
எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு வகையிலான தலைப்புகள் குறித்து பார்த்திருக்கிறோம். கடந்த சில வாரங்களாக லாஜிக் கதவுகள் குறித்த தொடர் ஒன்றை தொடங்கியிருந்தேன்.
வாரந்தோறும் லாஜிக் கதவுகளையே எழுதி சற்றே சோர்ந்து போய் விட்டேன். இந்த முறை சற்று மாற்றாக இருக்கட்டும் என்று, led பல்புக்குள் எத்தகைய எலக்ட்ரானிக்ஸ் பொதிந்து இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். அதற்காக லாஜிக் கதவுகள் தொடர் இத்தோடு முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் ! வரும் நாட்களில் லாஜிக் கதவுகள் தொடர்பாகவும் கட்டுரைகள் வெளியாகும்.
தற்காலத்தில் நூறு ரூபாய்க்கு உள்ளாகவே எல்இடி பல்புகளை வாங்கி விட முடியும். குண்டு பல்புகள் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் டங்ஸ்டன் இழை பல்புகளை பார்க்கும் போது, அவற்றிற்குள் பெரியதாக வேறு எதுவும் இருக்காது. கண்ணாடி குடுவை போன்ற அமைப்பு உள்ளே, இரண்டு கம்பிகள் நீட்டிக்கொண்டு இருக்க, நடுவில் மெல்லியதாக டங்ஸ்டன் இழை இருக்கும்.குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வெப்பம் அதிகமாகி, டங்ஸ்டன் இழை விட்டுப் போனால் பல்பை தூக்கி தூர போட வேண்டியதுதான்.

ஆனால், எல் இ டி பல்புகளின் கதை அப்படி கிடையாது ! நீங்கள் led பல்புகளை திறந்து பார்த்தால் ஏதோ தட்டையான வட்ட வடிவில் எல்இடி தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும்.
எல்இடி பல்பின் வெளிச்சம் மற்றும் வாட் திறனுக்கு ஏற்ப இந்த சிறிய எல்இடி விளக்குகளின் எண்ணிக்கை மாறுபடும். அதற்கும் உள்ளே பிரித்துப் பார்த்தால், ஒரு சிறிய எலக்ட்ரானிக் சுற்று காணப்படும்.
அந்த சுற்றுக்குள் சுமார் 45 பொருட்கள் அடங்கி இருக்கும். அவை, எவை?எவை? அவற்றால் என்ன பயன்? என்பதை பற்றிதான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கவிருக்கிறோம்
1) மின்மாற்றி
ரோட்டு ஓரங்களில் மட்டும் தான் டிரான்ஸ்பார்மர் இருக்க வேண்டும் என்று நினைத்துக் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருக்கும் எல்இடி பல்புகளுக்குள்ளும் டிரான்ஸ்பார்மர் இருக்கிறது.
இவற்றின் பயன்பாடு என்னவென்றால் வரக்கூடிய 230 வோல்ட் மின்னழுத்தம் கொண்ட மின்சாரத்தை குறைத்து, 10 அல்லது 15 வோல்ட் மின்னழுத்தமாக(stepdown transformer)மாற்றுவது தான். நேரடியாக 230 வோல்ட் மின்னழுத்தத்தை சிறிய எல்இடி தகடுகளுக்கு வழங்கினால், சில வினாடிகளிலேயே புகைந்து(short circuit) போய்விடும்.
பெரும்பாலும் எல்இடி விளக்குகளை உடைத்துப் பார்க்கும்போது, சற்றே பெரியதாக சதுர வடிவில் இருப்பது தான் மின்மாற்றி என்பதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதை சுற்றி ஏதாவது ஒரு நிறத்தில் டீப் சுற்றப்பட்டு இருக்கும் ,பிரித்துப் பார்க்கும்போது சிறிய அளவில் தாமிர கம்பிகள் இருக்கும். உண்மையில் எல்இடி விளக்கில் இருக்கும் ஓரளவுக்கு விலை உயர்ந்த பொருள் என்றும் இதைக் குறிப்பிடலாம். அதற்கான புகைப்படத்தை கீழே வழங்கி இருக்கிறேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

2) அலை திருத்தி
நம்முடைய ஆரம்ப கால எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளில் பார்த்தது போல, டையோடுகளை கொண்டு மாறுதிசை மின்னோட்டத்தை, நேர்திசை மின்னோட்டமாக மாற்றலாம்(Rectifing AC into DC). பொதுவான எல்இடி விளக்குகள் நேர்திசை மின்னோட்டத்திலேயே(Direct current) இயங்க கூடியது. இதற்கென சிறப்பாக தயாரிக்கப்பட்ட ஒரு மிகச்சிறிய சிப் பயன்படுத்தப்படும். இதைக் கொண்டு அலை திருத்தி பணியானது(Rectification process)மேற்கொள்ளப்படுகிறது. மின்மாற்றியில் இருந்து வரும் வெளியீடானது, இந்த அலை திருத்தியுடன் இணைக்கப்படுகிறது. இந்த அலை திருத்தியின் வெளியீடானது, நேரடியாக led விளக்குகளுக்கு வழங்கப்படும்.
3) மின்னழுத்த தாங்கி
மின்சுற்றுக்குள் அதிகப்படியான மின்னழுத்தம் வரும்போது(High voltage) எளிமையாக சேதமடைந்து விட வாய்ப்பு இருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு செனார் டையோடு அடிப்படையிலான மின்னழுத்த தாங்கிகள் அல்லது மின்னழுத்த ஒழுங்குபடுத்திகள்(voltage protection chips) பயன்படுத்தப்படலாம். இவையும் மிகச் சிறிய சிப்பு வடிவிலேயே காணப்படும். இவற்றைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட அதிகப்படியான மின்னழுத்தம் வரை, ஒரே மின்னழுத்த அளவை நிலை நிறுத்த முடியும்.
இதையும் கடந்து, சிறிய அளவிலான மின் தேக்கிகள் அதாவது கெப்பாசிட்டர்கள் கூட பயன்படுத்தப்படலாம். அதிகப்படியான ஆற்றல் வெளியேற்றத்தை(quick discharge )மேற்கொள்ள இவற்றை பயன்படுத்துவார்கள்.
மிகவும் அடிப்படையான எல்இடி விளக்கின் பயன்பாடு இவ்வளவுதான். இவை அனைத்தையும் விலை மலிவாக தயார் செய்து மக்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் இத்தகைய எல்ஈடி விளக்குகள் செயலிழந்து போவதற்கு அதிகப்படியான மின்னழுத்தம், போதிய பராமரிப்பின்மை மற்றும் நீர்க்கசிவு போன்ற காரணங்கள் தான் முதன்மையானதாக இருக்கும். மேலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எல்இடி விளக்குகளில் இருக்கும் அமில பொருட்கள் கசிய தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இதனால்தான், சற்றே பழைய எல்இடி பல்புகளை உடைத்துப் பார்க்கும்போது ஆங்காங்கே உப்பு திட்டுக்கள் போல காணப்படும். இருந்த போதிலும், தற்காலத்தில் வெளியாகும் எல்இடி பல்புகள் குறைந்தபட்சம் ஓராண்டிற்கு மேல் நீடித்து உழைப்பதை கவனிக்க முடிகிறது. ஆனால் இன்றளவும் கூட 1990 களில் வாங்கிய டங்ஸ்டன் பல்புகள் இன்றும் பயன்பாட்டில் இருப்பதை கவனிக்காமல் இல்லை.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். அடுத்த முறை எல்இடி பல்பு வாங்க போனால், அதில் எந்த அளவிற்கு வாட் திறன் (watt hour)எடுத்துக் கொள்கிறது அதன் லுமென்ஸ் மதிப்பு(lumens value)என்ன என்பதை கவனித்து வாங்குங்கள். எவ்வளவு அதிகமாக லுமேன்ஸ் மதிப்பு இருக்கிறதோ? அப்பொழுதுதான் வெளிச்சம் அதிகமாக இருக்கும். வெறும் வாட் திறனை மட்டும் வைத்து முடிவு செய்துவிட வேண்டாம்.
சரி எல்இடி விளக்குகள் குறித்து எளிமையாக அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்.
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் :
ssktamil.wordpress.com