அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களுடன் ஒரு நேர்காணல்

நமது கணியம் இணையதளத்தில், விக்கிமூல பங்களிப்பாளர்கள் பலர் குறித்தும், கட்டுரைகள் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம்.

சமீபத்தில் கூட, விக்கி மூல பங்களிப்பாளர் திரு.தாஹா புகாரி அவர்களிடம், எழுத்து வடிவில் ஒரு நேர்காணலையும் மேற்கொண்டு இருந்தோம்.

அந்த வகையில், இன்றைக்கு நாம் நேர்காணல் செய்யவிருக்கக் கூடிய விக்கி மூல பங்களிப்பாளர்; வெறும் விக்கி மூலதோடு தன்னுடைய பணியை நிறைவு செய்துவிடவில்லை.

விக்கி மூலத்திற்கு முன்பாகவே சுமார் 25 ஆண்டுகளாக, அறிவியல் எழுத்தாளராக அறியப்படக்கூடியவர் ஏற்காடு இளங்கோ அவர்கள்.

1992 யிலேயே “துளிர்” எனப்படும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்படக்கூடிய, அறிவியல் மாத இதழில் தனது முதல் கட்டுரையை   எழுதிய திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள். தற்போதும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

1986 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திலும் செயலாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பின்பாக, கடந்த 25 ஆண்டுகள் அறிவியல் எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.

சில புத்தகங்களை வெளியிட்ட எழுத்தாளர்களே! தங்களை மிகப்பெரிய எழுத்தாளர்கள் என பறைசாற்றி கொண்டிருக்கும் இந்த காலத்தில், 117 ஆவது புத்தகத்தை கடந்த வாரம் வெளியிட்டு சாதனை புரிந்திருக்கிறார் ஏற்காடு இளங்கோ அவர்கள்.

புத்தகங்கள் என்றால், ஏதோ சில பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறு புத்தகங்கள் என நினைத்து விடாதீர்கள்! பெரும்பாலும், ஏற்காடு இளங்கோ அவர்கள் எழுதக்கூடிய புத்தகங்கள் பெரும்பாலும், 100 பக்கங்களை கடந்தவை ஆகவே இருக்கும்.

குறிப்பாக, ஏற்காடு மலை(ஏற்காடு வரலாறு பண்பாடும்) பற்றிய அவர் எழுதிய நூறாவது புத்தகம் 1240 பக்கங்களை உள்ளடக்கிய, மிகப்பெரிய ஆவண சேகரமாக அறியப்படுகிறது.

விண்வெளி வீரர்கள், சிறந்த அறிவியலாளர்கள்,சாதனை பெண்மணிகள், வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் நிகழ்வுகள்,தாவரங்கள், விலங்குகள், ஊர்வன, பறப்பன என்று ஏற்காடு இளங்கோ அவர்கள் எழுதாத தலைப்புகளே இல்லை! என குறிப்பிடலாம்.

தற்பொழுது வரை, கணிதத்தில் மட்டும் அவர் புத்தகத்தை வெளியிடவில்லை என தெரிவித்திருந்தார்.

வரும் நாட்களில் அதற்காகவும் ஒரு புத்தகத்தை எழுத தகவல்களை தயார் செய்து வருவதாக நேற்று என்னிடம் தெரிவித்தார்.

117 புத்தகங்களில், சுமார் 44 புத்தகங்கள் வரை கணியம் அறக்கட்டளையின் இலவச புத்தக இணையதளமான ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் டாட் காம்(free tamil  ebooks.com) தளத்தில், உலக வாசகர்களுக்காக இலவசமாக வெளியிட்டு இருக்கிறார்.

மேலும், இந்த புத்தகங்கள் 10,00,000 தடவைக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருப்பதையும் கவனிக்க முடிகிறது.

மேலும், அவருடைய புத்தகங்களில் 110 புத்தகங்கள் வரை அச்சுப்பிரதியாக வெளியாகி இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. மீதம் இருக்கும் புத்தகங்களும் விரைவில் அச்சில் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

117 புத்தகங்களுக்கே ஆச்சரியப்பட்டால், விக்கி மூலத்தில் சுமார் 23,000 க்கும் அதிகமான புகைப்படங்களை தற்பொழுது வரை இணைத்திருக்கிறார் ஏற்காடு இளங்கோ அவர்கள்.

அரிய வகையிலான பல்லி,பாம்பு மற்றும் சில மரங்களும் தாவரங்களும் கூட இதில் அடங்கும்.

வெறும் 23000+ புகைப்படங்கள் மட்டுமல்ல! அந்த இனத்தின் பேரினம், சிற்றினம் மற்றும் அது குறித்து சில வரிகளான தகவல் என ஒவ்வொரு புகைப்படத்திற்கும், சுமார் 10 நிமிடங்கள் வரை தேவைப்படுவதாக என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

பிரதிலிபி என்னும் இணையதளத்தில், ஏற்காடு இளங்கோ அவர்களின், 131 படைப்புகள் வெளிவந்துள்ளன. இதுவரை 22885 நபர்கள் படித்துள்ளனர்.

பேளுக்குறிச்சி எனும் மிகச் சிறிய கிராமத்தில் பிறந்த, ஏற்காடு இளங்கோ அவர்கள்; தாவரவியலில் இளங்கலை பட்டமும், மக்கள் இயல் படிப்பில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, தன்னுடைய 24 ஆவது வயதிலேயே தாவரவியல் மதிப்பாய்வு துறையில் பணியாற்றத் தொடங்கி, சுமார் 36 ஆண்டு காலம் அந்த துறையில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.

1985 ஆம் ஆண்டு முதல் ஏற்காடு பகுதியில் வசித்து வருகிறார்.

எவ்வாறு எழுத ஆரம்பித்தேன்? எப்படி விக்கி மூலத்தின் அறிமுகம் கிடைத்தது? கணியம் அறக்கட்டளையோடு இணைந்து பணியாற்றத் தொடங்கியது!.

மற்றும் பல இனிமையான, மதிப்புமிக்க தகவல்களை என் உடனான நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் ஏற்காடு இளங்கோ அவர்கள்.

அந்த நேர்காணலின் இணைப்பை கீழே வழங்குகிறேன்.

Spotify

Youtube

மேலும், இந்த நேர்காணலுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த எங்கள் கணியம் அறக்கட்டளையின் பொறுப்பாசிரியர் திரு. த.ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற தலைச்சிறந்த ஆளுமைகளை நோக்கிய, நமது பயணம் தொடரும்….

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

%d bloggers like this: