திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள் நம் அனைவருக்கும் பரிச்சயமான தமிழ் எழுத்தாளர்களுள் முக்கியமானவர். தொடர்ந்து 40 ஆண்டுகள் வரையில் தமிழ் அறிவியலுக்காக இயங்கி வருகிறார். அன்னாரை பற்றி ஏற்கனவே நமது வலைதளத்தில் சிறப்பு நேர்காணல் மற்றும் பங்களிப்புகள் பற்றி தெரிவித்திருந்தோம். கணியத்தின் படைப்பான freetamilebooks தளத்தில் 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களை,கல்வி நோக்கத்தோடு இலவசமாக வெளியிட்டு இருக்கிறார் திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள்.

அன்னாரின் சமீபத்திய சாதனை தான். 25,000 புகைப்படங்களை விக்கிமீடியாவில் இணைத்திருப்பது. அது பற்றி விரிவாக அறிவோம்.
திருமிகு ஏற்காடு இளங்கோ ,இந்தியாவின் ஏற்காட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் அறிவியல் எழுத்தாளர் மற்றும் விக்கிமீடியா பொதுவகத்தின் (Wikimedia Commons) அர்ப்பணிப்புள்ள பங்களிப்பாளர் ஆவார். இவர் இந்தியத் தாவரவியல் மதிப்பாய்வுத் துறையில் (Botanical Survey of India) பணிபுரிந்து 2021 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவர் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று விக்கிமீடியா காமன்ஸ் சமூகத்தில் முதல்முறையாக அறிமுகமானார். அன்றிலிருந்து மிகவும் தீவிரமாக படங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.
இவர் 300க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதி உள்ளார். 122 அறிவியல் சார்ந்த புத்தகங்களை எழுதி முடித்துள்ளார். தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறார். இவர் எழுதிய பழங்கள் மற்றும் செவ்வாய்க் கிரகமும், செவ்வாய் தோஷமும் ஆகிய இரண்டு புத்தகங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக அச்சிட்டு 38,000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஃப்ரீ தமிழ் இபுக்ஸ் (Free Tamil Ebooks.com) சார்பாக இவரது 45 புத்தகங்கள் மின்நூல் வடிவில் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளன. இவை 10 லட்சத்துக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
விக்கிமீடியா
உலகம் முழுவதும் வாழக்கூடிய மக்கள் தகவல்களையும், தரவுகளையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் விக்கிமீடியா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதில் விக்கிமீடியா காமன்ஸில் புகைப் படங்களைப் பதிவேற்றம் செய்யலாம். இந்தப் படங்களை யார் ஒருவரும், நல்ல நோக்கத்திற்காக இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இவர் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை 25,000க்கும் மேற்பட்ட படங்களை விக்கிமீடியா பொதுவகத்திற்கு வழங்கியுள்ளார். இது ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனையாகும். இவர் பயனர் ஏற்காடு இளங்கோ (Category:Files by User:Yercaud-elango) என்ற பெயரில் பதிவேற்றம் செய்துள்ளார். இவரது கோப்பில் 27 துணைப் பகுப்புகளும் உள்ளன. இவருடைய பயனர் பக்கத்தையும், பங்களிப்பையும் விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் நேரடியாகப் பார்க்கலாம்.
படங்கள்
இவர் சேர்வராயன் மலையில் (ஏற்காடு மலை) உள்ள பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல், இயற்கை மற்றும் பழங்கால வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி உள்ளார். சுமார் 16,000 படங்கள் ஏற்காடு மலையில் எடுக்கப்பட்டவை ஆகும். இதில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட தாவரங்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
இவர் 200க்கும் மேற்பட்ட அரிதான, அதிசய, அழிந்து வரும் தாவர இனங்களின் புகைப்படங்களை இணைத்துள்ளார். இவர் சேர்வராயன் மலையில் மட்டுமே வாழக்கக்கூடிய மலைச் சுத்தி மரம் (Monosis shevaroyensis), 200 ஆண்டு பழமையான காட்டு மாமரம், 200 ஆண்டு வயதான நாவல் மரம் மற்றும் 300 ஆண்டுகள் வயதுடைய சோழவேங்கை (Bischofia javanica) போன்ற மரங்களின் படங்களை எடுத்து ஆவணப்படுத்தி உள்ளார். இதில் சோழவேங்கை என்னும் மரம் 60 அடி சுற்றளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இவர் பதிவு செய்த தாவரங்களின் அடிப்படையில் அரிய இயல் தாவரங்கள் (சேர்வராயன் மலை) என்ற நூலை எழுதியுள்ளார். ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மலர்க் கண்காட்சியை 2014 ஆம் ஆண்டு முதல் புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார். இதில் 516 படங்கள் உள்ளன. இந்தப் படங்களின் அடிப்படையில் மலர்க் கண்காட்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஒப்பீடு செய்து பார்க்க முடியும்.



