மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 1: மென்பொருள் திட்டங்கள் பாதிக்கு மேல் படுதோல்வி அடைகின்றன!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 1

நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் ஒபாமா கேர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் வந்த பிரச்சினைகள் பற்றி செய்திகள் பார்த்திருக்கக்கூடும். இத்திட்டத்தின்படி அமெரிக்காவில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் HealthCare.gov என்ற இணையதளத்தில் பதிவு செய்து தனியார் மருத்துவக் காப்பீடுகளை ஒப்பிட்டு, தேர்வுசெய்து வாங்கவும் மற்றும் அதற்கான அரசாங்க மானியம் பெறவும் இயலும். இந்த திட்டத்துக்கு ஆன மொத்த செலவு ரூபாய் 10,000 கோடி.

 

பிரச்சினைகள் வந்தவுடன் பல நிபுணர்களைக் கலந்து ஆலோசித்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்து சரி செய்துவிட்டார்கள். கொஞ்சம் தாமதம், நிறைய செலவு – ஆனால் வேலை நடக்கிறது. குறைந்த வருமானம் உள்ள சுமார் ஒரு கோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கிறது.

 

ஆனால் இங்கிலாந்தில் National Health Service (NHS) ஆரம்பித்த நோயாளி ஆவண அமைப்புக்கு (patient record system) அந்த பாக்கியம் கிட்டவில்லை. கார்டியன் செய்திப்படி  மக்களுடைய வரிப்பணத்தில் ரூபாய் 100,000 கோடிக்குமேல் செலவு செய்தபின் வேலைக்கு ஆகாது என்று கைவிடப்பட்டது. ஒப்பிட்டுப் பார்க்கப்போனால் சென்னை மெட்ரோ செலவு மதிப்பீடு சுமார் 20,000 கோடி ரூபாய். ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து சென்னை மெட்ரோக்கள் கட்டும் அளவு செலவு. கைவிடப்பட்டபின் மிச்சம் ஒன்றும் இல்லை. இதுதான் விருப்பிற்கேற்ற மென்பொருளின் தனிச்சிறப்பு. நீங்கள் அதை உடன் பயன்படுத்தவில்லை என்றால் ஜீபூம்பா மந்திரம் போட்டதுபோல செய்த செலவெல்லாம் மாயமாய் மறைந்துவிடும்!

 

இம்மாதிரி ஒரு மென்பொருள் திட்டத்தை பெருந்தொகை செலவு செய்தபின் தோல்வியடைந்து கைவிடுவது எப்போதோ நடக்கும் அரிய விதிவிலக்கா? இல்லை! ஆலோசனை நிறுவனம் Standish Group-இடம் 50,000 திட்டங்கள் பற்றிய ஒரு தரவுத்தளம் உள்ளது. இவற்றில் 2003 முதல் 2012 வரை ரூபாய் 60 கோடிக்கு மேல் செலவாகும் 3500 பெரிய மென்பொருள் திட்டங்களில் 42% திட்டங்கள் கைவிடப்பட்டன அல்லது திரும்பவும் முதலில் இருந்து புதிதாகத் தொடங்கப்பட்டன. மற்றும் 51% திட்டங்கள் கெடுவில் முடியவில்லை, செலவு பட்ஜெட்டுக்கு மேல் அல்லது எதிர்பார்த்த அளவில் பயன் தரவில்லை.

Software project failure

இவை அரசாங்க பொதுத்துறைத் திட்டங்கள். மக்களின் வரிப்பணத்தில் லஞ்சம், ஊழல் போலிருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். தனியார் துறையும் இதே லட்சணம் தான்.

  • ஹெர்ஷே நிறுவனம் வட அமெரிக்காவிலும் மற்ற பல நாடுகளிலும் மிகப் பெரிய சாக்லேட் உற்பத்தியாளர். 1996-ல் இந்த நிறுவனம் ஒரு ஆர்டர் எடுத்து நிறைவேற்றும் புதிய அமைப்புக்கு மாற்றம் செய்ய ஆரம்பித்தது. இதன் விளைவாக ஹாலோவீன் திருவிழா நேரத்தில் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள மிட்டாய்களை ஆர்டர் கொடுத்தவர்களுக்கு உறுதி செய்தபடி அனுப்ப இயலவில்லை.

  • கே-மார்ட் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான சில்லறை விற்பனையாளர். இந்த நிறுவனம் 2000-ஆம் ஆண்டில், 8500 கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கும் திட்டத்தைத் தொடங்கியது. அடுத்த ஆண்டே அதன் பராமரிப்பு செலவு மிகவும் அதிகம் என்பதை உணர்ந்து அடுத்து ஒரு விநியோக சங்கிலி மேலாண்மை மென்பொருளை மேம்படுத்த இரண்டாவது திட்டம் 3500 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு முயற்சிகளிலும் பிரச்சினைகள் வந்தன.  2002-ல் திவாலாவதாக கே-மார்ட் செய்த முடிவில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் பெரிய பங்கு உண்டு. பின்னர் இந்த நிறுவனம் 600-க்கும் மேற்பட்ட கடைகளை மூடி, 67,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி சியர்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது.

  • பாஃக்ஸ் மேயர் அமெரிக்காவில் நான்காவது பெரிய மருந்துகள் விநியோக நிறுவனம். 30,000 கோடி ரூபாய் மதிப்பு. 1993-ல் செயல்திறனை அதிகரிக்க ஒரு ERP அமைப்பும் மற்றும் தானியங்கி முறையில் கிடங்கும் அமைக்க 200 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதன் நேரடி விளைவாக 1996-ல் நிறுவனமே திவாலானது.

 

திட்ட மேலாண்மை அல்லது நிரலாக்கம் சரியில்லையா என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி. ஆற்றலுடையவர்கள்தான், மிகவும் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்கள். ஆனால் அனைவரும் சிறந்த முயற்சிகள் செய்தபோதிலும் மென்பொருள் உருவாக்கும் திட்டங்கள் ஏதோ காரணத்தினால் அடிக்கடி பிரச்சினையில் மூழ்குகின்றன.

 

நீங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு எங்கே இருந்து வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பிரம்மாண்டமான தோல்விகளில் இருந்து பாடம் கற்ற பெரும் நிறுவனங்கள் அல்லது அரசுத் துறைகள் அல்லது இது போன்ற பரந்த பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்யும் சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இருந்து என்றுதானே? இல்லை. இதற்கான தீர்வு சில எதிர்பாராத வேறு இடங்களிலிருந்து வந்தது.

 

என்ன தீர்வு, எங்கே இருந்து வந்தது என்று பார்க்கும் முன் நாம் மென்பொருள் உருவாக்கும் திட்டங்கள், குறிப்பாக பெரிய திட்டங்கள் எப்படி நிர்வகிக்கப்பட்டன, இன்றும் நிர்வகிக்கப்படுகின்றன என்பதை இந்த “மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம்” தொடரில் ஆராய்வோம்.

 

உங்களுக்குத் தெரிந்த எந்த மென்பொருள் திட்டத்திலாவது பிரச்சினைகள் வந்ததுண்டா? கீழே உள்ள கருத்துப்பெட்டி மூலம் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மென்பொருள் உருவாக்கும் திட்ட அணுகுமுறைகளில் என்ன குறைபாடு மற்றும் வித்தியாசமாகமாகவும், சிறப்பாகவும்  எப்படி செய்யலாம் என்று என் கூட சேர்ந்து ஆய்வு செய்ய வாருங்கள்.

நன்றி,

இரா. அசோகன்

Ashok Ramachandran <ashokramach@gmail.com>

%d bloggers like this: