்டு அரசுக்கு எதிராக வரும் எந்த ஒரு விமர்சனமும் தடைசெய்யப்பட்டு, ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது. Facebook-ஐ விட்டு வெளியேறலாம் என்றாலும் வழியில்லை, ஏனெனில் நாம் சேரும் போதே நம் நண்பர்களையும் சேர்த்துவிட்டோம், அவர்களும் அவர்கள் நண்பர்களை சேர்த்துவிட இப்போது இதுவே Graph Theory-யாக மாறி நிற்கிறது. சரி, அப்படியே வெளியேறினால் எங்கே செல்வது? மற்றோரு Centralized சர்வருக்கா? அது எப்படி மாற்றாகும்? இதே நிலை அங்கேயும் வரலாமே!
எனவே தான் Centralized சர்வர்களுக்கு மாற்று மற்றொரு Centralized சர்வர் ஆகாது. Decentralized Federation என்பதே மாற்றாகும். Facebook என்பது ஒரு வலை தளம் என்பது நாம் அனைவருக்கும் தெரியம். ஒரு வலைதளத்தை உருவாக்க வேண்டுமானால் அதற்கு நிரலாக்க மொழியில் நிரல் எழுத வேண்டும். அப்படி எழுதிய நிரல்களே இந்த வலைதளங்கள். Facebook-ன் நிரல் நமக்கு கிடைத்தால் நம் நண்பர்களின் வட்டத்திற்கு நாமே ஒரு சர்வர் வைத்து நம் தகவல்களை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாமே! அதற்கும் வழியில்லை. ஏனெனில் Facebook என்பது ஒரு Proprietary Software. அதன் நிரல் அந்நிறுவனத்தை தவிர வேறு யாருக்கும் கிடைக்காது, ஆனால் நம் தரவுகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு அது எதற்கு எப்படி பயன்படுத்தப் பட வேண்டும் என்று கூற நமக்கு எந்த அதிகாரமும் இல்லையாம். சரி அப்படியே Facebook-ன் நிரல் கிடைத்து நமக்கு நாமே ஒரு சர்வர் வைத்துக் கொண்டாலும், நம்மைப் போல் வேறு ஒரு நட்பு வட்டம் அவர்களுக்கென்று ஒரு சர்வர் வைத்துக் கொண்டாலும், தனித்தனி சர்வகளாக அவர்களை நாம் காணமுடியாமலும், நம்மை அவர்கள் காணமுடியாமலும் போய் விடுமே! இந்த சிக்கலைத் தீர்க்கத்தான் Federation வந்தது. ActivityPub, OStatus போன்ற protocol-கள் கணினி அறிஞர்களால் உருவாக்கப்பட்டது.
மாற்று என்பது முதலில் Free/Libre and Open Source Software ஆக இருக்க வேண்டும், அப்போது எந்தக் குழுவும், எந்த நட்பு வட்டமும் தனக்கென ஒரு சர்வரை தானே இயக்கிக்கொள்ள முடியும், இதுவே Decentralized எனப்படுகிறது. இரண்டாவது அது கூட்டாக செயல்படும் தன்மைக் கொண்டதாக இருக்க வேண்டும், இதுவே Federation எனப்படுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஒரு சர்வரில் கணக்கு வைத்திருந்தால் கூட, வேறு சர்வரில் கணக்கு வைத்திருக்கும் என்னுடன் உங்கள் இடத்திலிருந்தே உங்கள் சர்வரில் இருப்பவர்களோடு உரையாடுவது போல் உரையாடலாம், Like செய்யலாம், Share செய்யலாம். அதுதான் Mastodon, GNU Social, Diaspora போன்றவை. இதை மிகவும் எளிதாக புரிந்துக் கொள்ள வேண்டுமானால், நீங்கள் எப்படி e-mail மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கிறீகள் என்று கவனியுங்கள். பலர் gmail பயன்படுத்துகின்றனர், சிலர் yahoomail, சிலர் riseup.net, சிலர் ProtonMail, Tutanota போன்றவைகளில் இருந்தாலும், ஒருவருக்கொருவர் தகவல் email அனுப்பி பதில் பெற முடிகிறதல்லவா! அப்படித் தான் இதுவும்.
source – en.wikipedia.org/wiki/Mastodon_(software)#/media/File:Mastodon_Mascot_(Alternative).png
Mastodon நிரலை நிறுவிய சர்வர்கள் பல இன்று இணையத்தில் பல்வேறு நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதே போல் தான் GNU Social, Diaspora ஆகிய நிரலை நிறுவிய சர்வர்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன். Mastodon-ன் நிரல் கொண்ட எந்த சர்வரும் GNU Social நிரல் கொண்ட எந்த சர்வருடனும் பேச முடியும். இன்னும் Diaspora நிரல் அதற்கு தயாராகவில்லை. அதற்கான வேலையும் நடைபெற்று வருகிறது. GNU Social தான் முதலில் வந்தது, பிறகு Diaspora வந்தது, அதனுடைய தொடர்ச்சியாக இன்று Mastodon பெரும்பகுதி மக்களை ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது. Mastodon பயன்படுத்தும் அளவில் சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதேப்போல் ஒன்றல்ல பல ஆன்ட்ராய்டு செயலிகளும் அதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.
source – en.wikipedia.org/wiki/File:Mastodon_desktop_web_screenshot.png
இப்போது நீங்கள் செய்ய வேண்டியவையெல்லாம் இதுதான்.
1. instances.social என்ற தளத்திற்கு சென்று உங்கள் விருப்பதிற்கு ஏற்றாற் போல் ஒரு சர்வரைத் தேர்தெடுத்துக்கொள்ளுங்கள் (அல்லது) mastodon.social, mastodon.xyz ஆகிய இரண்டு சர்வரில் ஏதேனும் ஒரு தளத்தில் பதிவு செய்து உங்கள் கணக்கைக் துவங்குகள்.
2. கணக்கைத் தொடங்கி உள்நுழைந்தவுடன் என்னுடைய fediverse அடையாள குறியீடான @prashere@mastodon.social என்று Search செய்து என்னை பின்தொடருங்கள், நானும் உங்களை பின்தொடர்கிறேன்.
3. Tusky என்ற செயலியை உங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியின் நிறுவிக்கொள்ளுங்கள். அதன்மூலம் உங்கள் கைபேசியிலிருந்தும் பயன்படுத்தலாம்.
4. Facebook, Twitter, Whatsapp போன்றவற்றில் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் fediverse அடையாள குறியீட்டை (email address போல முழுமையாக) பகிர்ந்துக்கொண்டு அவர்களையும் அழையுங்கள்.
குறிப்பு: Tusky செயலியை தமிழில் மொழிபெயர்த்தவர் @manimaran@mastodon.xyz
source-https://upload.wikimedia.org/wikipedia/commons/7/70/What_is_Mastodon.webm
இணையத்தில் இன்று ஒரு சர்வரை வாடைக்கு எடுத்து இயக்க வேண்டுமானால் அதற்கு ஆகும் குறைந்தபட்ச செலவு என்பது மாதம் ரூ.250/- முதல் (Scaleway.com-ல்), ரூ. 350/- முதல் (Digitalocean.com-ல்). உங்கள் நண்பர்களோடு சேர்ந்து ஒரு Mastodon சர்வரை உங்களுக்காக இயக்கிக் கொண்டால் 250, 350 ரூபாய் என்பது எளிதாக சமாளித்தவிட முடியும் தானே. ஒரு சர்வரில் எத்தனை நபர்கள் இருக்க இடம் இருக்கிறது என்பதை அந்த சர்வரின் திறன் மற்றும் சேமிப்பு அளவு குறித்தது. உங்கள் வட்டத்தில் நிச்சயம் ஒரு கணினி அல்லது ஐ.டி பொறியியல் படித்த நண்பர் இருப்பார். அவரிடம் இது குறித்து பேசுங்கள்! சுதந்திரம், உரிவை என்பது கொடுக்கப்படுவதல்ல, நாம் எடுத்துக்கொள்வது. நமக்கான உரிமையும், சுதந்திரத்தையும் நாம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றிணைவோம் தோழர்களே #fediverse-ல்.
– பிரசன்ன வெங்கடேஷ், கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் (FSFTN).