கட்டற்ற முறையில் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கற்க சிறந்த இணையதளம்

By | May 19, 2025

நாம் பல்வேறு விதமான எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை தொடராக பார்த்திருக்கிறோம். மேலும் லாஜிக் கதவுகள் தொடர்பான அடிப்படை தகவல்களையும் சில கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம்.

ஆனால், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் என்பது ஒரு கடல் போன்றது. தற்காலத்தில் இயங்கும் அனைத்து விதமான தொழில்நுட்பங்களுக்கும் ஆற்றல் மையமாக விளங்குவது டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் தான்.

இது தொடர்பாக கற்றுக் கொள்வதற்கு பல்வேறு விதமான இணையதளங்கள் காணப்பட்டாலும் கூட, நுணுக்கமாக தகவல்களை பெறுவதற்கு பல்வேறு இணையதளங்களை தேடி தேடி அலைய வேண்டிய தேவை இருக்கும்.

பெரும்பாலான இணையதளங்கள் கட்டற்ற முறையில் இயங்குவதில்லை. அவை, வழங்கும் தரவுகளும் போதுமானதாக இருப்பதில்லை. இணையத்தில் கிடைக்கும் புத்தகங்களை தேடினாலும் அவற்றில் பக்கம் பக்கமாக புரட்ட வேண்டியிருக்கும். டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் எனும் கடலில்,நீச்சல் அடிப்பதற்கு என ஒரு கட்டற்ற இணையதளம் நம் கண்களில் சிக்கி இருக்கிறது.

learn.circuitverse.org இந்த இணையதளத்தின் மூலம், மிகவும் அடிப்படையான பைனரி செயல்பாடுகள் தொடங்கி மிகவும் சிக்கலான எலக்ட்ரானிக் சேமிப்பக வசதிகள் வரை எளிமையாக அறிந்து கொள்ள முடிகிறது. உலகம் எங்கிலும் இருக்கக்கூடிய, நூற்றுக்கணக்கான கட்டற்ற பங்களிப்பாளர்களின் மூலம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது இந்த இணையதளம்.

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாக அறிந்து கொள்ள விருப்பப்படும் அனைவரும் நிச்சயமாக பார்வையிட வேண்டிய இணையதளம் இது என்பதில் சந்தேகமில்லை. இந்த இணையதளமானது ஆங்கிலத்தில் தற்போது காண கிடைக்கிறது.

மேலும்,இந்த இணையதளத்தில் மெய்நிகர் மின்சுற்று படங்களை கொண்டு மின் சுற்றுகள் எவ்வாறு இயங்குகின்றன என தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற வசதிகளை நான் பிற இணையதளங்களில் பெரும்பாலும் பார்த்ததில்லை.

நானும் ஒரு சில மின் சுற்றுகளை பயன்படுத்தி பார்த்தேன். அதனுடைய புகைப்படங்களையும் இணைத்து இருக்கிறேன்.

மேலும் எளிமையாக புரியும் விதத்திலேயே எழுதப்பட்டுள்ளது. பழைய பாட புத்தக பாணியில், தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்ற குழப்பங்கள் இல்லை. பள்ளி மாணவர்கள் முதல் பல பட்டங்களை பெற்று முடித்தவர்கள் வரை நிச்சயமாக டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கடலின் கரை காணுவதற்கு, உற்ற துணைவனாக இந்த இணையதளம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கட்டற்ற காப்புரிமையோடு வரும் இந்த இணையதளத்தின் தகவல்கள் இணைய புத்தகமாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. மேலும் விவரங்களுக்கு கீழே வழங்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியை அணுகுங்கள்.

மீண்டும் ஒரு கட்டுரையில் சந்திப்போம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com