[தினம்-ஒரு-கட்டளை] xargs உள்ளீட்டை செயலாக மாற்றும் கட்டளை

By | November 28, 2026

நாள் : 34

தூக்கம் கண்ணிலிருந்து கணினியை மறைத்துக்கொண்டிருந்தது. தூங்கும் நேரத்தில் கணினிப் பயன்பாட்டினைக் குறைக்க முடியாமல் அனைத்து சமூக ஊடகச் செயலிகளையும் கணினியில் மாற்றி மாற்றிப் பயன்படுத்திக்கொண்டிருந்தான். இருப்பினும் தூக்கம் அறவே வர மறுத்தது.

அப்போது முகநூலில் சில பழைய புகைப்படங்களை எடுத்துப் பார்த்தான். மேலும் மேலும் பார்க்க ஒவ்வொரு நினைவுகளும் கண்முன்னே சென்றுவருகின்றன. லினக்ஸ் நிறுவியது, லினக்ஸ் கட்டளைகள் பற்றி எழுதியது எனப் பல்வேறு படங்கள். அப்போது xargs எனும் கட்டளை அடங்கிய புகைப்படம் அவனை நிறுத்தியது.

அதுவரை ஒவ்வொரு கட்டளையும் தனித்தனியாக வேலைகளைச் செய்வதாக எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் ஒரு கட்டளையின் வெளியீட்டினை மற்றொரு கட்டளையின் உள்ளீடாக மாற்றி, பல வேலைகளை ஒரே ஓட்டமாகச் செய்ய முடியும் என்று உணர்த்தியது.

அன்று அந்தப் புகைப்படத்தைப் பார்த்தபோது, அவன் கற்றுக்கொண்டிருந்த லினக்ஸ் பாடங்கள் நினைவுக்கு வந்தன. முதலில் கட்டளைகளைப் புரிந்துகொள்வதே பெரிய சவாலாக இருந்தது. பிறகு அவற்றை இணைத்துப் பயன்படுத்துவது ஒரு புதிய உலகத்தைத் திறந்துவிட்டது. ls, grep, find, xargs என ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தெரிந்திருந்தாலும், அவற்றை ஒன்றாகப் பயன்படுத்தும்போது கிடைக்கும் முடிவுகள் வியப்பை ஏற்படுத்தின.

அந்தப் புகைப்படத்திற்குக் கீழே அவன் எழுதியிருந்த குறிப்புகளையும் படித்துப் பார்த்தான். அப்போது தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கும் புரியவைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியிருந்தான். இன்று அதே கட்டளைகளைப் பயன்படுத்தி எத்தனையோ வேலைகளை எளிதாகச் செய்துகொண்டிருக்கிறான்.

ஒரு சிறிய கட்டளை கற்றுக்கொடுத்த பாடம் பெரியதாக இருந்தது. தெரிந்தவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டால், புதிய வழிகள் தானாகவே பிறக்கும். தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அப்படித்தானே என்று எண்ணிக்கொண்டான்.

கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் வெகுவாகக் கடந்திருந்தது. இன்னும் பல பழைய புகைப்படங்கள் அவனை அழைத்தன. ஆனால் இன்றைக்கு அவற்றுக்கு விடைகொடுத்துவிட்டுப் படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான்.

கணினியை அணைத்துவிட்டு எழுந்தான். தூக்கம் இப்போதாவது வருமா என்ற கேள்வியுடன் படுக்கையை நோக்கி நடந்தான். மனதிற்குள் மட்டும் அந்தப் பழைய நினைவுகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன.

1. xargs – அடிப்படை பயன்பாடு

[hariharan@kaniyam.com]:~$ echo "file1.txt file2.txt file3.txt" | xargs ls -l
  • echo கட்டளை கோப்புப் பெயர்களை வெளியிடும்.

  • | தெரிவானது ஒரு கட்டளையின் வெளியீட்டை அடுத்த கட்டளையின் உள்ளீடாக மாற்றும்.

  • xargs தெரிவானது உள்ளீட்டைப் பெற்று, அதனை அடுத்த கட்டளையின் வாதங்களாக (arguments) மாற்றும்.

  • ls -l தெரிவானது கொடுக்கப்பட்ட கோப்புகளின் விவரங்களைக் காண்பிக்கும்.

2. -n – ஒரு நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாதங்கள்

[hariharan@kaniyam.com]:~$ echo "one two three four" | xargs -n 2 echo
  • -n தெரிவானது ஒரு கட்டளை இயக்கத்திற்குக் கொடுக்க வேண்டிய அதிகபட்ச வாதங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும்.

  • -n 2 தெரிவானது ஒவ்வொரு இயக்கத்திற்கும் இரண்டு வாதங்களை வழங்கும்.

3. -I – உள்ளீட்டிற்கான மாற்றீட்டுச் சொல்

[hariharan@kaniyam.com]:~$ find . -name "*.txt" | xargs -I {} cp {} /tmp/backup/
  • -I தெரிவானது உள்ளீட்டில் கிடைக்கும் ஒவ்வொரு வரியையும் குறிப்பிட்ட மாற்றீட்டுச் சொல்லால் (replacement string) மாற்றும்.

  • {} என்பது கோப்பின் பெயரைக் குறிக்கும்.

  • cp கட்டளையானது ஒவ்வொரு கோப்பையும் /tmp/backup/ அடைவிற்கு நகலெடுக்கும்.

4. -0 – இடைவெளி உள்ள கோப்புப் பெயர்களைக் கையாளுதல்

[hariharan@kaniyam.com]:~$ find . -name "*.txt" -print0 | xargs -0 ls -l
  • -print0 தெரிவானது கோப்புப் பெயர்களுக்கு இடையில் NULL எழுத்தைச் சேர்த்து வெளியிடும்.

  • -0 தெரிவானது NULL எழுத்தைப் பிரிப்பானாகக் கொண்டு உள்ளீட்டைப் பிரிக்கும்.

  • இடைவெளி மற்றும் சிறப்புக் குறியீடுகளைக் கொண்ட கோப்புப் பெயர்களைக் கையாள இது உதவும்.

5. -p – கட்டளையை இயக்குவதற்கு முன் அனுமதி கேட்பது

[hariharan@kaniyam.com]:~$ echo "file1.txt file2.txt" | xargs -p rm
  • -p தெரிவானது ஒவ்வொரு கட்டளையையும் இயக்குவதற்கு முன் பயனரிடம் உறுதிப்படுத்தலைக் கேட்கும்.

  • பயனர் அனுமதி அளித்தால் மட்டுமே கட்டளை இயக்கப்படும்.

6. -t – இயக்கப்படும் கட்டளையைக் காண்பித்தல்

[hariharan@kaniyam.com]:~$ echo "file1.txt file2.txt" | xargs -t ls -l
  • -t தெரிவானது இயக்கப்படவிருக்கும் கட்டளையை முதலில் திரையில் காண்பிக்கும்.

  • கட்டளை இயக்கப்படும்போது என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

7. -r – உள்ளீடு இல்லாதபோது கட்டளையை இயக்காமல் இருப்பது

[hariharan@kaniyam.com]:~$ find . -name "*.log" -print0 | xargs -0 -r rm
  • -r தெரிவானது உள்ளீடு ஏதும் கிடைக்காதபோது கட்டளையை இயக்காமல் தடுக்கும்.

  • குறிப்பாக கோப்புகளை நீக்கும் கட்டளைகளில் தேவையற்ற இயக்கத்தைத் தவிர்க்க உதவும்.

8. -P – பல கட்டளைகளை இணையாக இயக்குதல்

[hariharan@kaniyam.com]:~$ find . -name "*.jpg" -print0 | xargs -0 -n 1 -P 4 convert -resize 800x {} {}.small.jpg

  • -P தெரிவானது ஒரே நேரத்தில் பல கட்டளைகளை இணையாக இயக்க அனுமதிக்கும்.

  • -P 4 தெரிவானது அதிகபட்சம் நான்கு செயல்முறைகளை ஒரே நேரத்தில் இயக்கும்.

  • அதிக எண்ணிக்கையிலான கோப்புகளைச் செயலாக்கும்போது நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.

 

 

 

Leave a Reply