கல்வி கற்க கூடிய, ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடிய மற்றும் தொழில்நுட்ப தகவல்களின் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு சரியான இணையதளத்தை தேடுவது சிக்கலாகவே அமைகிறது.
பெரும்பாலான இணையதளங்கள், குறைவான தகவல்களை வழங்கி விட்டு மேற்கொண்டு படிப்பதற்கு அதிகப்படியான தொகையினை கேட்கின்றனர்.
அதையும் கடந்து இலவச இணையதளங்களாக இருந்தால், அவை பெரும்பாலும் விளம்பர கூடாரங்களாகவே இருக்கின்றன.
மேலும் அங்கீகரிக்கப்படாத தளங்களில் இருந்து பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்யும்போது, உங்கள் மொபைல் கருவிகளில் வைரஸ் தாக்குதல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
மோசடி நிறைந்த இணைய உலகில், பாதுகாப்பாக,இலவசமாக,கட்டற்ற முறையில் கல்வி கற்பதற்கு! ஏதாவது இணையதளம் இருக்கிறதா? என்று நீங்கள் கேட்டால் அதற்காக வருகிறது libretexts.org/
2008 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் மாணவர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட இந்த இணையதளமானது, தற்பொழுது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தன்னகத்தே கொண்டு இருக்கிறது.
வேதியியல், இயற்பியல், கணிதம், நிர்வாகம், மருத்துவம்,வானியல் சூழலியல் என இந்த இணையதளத்தில் இல்லாத துறைகளே இல்லை.
கல்லூரி மாணவர்களையும் கடந்து, ஆராய்ச்சி மாணவர்கள் வரை இந்த இணையதளமானது பயன்படக்கூடியது.
அமெரிக்காவில் இருக்கக்கூடிய மற்றும் உலகளாவிய 400க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களோடு இணைந்து, இந்த கட்டற்ற இணையதளம் செயல்படுகிறது.
ஆறாயிரத்திற்கு மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் இந்த இணையதளத்திற்கு தங்கள் பங்களிப்பை செய்கிறார்கள்.
விலை உயர்ந்த, கிடைக்காத பல சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளும் இங்கே உங்களுக்கு இலவசமாக எவ்வித பதிப்புரிமையும் இன்றி வழங்கப்படுகிறது.
உண்மையிலேயே மாணவர்களுக்கான ஆகச் சிறந்த தரவுத்தளமாக, இது விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும், இதுபோன்ற பல கல்வி சார்ந்த கட்டற்ற இணையதளங்களை விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
நான் இந்த இணையதளத்தில் கண்ட சில புத்தகங்களின் புகைப்படங்களை மட்டும், கீழே வழங்கி இருக்கிறேன் பார்வையிடுங்கள்.
மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் என்னுடைய மின் மடலுக்கு மடல் இயற்றவும்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com