விலங்கியல்
இவர் விலங்குகள், பாம்புகள், பறவைகள், பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், அந்துப் பூச்சிகள் என பல்வேறு உயிரினங்களையும் பதிவு செய்துள்ளார். ஏற்காடு மலையில் மட்டுமே வாழக்கூடிய சேர்வராயன் மலை மண் பாம்பு (Shevaroy Hills Earth Snake), எலியட்ஸ் மண் பாம்பு, ஏற்காடு பல்லி (Yercaud Day Gecko) ஆகியவற்றை ஆவணப்படுத்தி உள்ளார். மேலும் பச்சை ஓணான், 45 சென்டி மீட்டர் நீளம் உள்ள மண்புழு படங்களையும் எடுத்துள்ளார்.


ஏற்காட்டில் காணப்படும் 80 வெவ்வேறு வண்ணத்துப் பூச்சி இனங்களைப் படம் பிடித்து 327 க்கும் மேற்பட்ட படங்களை விக்கிமீடியா காமன்ஸில் சேர்த்துள்ளார். இதன் அடிப்படையில் ஏற்காட்டின் வண்ணச் சிறகிகள் என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். மேலும் 300 இனங்களுக்கும் அதிகமான அந்துப் பூச்சிகளின் (Moths),1378 படங்களைப் பதிவு செய்துள்ளார். இது அந்துப் பூச்சிகளை ஆய்வு செய்வதற்கு உதவியாக அமையும். குறிப்பாக ஏற்காடு மலை (2832) மற்றும் பிற பகுதியில் எடுத்த விலங்கியல் படங்களின் மொத்த எண்ணிக்கை 3528 ஆகும்.

வரலாற்றுச் சின்னங்கள்
புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்திட்டை, கற்குவை, கல்திட்டையுடன் கூடிய கற்குவை, நெடுங்கல், பாண்டியன் குழி, முதுமக்கள் தாழி, நடுகல் என பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்காலச் சின்னங்களைக் கண்டுபிடித்து அதை ஆவணமாக்கியுள்ளார். மேலும் இயற்கை காட்சிகள் மற்றும் சுற்றுலா தளங்கள் ஆகியவற்றையும் பதிவு செய்துள்ளார். இதில் 2,700 படங்கள் இடம் பெற்றுள்ளன.
இவர் சேலம், சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, கொல்கத்தா, அந்தமான் மற்றும் இலங்கை உள்ளிட்ட இடங்களில் உள்ள அருங்காட்சியகங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளார். இத்துடன் இசைக் கருவிகள், கலைப் பொருட்கள், இயற்கை காட்சிகள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் என 4500 படங்களைப் பதிவு செய்துள்ளார்.

தாவரவியல் பங்களிப்பு
இவர் தாவரங்களை வகைப்படுத்தி பதிவேற்றம் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தாவரங்களைத் தேடித் தேடி புகைப்படம் எடுத்து அவற்றை கணினியில் சேமிக்கிறார். பிறகு படங்களுக்கு முறையாக கோப்புகளை (Files) உருவாக்குகிறார். அந்த தாவரங்களுக்கு அறிவியல் பெயர் சூட்டி, அது வளரும் இடத்தைக் குறிப்பிடுகிறார். இவர் தாவரத்தின் அறிவியல் பெயரைக் கண்டறிய பல நிமிடங்கள், மணி நேரங்கள், பல நாட்கள், ஏன் சில மாதங்கள் மற்றும் ஆண்டுகள் கூட செலவழிக்கிறார்கள்.

இவை போன்ற கோப்புகளைப் பதிவேற்றம் செய்வதற்கு முன் இது தனது சொந்தப் பணி மற்றும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற உறுதி அளிக்க வேண்டும். பிறகு தாவரத்தின் குடும்பப் பெயர், ஆங்கிலப் பெயர், தமிழ்ப் பெயர் மற்றும் தாவரத்தைப் பற்றிய அறிவியல் விளக்கம் ஆகியவற்றை எழுத வேண்டும். அதன் பின்னர் பகுப்பு (Category) மற்றும் துணைப்பகுப்பு (Subcategory) ஆகியவற்றில் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். படங்களைப் பதிவேற்றம் செய்ய 15 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இப்படி ஒரு படத்தை பதிவேற்றம் செய்ய 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும். பொதுவாக இணைய தளம் வேகமாக இல்லை என்றால் பதிவேற்றம் செய்வதில் கால தாமதம் ஆகும். சில சமயம் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே பதிவு செய்ய வேண்டி இருக்கும்.
ஏற்காடு மலை, சித்தேரி, ஏலகிரி, களக்காடு, முண்டந்துறை, கோயம்புத்தூர், சென்னை, கேரளா, பெங்களூரு, ஜோத்பூர், கொல்கத்தா, அந்தமான் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் எடுத்த 13,106 தாவரப் படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார். இதில் 1240 பேரினங்கள், 2952 இனங்கள், 9 துணை இனங்கள், 209 வகைகள், 217 கலப்பினங்கள், 315 சாகுபடி இனங்கள் மற்றும் 45 பூஞ்சை இனங்கள் இடம் பெற்றுள்ளன. இது தாவரவியலுக்கு செய்யப்பட்ட ஒரு முக்கியமான சேவையாகும்.
அங்கீகாரம்
இவர் தாவர இனங்களை அடையாளம் காண்பதில் அதிக நேரத்தைச் செலவழித்து, பின்னர் அவற்றை விக்கிமீடியா காமன்ஸில் பதிவேற்றுகிறார். ஏற்காட்டில் உள்ள இயற்கை மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்த அவரது விரிவான ஆவணப்படுத்தல் பணிக்காக 2018 ஆம் ஆண்டில் விக்கிமீடியா அறக்கட்டளையால் பாராட்டப்பட்டார். இந்தியாவின் விக்கிமீடியா நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.கிருஷ்ண சைதன்ய வெலகா (Krishna Chaitanya Velaga) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த சில சிறப்பு விக்கிமீடியா தன்னார்வலர்களைச் சந்தியுங்கள் என்ற கட்டுரையை 2018 ஆம் ஆண்டு ஜூலை 3 அன்று எழுதினார். அந்தக் கட்டுரையில் ஏற்காடு இளங்கோ ஒரு சிறந்த விக்கிமீடியன் எனச் சிறப்பித்துள்ளார்.

இவர் தொடர்ந்து விக்கிமீடியாவிற்கு பங்களிப்பு செய்து வருகிறார். இவர் விக்கிபீடியா நூலகத்திற்கு தகுதியானவர் என பாராட்டி 2023 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று விக்கிமீடியா வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளது.
ஆய்வுக் கட்டுரைகள்
இவரால் பதிவு செய்யப்பட்ட தாவரங்களின் புகைப்படங்கள் தாவரவியல் பயிலும் மாணவர்கள் மற்றும் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக உள்ளன. 100 க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இவர் பதிவு செய்த படங்களைப் பயன்படுத்தி உள்ளனர். மேலும் உலகளவில் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அறிவியல் கட்டுரைகளில் இந்தப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
சாதனை
இவர் புகைப்படங்களை எடுப்பதற்காக பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கிறார். இதற்காக தனது சொந்தப் பணத்தையும் செலவிடுகிறார். அரசுப் பணி, எழுத்துப் பணி, அறிவியல் இயக்கப் பணி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பொது நலச் சேவை ஆகியவற்றுக்கு இடையே விக்கிமீடியா காமன்ஸில் படங்களை ஆவணப்படுத்தும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவர் விக்கிமீடியா காமன்ஸில் “25,000”க்கும் மேற்பட்ட படங்களைப் பதிவேற்றம் செய்தது என்பது ஒரு மதிப்புமிக்க சாதனையாகக் கருதப்படுகிறது.
கணியம் அறக்கட்டளையின் சார்பாக ஏற்காடு இளங்கோ அவர்களின் அரும் பணி தொடர வாழ்த்துக்கள்.
கட்டுரையாளர்.
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
அறிவியல் எழுத்தாளர்.